கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும் ஆஜராகச் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று(22.6.2022) நீதிமன்றத்தில் ஆஜரான அவர்களிடம் குற்றப்பத்திரிகையை நீதிபதி படித்துக் காட்டியதோடு, அது தொடர்பாகக் கேள்வியும் எழுப்பியிருந்தார். இதற்கு தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளவதாக கூறியுள்ளனர். இதையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஜூலை) 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.