யூட்யூப் வலைதளத்தில் தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் படங்களை விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன். எந்த மாதிரியான படங்கள் என்றாலும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சிப்பதால் இவர் இணையத்தில் மிகவும் பிரபலம். இதனால், திரையுலகினர் அவ்வப்போது இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டை எழுப்பி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் 'ஆன்டி இண்டியன்' எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடித்து கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சாருக்கு அனுப்பினார். இப்படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாகத் தடை செய்துள்ளனர்.
மதம் சார்ந்த சமகாலப் பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி நையாண்டி செய்து எடுக்கப்பட்ட இப்படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்தடை குறித்து தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறுகையில்... ''சென்சார் குழுவினர் அவர்களின் முடிவைச் சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் திரைக்கு வரும்" எனக் கூறியுள்ளார். சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் 'உட்தா பஞ்சாப்', தீபிகா படுகோனின் 'பத்மாவத்' போன்ற படங்களுக்கும் இதுபோன்று தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.