வசனகர்த்தாவும் இயக்குநருமான செல்வபாரதி, நக்கீரனுடனான முந்தைய சந்திப்பில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த சந்திப்பில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய வசீகரா திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
வசீகரா படம் கமிட் ஆனவுடன் முதல் சந்திப்பிலேயே நடிகர் விஜய்யிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். விஜய்யின் முந்தைய 5 படங்களில் இருந்து ஒவ்வொரு பாடலை பதிவு செய்து அதை விஜய்யிடம் கொடுத்து பார்க்க சொன்னேன். அவர் எதற்கு எனக் கேட்க, நீங்கள் பாருங்க தம்பி சொல்றேன் என்றேன். அவர் 5 பாடல்களை பார்த்து முடித்ததும் எதுக்குணே இதை பார்க்கச் சொன்னீங்க என்றார். 5 பாடல்களிலும் ஹீரோயின்தான் மாறி இருக்கு... நீங்க அப்படியே இருக்கீங்க... ஹேர் ஸ்டைல், மீசை, காஸ்டியூம் எல்லாம் அப்படியே இருக்கு என்றேன். உடனே விஜய் இப்ப என்ன சொல்ல வர்றீங்க என்றார். இந்தப் படத்துல கெட்டப்ப மாத்தணும்... பாடி லாங்குவேஜூம் மொத்தமா வேற மாதிரி இருக்கணும்... உதடே அசையாம டயலாக் பேசுறதையும் மாற்றவேண்டும் என்றேன். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
விஜய்யை வித்தியாசமாக எப்படி காட்டலாம் என்று நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன். பல நாட்கள் யோசித்தும் எனக்கு எந்த ஐடியாவும் வரவில்லை. அந்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார். அது விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. மறுநாள் விஜய்யிடம் சென்று சொன்னேன். முதலில் யோசித்த அவர், பின் சரியெனக் கூறிவிட்டார். அந்த ஹேர்ஸ்டைல் வைத்துவிட்டு மறுநாள் என்னை அழைத்தார். நேரில் பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விஜய்க்கும் பொருத்தமாக இருந்தது. அவருடைய கெட்டப்பை மாற்றியது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது.
படத்தில் விஜய் சாரின் செயல்கள் எம்.ஜி.ஆர்போல இருக்கிறது என்று சொன்னார்கள். அதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. ரயிலில் தூங்கிக்கொண்டு வருவதுதான் படத்தின் அறிமுகக்காட்சியாக எழுதியிருந்தேன். நினைத்தேன் வந்தாய் படத்திலும் அதுபோன்றுதான் அறிமுகக்காட்சி இருக்கும். சென்டிமெண்டாக இதையே வைத்துக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றினாலும், வசீகரா பண்ணும்போது விஜய்க்கு பெரிய மாஸ் இருந்ததால் அதற்கேற்ற மாதிரி அறிமுகக்காட்சியை மாற்றினோம். விஜய்யை எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தலைவராக காட்டியது எல்லாம் பின்னால் எடுத்த முடிவுதான்.
சுந்தர் சி இயக்கிய வின்னர் படம் விஜய் நடிக்க வேண்டியதுதான். அந்தக் கதையை சுந்தர் சி விஜய்யிடம் கூறியபோது நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். படம் வெளியான பிறகு, நான் இந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டேன் அண்ணா என்று விஜய் சொன்னார். விஜய்யை பொறுத்தவரை எந்த ஜானரில் படம் நடித்தாலும் அதற்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார். இன்றைக்கும் அவரால் ப்ரெண்ட்ஸ், காதலுக்கு மரியாதை மாதிரியான படங்களில் நடிக்க முடியும். பெரிய மாஸ் வந்துவிட்டது, நூறு கோடியைத் தாண்டிய பிசினஸ் வேல்யூ ஆகிய காரணங்களால்தான் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.