இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. தற்போதைய சூழலை எதிர்கொள்ள பெருமளவில் ஏற்பட்டுள்ள நிதித்தேவையை சமாளிக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் அரசுக்கு உதவுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து, பொதுமக்கள், தொழில்நிறுவனங்கள், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்துவருகின்றனர்.
அந்த வகையில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு நிதி திரட்டும் நோக்கிலும், நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு உதவும் வகையிலும் இசையமைப்பாளர் ஜிப்ரான் புதிய முயற்சியை எடுத்துள்ளார். அவரது இசையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான சாஹோ படத்தின் நாயகன் தீம் இசையை ஏலத்தில்விட்டு அதன் மூலம் நிதி திரட்டவுள்ளார். இந்த தீம் இசைதான் படத்திற்காக முதலில் இசையமைக்கப்பட்டதாகவும், பின்னர் படத்தின் தன்மை கருதி இதை படத்தில் பயன்படுத்தமுடியவில்லை என்று இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கான ஏலத்தை NFT (Non-Fungible Token) என்ற முறையில் நடத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதல் முறையாக இசைத்துறையில் NFT மூலம் நடத்தப்படும் இந்த ஏலமானது, வரும் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் கிடைக்கும் தொகையில் 50 சதவிகிதம் முதல்வரின் நிவாரண நிதிக்கும், எஞ்சிய 50 சதவிகிதம் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. ஜிப்ரானின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.