Skip to main content

"இந்தப் படம் கிறிஸ்தவர்களை பெருமைப்படுத்தியுள்ளது; அதே நேரத்தில்..." 'ருத்ர தாண்டவம்' பார்த்த எச்.ராஜா பேட்டி!

 

h raja

 

மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், பட ரிலீஸ் தொடர்பான வேலைகளில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது. அதேவேளையில், பத்திரிகையாளர் சந்திப்பு, முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு திரையிடல் என படத்தை விளம்பரப்படுத்துதல் வேலைகளிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இன்று திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் பா.ஜ.க பிரமுகர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் ருத்ர தாண்டவம் திரைப்படத்தை பார்த்தனர்.

 

படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, "மோகன் ஜி இயக்கியுள்ள உண்மையான ருத்ரதாண்டவத்தை பார்த்தோம். சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. மக்களுக்குப் பல உண்மைகளைப் புரியச் செய்து நல்வழிப்படுத்துவதற்கான முயற்சியாக இந்தப் படம் உள்ளது. 18 வயசுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் படிப்பில்தான் கவனம் செலுத்தவேண்டும்; காதலில் அல்ல. அது ஒரு பாடமாக இந்த படத்தில் உள்ளது.

 

இன்றைக்கு இளைஞர்கள் போதையால் எவ்வளவு சீரழிந்து போகிறார்கள் என்பது பற்றியும் இப்படம் பேசுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் தெருவிற்குத் தெரு முக்கோண விளம்பரம் பார்த்தோம் ஆனால் இன்னைக்கு செயற்கை கருத்தரிப்பு மையங்களை பார்க்கிறோம். இப்படியே சென்றால் நாளை தமிழன் தன்னுடைய மனைவிக்கு தன்னால் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாது. இதற்கு முக்கிய காரணம் போதை கலாச்சாரம். அதை இளைஞர்களுக்கு புரியச் செய்யும் நல்ல படமாக இந்த படம் இருக்கும். மதம் மாறியவர்கள் இந்து மத சாதிப்பெயரை பயன்படுத்த முடியாது என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இதை 10 ஆண்டுகளாக என்னை மாதிரி ஆட்கள் தெருவிற்கு தெரு கத்தினாலும் குறைந்த ஆட்களிடமே சென்று சேர்ந்தது. இந்தப் படத்தின் மூலமாக அந்தக் கருத்து பெரிய அளவில் சென்று சேரும். 

 

பி.சி.ஆர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களையும் தோலுரித்துக் காட்டி உள்ளனர். இந்தப்படம் எந்த மதத்தையும், ஜாதியையும் இழிவாகப் பேசவில்லை சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல படத்தை மோகன் ஜியும் அவரது குழுவினரும் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் மோகன்ஜி தனது தேசிய கடமையைச் செய்துள்ளார். என் மனமார்ந்த நன்றியை அவருக்குச் சமர்ப்பிக்கிறேன். பிரச்சார நடையில் இல்லாமல் படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை விறுவிறுப்பாகக் கொண்டுசென்றுள்ளார். திரௌபதியைப்போலப் பல மடங்கு இந்தப் படத்தை மக்கள் வரவேற்பார்கள். இந்தப்படம் கிறிஸ்தவர்களைப் பெருமைப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஜாதி பிரச்சனையாக மாற்றி வாக்கு வங்கி அரசியல் செய்பவர்களை இந்தப் படம் எச்சரித்துள்ளது. சிறந்த பாடமாக இந்தப் படம் வந்துள்ளது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்