Skip to main content

'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன் 

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
tolet

 

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன். தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘டு லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார். கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘டு லெட்’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விருதுகள் குவித்தால் மட்டும் போதுமா..? இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதா..? எதனால் படம் வெளியாக இவ்வளவு தாமதம் என்பது குறித்து இயக்குநர் செழியன் பேசியபோது... 

 

 

"தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது. நடுத்தர மக்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அப்படி வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமானியனின் பிரச்சினைதான் ‘டு லெட்’ படத்தின் மையக்கரு. பொதுவாகவே இங்கே ஒரு முழு நீள திரைப்படத்தை ஆரம்பித்து எடுத்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகி விடுகிறது. இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூடுதலாக ஒரு வருடம் எடுத்துக்கொண்டது. அவ்வளவுதான். அதனால் இதில் எந்த தாமதமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை இப்போது சரியான நேரம் என்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம். பொதுவாகவே இங்கே குறைந்த பட்ஜெட் படங்கள் என்றால், அதிலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலரிடம் இளக்காரமான பார்வை இருக்கவே செய்கிறது. மலையாள, வங்காள மொழி படங்கள் தேசியவிருது வாங்கினால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த அரசுகள் 25 லட்சம், 40 லட்சம் அல்லது சொந்த வீடு என கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள். 

 

இன்னும் நம் ஊரில் அந்த நிலை வரவில்லை. ஒருவேளை ‘டு லெட் ’ மாதிரி வருடத்திற்கு பத்து படங்கள் வரும்போது நம்மூரிலும் தேசிய விருது படங்கள் கவனிக்கப்பட வாய்ப்பு உருவாகலாம். விருதுகளுக்கு அனுப்பியதாலேயே அதை கலைப்படைப்பு தானே என ஒதுக்கிவிட தேவையில்லை. சொல்லப்போனால் இதுதான் சிறந்த கமர்சியல் படம். பட்ஜெட்டில் படம் எடுத்தால், பட்ஜெட்டை தாண்டிய லாபம் கிடைப்பது உறுதி. ஆம். இதில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இது போன்ற படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும்போது, ஒரு பக்கம் நம் தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். அதேசமயம் இன்னொரு பக்கம் இப்படி திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக நீங்கள் ஒரு படத்திற்கு செலவு செய்த தொகை கிட்டத்தட்ட உங்களிடமே திரும்பி வந்துவிடும் அதுவும் ரிலீசுக்கு முன்னதாகவே. பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னிடம் படமெடுக்க 50 லட்ச ரூபாய் இருந்தால் போதும். அதை வைத்து நான் பத்து கோடி சம்பாதித்து விடுவேன் எனக் கூறுவார். அது எப்படி என்றால் இப்படித்தான். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது விருது பெறுவது இவை அனைத்துமே படத்திற்கான அங்கீகாரத்தை தாண்டி அவற்றிற்கு பொருளாதார ரீதியாக உதவுகின்றன. 

 

 

சில திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டும் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் கூட அது நல்ல படம் என்பதை உணர்ந்து அங்குள்ள சேனல்கள் சில அந்தப்படத்தை ஒருமுறை ஒளிபரப்புவதற்கான உரிமையைக் கேட்டு அதற்காக ஒரு தொகை கொடுக்கின்றன. இப்படி பல நாடுகளில் மொத்தம் ஆயிரக்கணக்கில் சேனல்கள் இருக்கின்றன. இந்த வணிகம் இங்கே பலருக்கு தெரியவே இல்லை. இந்த படத்தை தயாரிப்பது குறித்து ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் பண்ணலாம் எனக் கூறினார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அடுத்தவர் பணத்தில் அப்படி பரிசோதனை செய்து பார்க்க நான் விரும்பவில்லை. அதனால் தான் என் மனைவியே இந்த படத்தை தயாரித்தார். உலகம் முழுதும் சுற்றி பல விருதுகளை வாங்கிய இந்த படம், இங்கே என் மக்களிடம் பாராட்டைப் பெறும்போதுதான் அதை இன்னும் மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன். அதனால் வரும் பிப்-21ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன்” என்றார் இயக்குநர் செழியன். இந்தப்படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த ஹீரோவுக்கு இத்தனை முகங்களா?

Published on 28/04/2020 | Edited on 28/04/2020


 

vattara valaku



தமிழில் ஒரு உலக சினிமாவான 'டுலெட்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்பே உலகின் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்று தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்த்தது. 'டுலெட்' படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் 'பரதேசி', 'ஜோக்கர்' உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 'டுலெட்' படத்தின் கதைநாயகனாக நடித்தவர் சந்தோஷ் நம்பிராஜன்.


செழியனை போலவே சந்தோஷ் நம்பிராஜனும் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். 'பரதேசி' படத்தில் செழியனின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தில் இவர் நடித்ததற்கு செழியன்தான் காரணமென்றாலும் அதன் பிறகு தன் ஆர்வத்தை நடிப்பின் பக்கம் வளர்த்துக்கொண்ட சந்தோஷ், அடுத்ததாக 'வட்டார வழக்கு' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மதுரை வட்டாரத்தில் மண்ணின் வேர்களோடு படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

  agandan



ஒளிப்பதிவாளர், நடிகர் என்பதை தாண்டி இன்னும் சில முகங்களும் இவருக்கு இருக்கிறது. யூ-ட்யூபில், 'சந்தோஷ் நம்பிராஜன்' என்ற தனது சேனலில், நடிப்புப் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா தொடர்பான பிற அறிவுரைகளையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து சினிமா முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறார். இது மட்டுமல்லாமல் 'நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'சிங்கப்பூர் தீபாவளி', 'சிங்கப்பூர் பொங்கல்' ஆகிய தனியிசை பாடல்களை தயாரித்து வெளியிட்டார். அந்தப் பாடல்கள் இணைய தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பகிரப்பட்டன. நம்பிராஜன் என்பது இவரது தந்தை கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர்.


