Skip to main content

'படம் மட்டும் மொக்கையா இருக்கட்டும்...' - தமிழ்ப்படம் 2க்காக வெயிட்டிங்கில் இருக்கும் தல-தளபதி ரசிகர்கள்

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
siva


தமிழ்ப்படம் இரண்டாம் பாகம், சினிமா ரசிகர்களாக அல்லாத சாதாரண பொதுமக்களையும் ஆவலுடன் காத்திருக்கச் செய்தது. ஒரு வழியாக நாளை வெளிவருகிறது. அதற்கு காரணம் அந்த பட போஸ்டர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஜயகாந்த்தின் சின்ன கவுண்டர், நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷின், டிக் டிக் டிக், காலா, விவேகம், சர்க்கார், நேற்று வெளிவந்த சிம்புவின் மாநாடு பட ஃபர்ஸ்ட் லுக் வரை எதையும் விடவில்லை. எல்லா போஸ்டர்களையும் கலாய்த்துள்ளனர். இந்த போஸ்டர் கலாய்கள்தான் அந்தப் படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் டீசர், வீடியோ சாங் என்றும் எதிர்பார்ப்புகளை கூட்டியவர்கள் பின்னர் ப்ரோமோ காட்சிகளைக் கொண்ட ஒரு தொகுப்பு வீடியோவை யூ ட்யூபில் பதிவிட்டனர். இதில் யாரையெல்லாம் எப்படி எவ்வாறு கலாய்த்துள்ளனர் என்பதை பார்ப்போம். 
 

prakash raj


இதுவரை வெளிவந்த ப்ரோமோக்களில் முதல் ப்ரோமோவில், சூர்யா நடித்த 24 திரைப்படத்தின் 'ஐ யம் அ வாட்ச் மெக்கானிக்' காட்சியை அப்படியே காட்டி ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை அந்த வசனத்தையே சொல்ல, கடைசியில் சிவா 'ஏன்பா இதெல்லாம் பார்த்தா பைக் மெக்கானிக் மாதிரியா இருக்கு?' என்று கூறுவதுடன் முடிகிறது. இரண்டாவது ப்ரோமோ, திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் வருவதைப் போன்று 'வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மாவிடாதுடா' என்று ஒருவர் சொல்ல, அவரை பின்னே இரண்டு போலீஸுகள் பிடித்திருக்க சிவா 'சாமி' பட விக்ரம் போல மப்டியில் வந்து 'நீ என்ன விர்ஜினாடா?' என்கிறார். அடுத்த கட்டில் சிவா போலீஸ் காரில் உட்கார்ந்திருக்க கையில் தட்டு... இட்லியைப் பிணைந்து அதில் பீர் ஊற்றி இந்த சீனில் சாமி படத்தைத்தான் கலாய்க்கப் போறோம் என்று நம்மை குஷிப்படுத்தியவுடனேயே 'அப்பு' பட வில்லன் பிராகாஷ் ராஜ் போன்று காமெடி ஆக்டர் சதீஷ் போன் பேசிகொண்டிருக்கிறார். 'ரெமொ' பட ப்ரபோஸ் ஸீனைத் தொடர்ந்து மீண்டும் சதீஷ் வேறொரு கெட்டப்பில் பின்லேடன் போன்று காட்சியளிப்பதோடு இந்த ப்ரோமோவை முடித்திருக்கின்றனர்.
 

tmail padam


இன்னொரு ப்ரோமோவில் சிவா, ஸ்டைலாக நீண்ட முடிகளை வைத்திருக்கும் சந்தான பாரதியிடம் தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதை சொன்னதின் மூலம் இதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை  கலாய்க்கின்றனர். கடைசி ப்ரோமோவிலும், தன் இளம் நண்பர்களான மனோபாலா, சந்தானபாரதி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோருடன்  டீ கடையில் உட்கார்ந்து சிவா பேச, அப்போது ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் எப்படியெல்லாம் காதலிக்கின்றனர், அதாவது காதல் என்று அவர்கள் செய்யும் டார்ச்சர்கள் என்ன என்பதை கலகலவென காட்டுகின்றனர். அப்போது பின்னே பெரிய காபி ஷாப்புகளில் விற்கும் தின்பண்டமான croiisant, peking போன்றவை டீக்கடை மெனுவில் எழுதப்பட்டுள்ளது. 
 

