பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ‘சூர்யவம்சம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘மகதீரா’ உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதில் ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். மேலும், இவர் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அதில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்குப் பணம் தந்து சக நடிகர்கள் உதவ வேண்டும் என மாஸ்டர் சிவசங்கரின் மகன் வம்சி காகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையறிந்த நடிகர் சோனு சூட், சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்குத் தான் உதவுவதாக உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷும் மாஸ்டர் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளதாக அவரின் மகன் வம்சி காகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மாஸ்டருக்கு உதவிய தனுஷ் மற்றும் சோனு சூட் ஆகியோருக்கு நன்றி " எனக் குறிப்பிட்டுள்ளார்.
Thanks to Sonu Sood Garu & Dhanush Garu for providing help to master🙏 https://t.co/nES6UJMW7H
— Vamsi Kaka (@vamsikaka) November 25, 2021