கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நிலவிவரும் கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பள்ளி, கல்லூரி, தொழில்துறை நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரைத்துறை, பல்லாயிரம் கோடி ரூபாய் தொழில்முடக்கத்தால் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அவ்வப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்களின் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாகவும், பெருந்தொற்று அச்சம் காரணமாகவும் திரையரங்குகளை நோக்கிய மக்களின் வருகை போதிய அளவில் இல்லை. இதற்கிடையே சில முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.
படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவது திரையரங்குகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என்று அச்சப்படும் திரையரங்க உரிமையாளர்கள், இதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பல கட்டங்களாக ஆலோசித்துவந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளனர். அதன்படி, 'ஏற்கனவே ஓடிடியில் வெளியான படங்களை மீண்டும் திரையரங்குகளில் திரையிடுவதில்லை; திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என ஒப்புதல் அளித்தால் மட்டுமே திரையரங்கில் திரையிடப்படும்; ஓடிடி விற்பனைக்கான ப்ரிவியூ காட்சிகளுக்குத் திரையரங்குகள் கொடுக்கக் கூடாது' என மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’, ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய திரைப்படங்களைத் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் சம்மந்தப்பட்ட பட நிறுவனங்கள் இருந்தநிலையில், திரையரங்க உரிமையாளர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். அதேநேரத்தில் ‘சூரரைப் போற்று’, ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களைத் திரையில் காணும் ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு திரையரங்க உரிமையாளர்களின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.