remo


இப்படி போஸ்டருக்குப் போஸ்டர் எந்தப் படத்தை கிண்டல் செய்திருக்கின்றனர் என்று சிந்திக்க வைத்த இவர்கள் நாளை படத்தில் காட்சிக்குக் காட்சி எந்தப் படத்தை வைத்து செய்திருக்கிறார்கள் என்று யோசிக்க வைக்கும். வெவ்வேறு படங்களை கலாய்த்தே முழு படமாக வந்தால் எப்படியிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்கனவே தமிழ்ப்படம் தீர்த்தது. அந்தப் படம் பலருக்குப் பிடித்தது, பலருக்குப் பிடிக்கவில்லை. என்றாலும், அது வெற்றிப் படமானது. அதே பாணியில் வரும் 'தமிழ்ப்படம் 2' முழு படமாக சுவாரஸ்யமாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் கூட ஒரு சிலர், 'படம் மட்டும்  சரியா இல்லாம மொக்கை போடட்டும், இவங்க ஓட்டினத விட அதிகமா இந்தப் படத்த ஓட்டிருவோம்' என்று அஜித், விஜய் தொடங்கி விஷால் ரசிகர்கள் வரை வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். படக்குழுவினரும் அதற்கு ஏற்றார் போல ஓவர் எதிர்பார்ப்பை கூட்டிவிட்டனர். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடித்து வெளிவரும் தமிழ்ப்படம்2 மற்ற படங்களை கலாய்க்கப் போகிறதா,அல்லது மற்ற எல்லோரிடமும் அது கலாய் வாங்கப் போகிறதா என்னும் மிகப்பெரிய கேள்விக்கு நாளை விடை கிடைக்கும்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழ்ப்படம்' சிவாவின் மறுபக்கம்!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

 

நடிகர் சிவா நடந்தால், நின்றால், பேசினால், சிரித்தால் என்று அவர் எது செய்தாலும் காமெடியாகவே பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட சிவாவிற்கு நடிகர் ரஜினி, சிம்புவைப் போன்ற ஒரு மறுபக்கம் இருக்கிறது. அதுதான் ஆன்மிகம். சிவா, நடிகர் அஜித்துக்கு நெருக்கமானவர் என்பது பலரும் அறிந்ததே. அஜித் திருப்பதிக்கும் சென்னையிலுள்ள சாய்பாபா கோவில் ஒன்றுக்கும் அடிக்கடி செல்பவர். சிவா, திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்வாராம். சிவன் பக்தரான சிவா, தனது நெருங்கிய நண்பர்களுக்கு ருத்ராச்சம் போன்ற ஆன்மிக விஷயங்களை அன்பளிப்பாகத் தருவாராம். அப்படித்தான் பிரேம்ஜிக்கு ஒரு முறை பரிசளித்தார். மவுண்ட் ஸாஸ்தா என்று தெரிவித்துள்ளார்.
 

mount shiva


சிவாவின் ட்விட்டர் ப்ரோஃபைலில் கூட ஒரு மலையின் புகைப்படத்தை முகப்புப்படமாக வைத்துள்ளார் சிவா. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் மவுண்ட் சாஸ்தா, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ளது. இது இன்னும் உயிர்ப்புடன் இருக்கும், வெடிக்க வாய்ப்புள்ள ஒரு எரிமலை. இந்தியாவில் இருக்கும் கைலாச மலை, திருவண்ணாமலை போன்று இந்த மலை குறித்தும் பல புதிரான  ஆன்மிக கதைகள் இருக்கின்றன. மனிதனுக்கு இருப்பது போலவே பூமிப்பந்திற்கும் சக்கரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சக்கரங்கள் என்றால் ஆற்றல் உருவாகும் மையம். அப்படி சொல்லப்படும் சக்கரங்களில் முதல் சக்கரமாக இருப்பது இந்த மவுண்ட் சாஸ்தா மலைதான். உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலிருந்து மக்கள் அமைதியை நாடி இந்த மலைக்குச் செல்கின்றனர். இந்த மலை மனிதனுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியே கொண்டுவந்து, நேர்மறையான ஆற்றலை மனிதனின் உடம்பிற்குள் செலுத்துவதாக சொல்கின்றனர்.
 

