நடிகர் தர்ஷனின் கனவு 'கனா' படம் மூலம் நனவாகியிருக்கிறது. நாயகனாக தனது முதல் படம் 'கனா' வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் தர்ஷன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பேனரில் பணிபுரியும்போது கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
"அருண்ராஜா காமராஜ் எனக்கு கிராமத்து பின்னணியில் உள்ள ஒரு பையனை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். இது நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கொண்டது. எனது கதாபாத்திரம் மற்றும் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆகியவற்றிற்கும் இடையிலான உறவை அவர் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார். ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரத்துக்கு தேவையானவற்றை சிறப்பாக செய்யும் சிவகார்த்திகேயன், நான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என்று உணர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில், நான் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் தாண்டி, இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு உண்டாகியிருக்கிறது. பார்வையாளர்கள் என்னை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
கனா (கனவு) ஒரு பொதுவான உணர்வு, அல்லவா? எனக்கு மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் படத்துடன் ஒரு வகையான பிணைப்பு இருந்தது. ரசிகர்கள் அவர்களுடைய சொந்த கனவு திரையில் பிரதிபலித்திருப்பதாக உணர்வார்கள்.விருதுகள் மற்றும் பாராட்டுக்களை தாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் 'கௌசல்யா'வாக எல்லோர் மனதிலும் நிற்பார். சத்யராஜ் சார் போன்ற ஒரு லெஜண்டுடன் நடித்ததை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. அவரது சிறிய அமைதியான நடிப்பு கூட பேச முடியாத வார்த்தைகளை அழகாக வெளிப்படுத்தும்" என்றார் தர்ஷன்.