Skip to main content

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் டப்பிங் ஸ்டூடியோ திறப்பு...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

spb

 

'பாடு நிலா பாலு' என  அன்போடு அழைக்கப்படும் அளவிற்கு, தனது தேன்மதுரக் குரலால், ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

 

எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடகராக மட்டுமில்லாமல், நடிகர், இசையமைப்பாளர்  என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பின்னணிக் குரல் அளிக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், 'சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ்' யூனியனில், டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்தார். எஸ்.பி.பியின் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்திய டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி, எஸ்.பி.பியின் நினைவாக, டப்பிங் ஸ்டூடியோ திறக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் இன்று, சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில், "எஸ்.பி.பி ஸ்டூடியோ" என்ற பெயரில், ஒரு டப்பிங் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்களின் முன்னிலையில், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி, இந்த ஸ்டூடியோவினை திறந்து வைத்துள்ளார். இது பற்றி, டப்பிங் யூனியன் உறுப்பினர்கள், திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த ஸ்டூடியோவினை தலைவர் திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக தெரிவித்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்