அறிமுக இயக்குநர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், திவ்யா பாரதி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சிலர்’ திரைப்படம், வரும் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (29.11.2021) மாலை சென்னையில் நடைபெற்றது. ஜி.வி. பிரகாஷ், திவ்யா பாரதி, தயாரிப்பாளர் டில்லி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகை திவ்யா பாரதி பேசுகையில், "இந்த ஒரு தருணத்திற்காகத்தான் கடந்த இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்தப் படத்திற்குப் பிரபலமான ஹீரோயின்களைத் தேர்வு செய்திருந்தால் அதுவே படத்திற்குப் பெரிய விளம்பரமாக அமைந்திருக்கும். அதையெல்லாம் விடுத்து, அறிமுக நடிகையான என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்திற்கு என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு நன்றி. க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கின்போது மிகவும் பயமாக இருந்தது. இயக்குநரின் பத்து வருஷ கனவு இந்தப் படம். டில்லி பாபு சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கை. இவற்றையெல்லாம் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என் தோளில் இருந்ததால், நம்மால் நடிக்க முடியுமா என்று நினைத்து அழுகை வந்துவிட்டது. இயக்குநர் சதீஸ்தான் எனக்கு நம்பிக்கையளித்து நடிக்க வைத்தார். படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்திற்கு மிகப்பெரிய தூண்களாக இருந்தனர். ஜி.வி. பிரகாஷ் சார் அவருக்கு இணையாக நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். வேறு ஏதாவது நடிகராக இருந்தால் படத்தில் அறிமுக நடிகைக்கு இவ்வளவு இடம் கொடுப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு நன்றி. தனியாளாக என்னை வளர்த்து, எல்லா சுதந்திரங்களும் எனக்குக் கொடுத்த என் அம்மா எனக்கு நம்பிக்கையாக இருந்தார். அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" எனக் கூறினார்.
தன்னுடைய அம்மா பற்றி கூறுகையில் திவ்யா பாரதி கண்கலங்கியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.