உலகம் முழுவதும் கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர்த்து பல மாநிலங்கள் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கடந்த நான்கு நாட்களாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நேற்றிரவுடன் முடிவடைந்து சாதாரனமான ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.
இதனால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இந்தியா முழுவதும் முடங்கியுள்ளது. எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்று தெரியவில்லை. கரோனா பரவல் முடிந்தாலும் சமூக இடைவெளி என்பதை நீண்ட நாட்களுக்குத் தொடர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதனிடையே ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் ட்விட்டரில் முதலமைச்சர் பழனிசாமிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பு. திரைப்படத் துறையில் பல கோடி முதலீடு முடங்கிவிட்டது. திரைப்படங்கள்/ தொலைக்காட்சித் தொடர்கள், இறுதிக்கட்டப் பணிகள் தொடர சமூக இடைவெளி முறையில் தளர்வு அளிக்கப் பரிசீலனை செய்ய வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.