இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் சமீபத்தில் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியதோடு, பொது வெளியில் விவாதத்திற்கும் உள்ளானது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். இளையராஜா வரும் ஜூன் 2ஆம் தேதி தனது 79 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக இளையராஜா கலந்து கொள்ளும் கோவை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் இளையராஜா ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.