இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது. 50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில், பரத்பாலா இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.
இந்நிலையில் அதேபோல் வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது. தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும், காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது. இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.