சில நாட்களுக்கு முன்பு வெளியான நாச்சியார் டிரைலரில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஜோதிகா பேசும் வசனம் ஒன்று ஏற்கனவே சர்ச்சை ஏற்படுத்தியது. அந்த வசனத்திற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது இப்படத்தில் வரும் மற்றொரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் பிரசார அணி தலைவர் காளிகுமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்த படத்தின் வசனத்திற்கெதிராக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்..."பாலா இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகை ஜோதிகா ஒரு காட்சியில் பேசும் வசனத்தில் கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறுகிறார். இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதத்திலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய வசனத்தை உடனடியாக நீக்க வேண்டும். நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும். பாலா மீதும், ஜோதிகா மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.