66வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியிலுள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் பங்குபெற்றனர். பொதுவாக தேசிய விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், குடியரசுத் தலைவர் புதுச்சேரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதால் அவருக்கு பதிலாக துணை குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.
விருதுகளை பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கின்றார். இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் சினிமாத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அமிதாப் பச்சனுக்கு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமிதாப் பச்சனால் கலந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காய்ச்சலில் அவதிப்படுகிறேன். பயணம் செய்ய முடியவில்லை. இதனால் டெல்லியில் நடைபெறும் தேசிய விருதுகள் விழாவில் பங்கேற்க முடியவில்லை. என் துரதிர்ஷ்டம். என் வருத்தங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
தாதாசாகேப் பால்கே விருதுடன் தங்கத் தாமரை மெடல், சால்வை மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக இருந்தது. அமிதாப் பச்சனுக்குப் பதிலாக தாதா சாகேப்-ன் பேரன் சந்திர சேகர் விருதைப் பெற்றுக்கொண்டார்.