கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து உலகம் முழுவதும் ஐம்பது லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்களான ஷாப்பிங் மால், திரையரங்கம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற இடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமலே இருக்கிறது.
மூன்று மாதங்களாக திரைத்துறையிலும் எந்தவித ஷூட்டிங்கையும் நடத்த அனுமதி இல்லாமல் தற்போதுதான் சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களின் இறுதிக்கட்ட பணிகளைத் தொடர தமிழ அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. அந்த வகையில் துபாயில் நேற்று முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. துபாயில் தமிழர்கள் மற்றும் மலையாள மொழி பேசுபவர்கள் அதிகம் என்பதால் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை மீண்டும் திரையிட்டுள்ளனர். திரையரங்கில் சமூக இடைவெளி, முகத்தில் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வருவது போன்ற பல நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.