இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவித்த படக்குழு, படத்தின் டீசரையும் வெளியிட்டது. இந்த நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தமிழில் உருவாகிவுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பல தமிழ்த் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும், அவை இத்தனை மொழிகளில் டப் செய்யப்பட்டதில்லை. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.