தற்போது தனது அடுத்த முயற்சியாக, நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் முழுக்க முழுக்க மொபைல் ஃபோனிலேயே 'அகண்டன்’ என்ற ஒரு முழுநீள திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ஐ-ஃபோன்-11ப்ரோவில் படமாக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கும் அவர், தனது இந்த ஐடியாவுக்கு வழி காட்டியதாக 'கான்டேஜியன்' பட புகழ் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பர்க்குக்கு நன்றி கூறுகிறார்.           

 

 

Next Story

"என்னை கெட்ட வார்த்தையில் திட்டிய ஒளிப்பதிவாளர்" - ஹீரோ பகிர்ந்த ஷாக் நினைவு  

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட 'டுலெட்' திரைப்படம் சென்றவாரம் தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின்  விமர்சனக் கூட்டம் 'கூகை' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'டுலெட்' நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம், தான் செழியனிடம் உதவியாளராக சேர்ந்த கதையை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். சந்தோஷ். அடிப்படையில் ஒளிப்பதிவாளர் ஆவார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தின் இயக்குனர் செழியன், 'கல்லூரி', 'பரதேசி' உள்ளிட்ட பல சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்தான் சந்தோஷ். அவர் பேசியது...

 

tolet santhosh sriram



"நான் ஆரம்பத்தில் சிலரிடம் பணியாற்றினேன். ஆனால், எதுவும் சரியாக அமையலை. தமிழ் சினிமாவில் பொதுவாகவே பெரும்பாலானோர் தங்கள் உதவியாளராக புதிதாக சேர்பவர்களுக்கு எதுவும் கத்துக்கொடுக்க மாட்டாங்க. எல்லா விஷயங்களையும் கொஞ்சம் அடைச்சே வைப்பாங்க. ஒரு சீனை எப்படி எடுக்கணும் என்பதையோ, என்ன மாதிரி புக்ஸ் படிக்கணும் என்பதையோ கூட சொல்ல மாட்டாங்க. அப்படித்தான் ஒருத்தர்கிட்ட நான் வேல பாத்தேன். கூடுதலா அவர் என்னை பயங்கர டார்ச்சர் பண்ணார். சரியென்று அவர்கிட்ட இருந்து விலகி செழியன் சார்கிட்ட சேர முயற்சி பண்ணினப்போ, செழியன் சார். 'நீதான் இப்போ அங்க வேலை பாக்குறியே, ஏன் விலகுற?'னு கேட்டார். நான் சொன்னேன், 'அவர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறார் சார்'னு. "அப்படி என்ன டார்ச்சர் பண்ணுறார்?" என்று கேட்டார். "என்னை கெட்ட வார்த்தையில் திட்டுறார் சார்"னு சொன்னேன். உடனே அண்ணன் சொன்னார், "அப்போ நீ முதல்ல அந்த ஆளை அடிச்சிட்டு வா, நான் உன்ன சேத்துக்குறேன்" என்று. "என்னது அடிக்கிறதா? அதெல்லாம் ரொம்ப கஷ்டம்"னு சொன்னேன். "அப்படின்னா அட்லீஸ்ட் போன் பண்ணி அவரை திட்டிட்டு வா. நீ ஒரு மனிதன், ஒரு சக மனிதன் உன்னை எப்படி கெட்ட வார்த்தையில் திட்டலாம்?"னு சொல்லி சுயமரியாதை கற்றுக்கொடுத்து, பின்னர் என்னை வேலைக்கு சேர்த்து அங்கீகாரமும் கொடுத்தார். பாத்துக்கங்க, செழியன் சார் கேட்ட குவாலிஃபிகேஷனை. ஆனா, நான் அந்த ஒளிப்பதிவாளர அடிக்கலை. சார் போன் பண்ணப்ப எடுக்கவேயில்லை".

 

director chezhian



இவ்வாறு தன் அனுபவத்தை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்ட சந்தோஷ், தான் ஒவ்வொரு முறை வேலையில்லாமல் இருந்த போதும் செழியன் திடீரென அழைத்து ஒரு வேலை கொடுத்ததாகவும், அப்படித்தான் 'பரதேசி' படத்தின் மேக்கிங் வீடியோ, பின்னர் இந்த டுலெட் நடிப்பு வாய்ப்பு ஆகியவை கிடைத்ததாகவும் தெரிவித்தார். "சினிமாவில் பொதுவாக, மாலை ஆறு மணி ஆனால் வேறு மனிதர்களாகி விடுவார்கள். ஆனால், எங்க சார் 'கல்லூரி' ஷூட்டிங் தினமும் ஏழு மணிக்கு முடிஞ்சபின்னாடி லேப்டாப் எடுத்து வச்சு எங்களுக்கு ஒளிப்பதிவு குறித்து கற்றுக்கொடுப்பார்" என்று கூறி நெகிழ்ந்தார்.