Skip to main content

நவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
gbdsghsr

 

தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், தற்போது வெளியாகி வைரலாகிவரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தில் 9 வித்தியாசமான கதைக்களங்களுள் இதுவரை பார்த்திராத கோணத்தில் பெண் கதாபாத்திரங்கள் ஆச்சரியப்படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை பின் வருமாறு...

 

எதிரி (கருணை) கதையில் ரேவதி கதாபாத்திரமான "சாவித்திரி"

 

"சாவித்திரி" பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் முதிர்வு பெற்று காட்சிக்குக் காட்சி மாறிக்கொண்டிருக்கும், ரசிகர்கள் பார்க்க ஏங்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். சாவித்திரி ஒரு மங்களகரமான பக்தி கொண்ட பெண் கதாபாத்திரம். படத்தில் துக்கத்திற்கும் அறத்திற்கும் இடையில்  தவித்து, சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு பாத்திரம் ஆகும். 

 

இண்மை (பயம்) கதையில் பார்வதி கதாபாத்திரமான "வஹிதா'

 

நடிகை பார்வதி இந்திய சினிமாவில் பல மாறுபட்ட துணிச்சலான பாத்திரங்களில் நடித்ததன் மூலம், உலக அளவில் புகழைக் குவித்தவர். இப்படத்தில் ஒரு எளிமையான குடும்பத்திலிருந்து வந்து, பணத்திற்காகவும் சொத்திற்காகவும், வயதான பணக்காரரைத் திருமணம் செய்து கொண்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல உண்மைகளை தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கை அவரது செயல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. 

 

கிடார் கம்பி மேலே நின்று (காதல்) கதையில் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாபாத்திரமான “நேத்ரா” 

 

நேத்ரா ஒரு மிகச்சிறந்த பாடகி. நவநாகரீக பெண். தனக்குச் சரியெனப் பட்டதைத் துணிந்து செய்யும் கதாபாத்திரம். தனக்கு வேண்டியதைத் தேடி அடையும் பெண். சுதந்திரமாக இயங்கும் அனைவரும் விரும்பும் நவீனம் பெண்.

 

பாயாசம் (வெறுப்பு) கதையில் அதிதி பாலன் கதாபாத்திரமான "பாக்யலட்சுமி"

 

மிக இளம் வயதில் விதவையானதால், சமூகம் அவளிடம் பாரபட்சம் காட்டும் நடவடிக்கைகளால், மனதளவில் அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண். அவள் நேர்மறை எண்ணங்களால், அவள் முன் உள்ள தடைகளைக் கடந்து, நம் அனைவருக்கும் முன்னுதாரண பெண்ணாக, நம் கண்களில் நீர் பொங்கும் கடின வாழ்க்கையைக் கடந்து, சாதித்துக் காட்டும் "பாக்யலட்சுமி" கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார்.

 

பாயாசம் (வெறுப்பு) கதையில் ரோகிணி  கதாபாத்திரமான "வாலம்பா"

 

இறந்த முதிய கணவனான சமந்து உடைய மனைவி கதாபாத்திரம் தான் வாலம்பா. அறத்தின் நெறியில் நின்று வாழும் பெண். சரி தவறுகளை தன் வாழ்வில் தான் நம்பும் அறத்தின் வழி முடிவு செய்யும் பெண். இந்த கதாபாத்திரத்தில் ரோகிணி நடித்துள்ளார்.

 

ரௌத்திரம் (கோபம்) கதையில் ரித்விகா கதாபாத்திரமான "அன்புக்கரசி"

 

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ்  படத்தில் அட்டகாச நடிப்பைத் தந்த ரித்விகா, இக்கதையில் "அன்புக்கரசி" பாத்திரத்தில் நடித்துள்ளார். முற்போக்கு எண்ணம் கொண்ட படித்த பெண்ணாக, தன் வாழ்வில் உயர் சாதனைகளை நோக்கிப் பயணப்படும் பெண் கதாபாத்திரத்தில், அருளின் சகோதரியாக நடித்துள்ளார்

 

துணிந்த பின் (தைரியம்) கதையில் அஞ்சலி கதாபாத்திரமான “முத்துலட்சுமி”

 

தான் ஏற்கும் கதாபாத்திரங்களில், ஒவ்வொன்றிலும் மிகச்சிறப்பான நடிப்பைத் தரும் அஞ்சலி, தொலைந்து போன வெற்றியின் காதல் மனைவியாக நடித்துள்ளார். தனது காதல் கணவனின் வருகைக்காக ஏங்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

சம்மர் ஆஃப்  92 (நகைச்சுவை) கதையில் ரம்யா நம்பீசன்  கதாபாத்திரமான “லக்ஷ்மி”

 

குழந்தை நட்சத்திரமாக இருந்து 60 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை) கதையில் ஒரு ஆசிரியராக மிகச்சிறந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மாணவர்களின் நன்மைக்காக உழைக்கும் அன்பான ஆசிரியராகவும், நாய்களின் காதலராகவும் நடித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்