கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தனது முதல் படத்திலேயே இசை ரசிகர்களை கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காதலன் முதல்வன், எந்திரன், ஐ, சர்க்கார், பிகில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மொழியைத் தாண்டி தெலுங்கு, இந்தி ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சர்வதேச திரைப்படவிழாவில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த ஏ.ஆர் ரஹ்மான் "ஸ்லம் டாக் மில்லினியர்" என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்தற்காக சினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றார்.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு சர்வதேச அளவில் மீண்டும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எகிப்து நாட்டில் நடைபெறும் 43வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சினிமா மற்றும் இசைத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ஏ.ஆர் ரஹ்மானை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்த அவர் எல்லா புகழும் இறைவனுக்கே என்று குறிப்பிட்டுள்ளார்.