இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், 'த்ரிஷ்யம் 2' தற்போது வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் உருவாகி வந்த இப்படம், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.
முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்றது. இவ்வரவேற்பைக் கண்ட பிறமொழித் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படத்தை தங்கள் மொழியில் ரீமேக் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், நடிகர் ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது 'த்ரிஷ்யம் 2' படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள பனோரமா ஸ்டூடியோஸின் குமார் மங்கத் பதக் இதுகுறித்து பேசும்போது, " 'த்ரிஷ்யம் 2'-ன் வெற்றியைத் தொடர்ந்து அந்தக் கதை மற்ற மொழிகளிலும் அதே அளவு அர்ப்பணிப்புடனும் உணர்ச்சியுடனும் சொல்லப்பட வேண்டும். தயாரிப்பாளர்களாக எங்களுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது" எனக் கூறியுள்ளார். இதன் மூலம் 'த்ரிஷ்யம் 2' படம் ஹிந்தியில் உருவாவது உறுதியாகியுள்ளது.