'மீசையை முறுக்கு' படத்துக்குப் பிறகு நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. இண்டி ரிபெல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் நடிகர் ஹிப்ஹாப் ஆதி பேசியபோது...
"நிறைய பேருக்கு இது முதல் மேடை. அவர்கள் உணர்ச்சிகரமாக பேசியது படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி மிகப் பிரம்மாண்டமாக ‘அன்பறிவு’ படத்தை எடுத்தார்கள். பொதுமுடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தால்தான் இந்தக் கதையை எழுதினேன். இந்தப் படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார். ஆனால், நான் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தேன். இந்தப் படத்திற்கு புதுமுகங்கள்தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது. இந்தப் படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வார்கள். சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு இந்தப் படத்தை தயாரித்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் இண்டி உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். துணிந்தே ரிஸ்க் எடுத்துள்ளோம்.
இரண்டே லென்ஸில் படத்தை ஒளிப்பதிவு செய்த அர்ஜூன்ராஜா அவர்களுக்கு நன்றி. கோல்ட் மெடல் வாங்கிய படத்தொகுப்பாளர் தீபக் எஸ். துவாரகநாத் அட்டகாசமாக செய்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்ட் மிக முக்கியமானது. அதை அட்டகாசமாக செய்து தந்த வாசுதேவனுக்கு நன்றி. தமிழ் தெரிந்த ஹீரோயின். அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண். ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம். நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தைக் கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம்தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி" என்றார்.