கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழகம் முழுவதும் 47 நாட்களாக கலப்பை மக்கள் இயக்கம் உதவி வருகிறது. இந்த நேரத்தில் கேளம்பாக்கம், படூர், துரைப்பாக்கம் பகுதிகளில் வேலையில்லாமல் தவிக்கும் 130 முடிதிருத்தும் பணியாளர்களுக்கும், அழகு நிலையம் நடத்தும் பெண்களுக்கும் இன்று கலப்பை மக்கள் இயக்கம் அரிசி பைகள் வழங்கியது. கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் பிடி செல்வகுமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் அரிசி மூட்டைகள் வழங்கினார்கள். இதுகுறித்து கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பிடி செல்வகுமார் பேசியபோது...
"நாட்டில் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு முடிதிருத்தும் பணியாளர்கள் உதவியாக இருந்து வருகிறார்கள். அன்றாடம் வாடகை கொடுத்து கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் நேச்சுரல்ஸ் பியூட்டி என்ற மிகப் பெரிய நிறுவனம் கோடி கணக்கில் வருமானவரி கட்டி வருகிறது. அதன் நிறுவனத் தலைவரே நாங்கள் மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கிறோம், எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். மிகப்பெரிய நிறுவனங்களே இப்படிக் கேட்கும் போது அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள். நாங்கள் உதவி செய்வது பெரிய விஷயம் இல்லை. மற்றவர்களிடம் கையேந்தி வாழ்வதைவிட உழைத்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள் இந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள்.
உடனடியாக பாதுகாப்பு அளித்து கடைகளைத் திறந்து அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். இதை உடனடியாகச் செய்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். ஏழைகளிடம் பணம் புழங்க தொழிலதிபர்களுக்கு தளர்வு. அதுமட்டுமில்லாமல் விதிமுறை மீறல் இன்னும் தளர்த்தப் படாமல் இருப்பதால் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தங்களுடைய பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். மாவட்டத்தை விட்டு மற்ற மாவட்டங்களில் தொழில் செய்துவரும் கட்டிடத் தொழிலாளர்கள் விவசாயம் செய்பவர்கள் உடனடியாக அவர்களுக்கு சிறப்புப் பாஸ் அனுமதி கொடுத்து அவர்களின் தொழிலையும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால்தான் பல தொழிலாளர்கள் வாழமுடியும். எவ்வளவுதான் இன்று கடைகளை எல்லாம் திறக்க சொன்னாலும் மக்களிடம் வாங்குவதற்குப் பணம் இல்லாமல் திணறி வருகிறார்கள்.
மாவட்டம் விட்டு மாவட்டம் பத்திரப்பதிவிற்கு உதவுங்கள். உடனடியாக பத்திரப்பதிவு செய்ய மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி கொடுத்தால் அரசுக்கு 10% வருமானம் வரும். ஏனென்றால் பத்திரப்பதிவு தனிநபராகத் தான் சென்று பதிவு செய்வார்கள். அதனால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. ஏற்கனவே கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் பசியால் யாரும் இறந்துவிடக் கூடாது என்ற ஒரு கோரிக்கையைத் தொடக்கத்திலிருந்தே வைத்துக்கொண்டு அரிசி மற்றும் மளிகைச் சாமான்கள் வழங்கி உதவி செய்து வருகிறோம். நேற்றைய தினம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விவசாயி பசியால் தன்னுடைய மூன்று மகள்களோடு தற்கொலை செய்து கொண்டார். இது கொடுமையிலும் கொடுமை உடனடியாக அரசு இவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எங்களுடைய பணிவான வேண்டுகோள்'' என்றார்.
அதன்பின்பு காஞ்சிபுரம் மாவட்ட சவர சங்கச் செயலாளர் ருக்மாங்கதன் பேசியபோது... ''இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிட்டத்தட்ட 55 நாட்களாக மிகவும் வறுமையில் தவித்தோம். எல்லா இடங்களுக்கும் தேடிச்சென்று கலப்பை மக்கள் இயக்கம் உதவுவது போல் எங்களுக்கும் தேடி வந்து உதவினார்கள். இந்த உதவி எங்களுக்குச் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட உதவி. எங்கள் வாழ்நாள் முழுவதும் கலப்பை மக்கள் இயக்கத்தையும், நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்களையும் மறக்கமாட்டோம்'' என்று பேசினார். இந்த நிகழ்விற்கு தங்கபாண்டியன், வேண்டரசி ஆகியோர் உதவியாக இருந்தார்கள். அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து மக்கள் இன்முகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்டார்கள்.