கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கனிசமாக 1500க்கு மேல் வருகிறது. அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டோர் என்று பார்த்தால் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
முன்னதாக ஐந்தாம் கட்ட ஊரடங்கிற்கு முன்பாக ஒருசில தளர்வுகளுடன் வெள்ளித்திரை இறுதிக்கட்ட பணிகளுக்கும், 60 பேர்களுடன் சின்னத்திரை ஷூட்டிங் நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், சென்னையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. அதானால் தளர்வுகளை நிறுத்திக்கொண்டு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவர இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அருகிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சில தளர்வுகள் இருந்தாலும், இரண்டு ஞாயிற்றுக்கிழமை எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெறாது என்று பெப்சி அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அடுத்தடுத்த எபிசோட்களுக்காக சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. இதனை முன்வைத்து தொலைக்காட்சிகளில் நாளை முதல் இந்த சீரியல் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி வந்தார்கள். தற்போது அந்த விளம்பரங்கள் அனைத்தையுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.