ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், உலகமெங்கும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர். ஜானி டெப் என்றால் தெரியாதவர்களுக்கு கூட ஜாக் ஸ்பேரோ என்றால் தெரியும்.
அந்தளவிற்கு, 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத் தொடர்களில், ஜாக் ஸ்பேரோவாக நடித்திருப்பார் என்பதை விட வாழ்ந்திருப்பார் ஜானி டெப்.
தனது முதல் மனைவியை 1985 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த ஜானி டெப், 2015 ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த உறவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இரண்டே வருடங்களில், ஜானி டெப்பும் அம்பெர் ஹெர்டும் விவாகரத்துச் செய்து பிரிந்தனர். அதைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், அம்பெர் ஹெர்ட், தன்னை ஜானி டெப் கடுமையாக தாக்கியதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டார். தான் அம்பெர் ஹெர்ட்டை தாக்கவில்லை எனக் கூறிய ஜானி டெப், தன்னைப் பற்றிய பொய்யான புகாரால், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்திலிருந்து நீக்கப்பட்டேன். எனவே தனக்கு 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வேண்டும் எனக்கோரி அம்பெர் ஹெர்ட் மீது வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலையில், 'தி சன்' என்ற பத்திரிகை, ஜானி டெப் தனது மனைவியை தாக்கினர் எனக் குற்றம் சாட்டியிருந்தது. இதனை எதிர்த்து ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில், தி சன் பத்திரிகையின் மீது நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிமன்றம், தி சன் பத்திரிகைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தி சன் பத்திரிகை எழுதிய குற்றச்சாட்டில் உண்மை உள்ளது எனத் தீர்ப்பளித்தது. மனைவியைத் துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டு உறுதியானதால், தற்போது, அவர் நடிப்பதாக இருந்த 'ஃபாண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். லண்டன் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள ஜானி டெப்ப்பிற்கு, ஆதரவாக ரசிகர்கள் #JusticeForJohnnyDepp என்ற ஹஷ்டேக் ட்ரெண்டாக்கினார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டபோதிலும், தயாரிப்பு நிறுவனம் முழு சம்பளத்தை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காட்சியில்தான் ஜானி டெப் இதுவரை நடித்திருக்கிறார். ஜானி டெப்பின் முழு சம்பளம் 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 74 கோடி. சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்தச் செய்தியைப் பார்க்கும் ரசிகர்கள் 10 நிமிடத்திற்கு இவ்வளவு சம்பளமா என்று வியக்கின்றனர்.