![herhderh](http://image.nakkheeran.in/cdn/farfuture/bFuozhhH4pgRWrY2xnfh0nMnTsgUzui2_eu1PJFnDCU/1620108298/sites/default/files/inline-images/Rajanikanth.jpg)
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவர் உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. அதில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள். கரோனா இரண்டாம் அலைக்கு நடுவே கடந்த மூன்று வாரமாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முழுவதுமாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘அண்ணாத்த’ படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்து பதிவிட்டுள்ளார். அதில்... "என் அடுத்த படம் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மையல்ல. நான் விரைவில் என் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக உங்களிடம் அறிவிப்பேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள். கவனமாக இருங்கள்" என கூறியுள்ளார்.