நகைச்சுவை நடிகர் யோகிபாபு 'மண்டேலா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சசிகாந்த் வழங்க, பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். கடந்த வாரம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான இப்படத்தில், சமகால அரசியல் நிகழ்வுகளை சலூன் கடைக்காரர் கதாபாத்திரம் மூலம் நையாண்டி செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நேற்று (09.04.2021) நடிகர் யோகிபாபு மற்றும் 'மண்டேலா' படக்குழுவினர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில்....
"நடிகர் யோகிபாபு நடித்துள்ள 'மண்டேலா' என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்துள்ளனர்.