தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலமடைந்த ராகவா லாரன்ஸ், 'முனி' படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 'முனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'காஞ்சனா', 'காஞ்சனா 2', 'காஞ்சனா 3' உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஹாரர் காமெடி ஜானரில் வெளியான இப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, ராகவா லாரன்ஸின் பேய் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 'ருத்ரன்' மற்றும் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கிறார்.
'ருத்ரன்', இப்படத்தை 'ஃபைவ் ஸ்டார் க்ரியேக்ஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கிவருகிறார். தயாரிப்பாளராக இருந்த கதிரேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'ருத்ரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரில் ராகவா லாரன்ஸ், வில்லன்களை அடித்து விட்டு முகத்தில் ரத்த காயத்துடன் கெத்தாக நிற்பது போல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
Presenting the first look of #Rudhran!
I need all your blessings 🙏🏼 @5starcreationss #Rudhranfirstlook pic.twitter.com/5PfFJDgzqJ— Raghava Lawrence (@offl_Lawrence) June 23, 2022