வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் 'ஜெயில்'. இந்தப் படத்தின் ஷூட்டிங் பின்னணி வேலைகள் என அனைத்து முடிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக ரிலீஸாகாமல் தள்ளிப் போய்கொண்டிருக்கிறது. இந்த வருட கோடை விடுமுறையில் 'ஜெயில்' படம் ரிலீஸாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரோனா தொற்றால் அதுவும் தடையானது.
கரோனா முடிவடைந்து திரையரங்கில் ரிலீஸாகும் முதல் படமாக 'ஜெயில்' படம் இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக்கில், விரைவில் ஜெயிலைப்பற்றி காத்தோடு ஒரு நல்ல செய்தி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “ஜெயில் என்று பெயர் சூட்டியதால் என்னவோ ஜெயில் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுத்திசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை.
ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சுத் திணறினோம். இதற்கிடையில் கரோனோ வேறு உலகை தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கரோனோ வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக்கீற்று தெரிகிறது. ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது. விரைவில் ஜெயிலைப்பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாகப் பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளைத் திறக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.