Skip to main content

"இதுவரை படங்களில் காட்டாத கோயம்புத்தூர் வட்டார வழக்கு இந்தப் படத்தில் இருக்கும்" - நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேச்சு!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

gv prakash

 

அறிமுக இயக்குநர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், திவ்யா பாரதி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சிலர்’ திரைப்படம், வரும் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (29.11.2021) மாலை சென்னையில் நடைபெற்றது. ஜி.வி. பிரகாஷ், திவ்யா பாரதி, தயாரிப்பாளர் டில்லி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

 

ad

 

இந்த நிகழ்வில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், "இவ்வளவு மழைக்கு இடையிலும், இந்த நிகழ்வில் வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவைப் பற்றி பேசும் படமாக ‘பேச்சிலர்’ உருவாகியுள்ளது. ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையேயான உறவைப் பற்றி வெவ்வேறு காலகட்டத்தில் ஸ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் எனப் பலர் படம் எடுத்துள்ளனர். லவ் என்ற விஷயத்தை இந்த தலைமுறைக்கேற்ப வித்தியாசமாக இந்தப் படம் பேசும். வெறும் காமெடி மற்றும் கமர்ஷியல் படமாக இல்லாமல் வலுவான எமோஷன்ஸ் நிறைந்த படமாகவும் ‘பேச்சிலர்’ இருக்கும். என்னுடைய வழக்கமான பாடி லாங்குவேஜை மாற்றி நடிக்க இந்தப் படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. 

 

தயாரிப்பாளர் டில்லி சாருடன் இணைந்து அடுத்தடுத்து படங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறேன். நிறைய அறிமுக இயக்குநர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆர்.பி. சௌத்ரி சாருக்குப் பிறகு அறிமுக இயக்குநர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுப்பது டில்லி பாபு சார்தான். இந்தப் படத்தின் இயக்குநர் சதீஸ் தனக்கென்று ஒரு திரைமொழியை வைத்திருக்கிறார். அவர் எதிர்காலத்தில் பெரிய இயக்குநராக வருவார் என்று நினைக்கிறேன். அவருக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. ஆனால், இந்தப் படத்தில் திவ்யாவிற்கு கிடைத்துள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது வேலையை சிறப்பாகச் செய்துள்ளனர். கோயம்புத்தூர் வட்டார வழக்கு என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சினிமாவில் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உடைத்து, சமகாலத்து கோயம்புத்தூர் வட்டார வழக்கு இந்தப் படத்தில் இருக்கும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்