![vsvsvsdv](http://image.nakkheeran.in/cdn/farfuture/re2H9srCMhLB1jx9-JgJkkuvnsDT1MPXIa8c5E10xCg/1623308347/sites/default/files/inline-images/ac0bae88-c982-40b7-9465-d3992e29860a.jpg)
நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் அமீர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், தடுப்பூசி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... "பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் மூலமாக ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர் திரு. பக்தவச்சலம் முன்னிலையில் நானும் எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம். மிகவும் சுகாதாரமாகவும் சிறந்த உபசரிப்புடனும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிப் பணியை சிறப்பாக செய்துகொண்டிருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு, கோவிட் 19 நோயிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என கூறியுள்ளார்.