mount shastha


இந்தியாவின் இமாலய மலையில் இருந்து வரும் கங்கை நதியைப் போல இந்த மலையிலிருந்து வரும் நீரோடைகள் அவ்வளவு தூய்மையானது என்கின்றனர். இந்த இடத்தில் இருக்கும் தூய்மையான காற்று, நீரோடை மற்றும் மலை ஏற்றம் அனைத்தும் ஒரு மனிதனுக்கு தனிமையைக் கொடுத்து தியானநிலைக்கு அழைத்துச்செல்வதாகவும் சொல்கின்றனர். மேலும், லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கும் போது அதில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் இந்த மலையில் வந்துதான் தஞ்சம் புகுந்தார்கள் என்றும் ஒரு கதை  சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பல புதிர்களை கொண்ட மலையின் புகைப்படத்தைதான் நடிகர் சிவா தன் ட்விட்டரில் ப்ரொஃபைல் புகைப்படமாக வைத்திருக்கிறார்.  
 

thiruvannamalai


பொதுவாக அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளிலும் சரி, பேட்டிகளிலும் சரி, கலகலப்பாக கலாய்ப்பாக மட்டுமே பேசும் சிவா, ஆன்மிக விஷயங்களை அதிகம் பேசுவதில்லை. ஆனாலும் ஓரிரு பேட்டிகளில் இதை வெளிப்படுத்தியுள்ளார். "திருவண்ணாமலையில் உள்ள சக்தி இந்த மவுண்ட் ஸாஸ்தா மலையிலும் இருப்பதாக நான் நம்புகிறேன். இவை இரண்டும் இரட்டை மலைகள். என் வாழ்க்கையில் அவ்வப்போது ஆன்மிக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன" என்று கூறினார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சிவா, முதலில் ஒரு பள்ளியில் தன்னார்வலர், அங்கு நாடக நடிகர், பின் ஆர்.ஜே, அதைத் தொடர்ந்து சென்னை-28, இப்பொழுது தமிழ்ப்படம்-2 வரை வந்திருப்பதற்கு தன் முயற்சியோடு சேர்த்து வேறு ஒரு ஆற்றலும் காரணம் என்கிறார்.  

 

ஆன்மிகம், ஆற்றல், சக்தி, சக்கரமெல்லாம் உண்மையோ இல்லையோ, ஒவ்வொரு மனிதனுக்கும் வெளியுலகம் பார்க்கும் பக்கத்திற்கு எதிராக இன்னொரு பக்கம் இருப்பது பேருண்மை. 

Next Story

தமிழ்ப்படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? 10 எளிய வழிமுறைகள் உங்களுக்காக...  

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

குறியீடு என்ற வார்த்தை தற்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமாக வளம் வந்து கொண்டிருக்கிறது. முன்னெல்லாம் உலக சினிமா ரசிகர்கள்தான் 'படத்தில் அந்தக் குறியீட்டை பாத்தியா, இது அதுக்கான குறியீடு' என்றெல்லாம் விவாதித்துக் கொள்(ல்)வார்கள். அந்த வழக்கம் இப்போது தமிழ் சினிமா வட்டாரத்தையும் வந்தடைந்துவிட்டது. அதுவும் சும்மா வெளியிடும் போஸ்டரில் ஆரம்பித்து, டீசர், டிரைலர் மற்றும் படம் வரை குறியீடுகளின் லிஸ்ட் ஏறிக்கொண்டே போகிறது. எங்கும் குறியீடு எதிலும் குறியீடு என்று மாறிவிட்டது. குறியீடு தெரியாமல் படம் பார்த்தால் அது வேஸ்ட் என்பது போன்ற ஒரு கட்டமைப்பும் இங்கு கட்டப்பட்டுவிட்டது. அதன் காரணமாகத்தான் குறியீடு கற்றுக்கொள்வது எப்படி என்கிற பத்து புள்ளிகளை உங்களுக்கு ஒரு கையேடாகப் (பயப்பட வேண்டாம் இது குறியீடு இல்லை கையேடு) போட்டுத் தர உள்ளோம்.

 

kaala first look
  • நீங்கள் பார்க்கும் ஹீரோ எந்த கலரில் உடை அணிகிறார் என்பதுதான் முதல் குறியீடு. ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு அர்த்தம். கலரைப் பொறுத்துதான் அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்பது நமக்குத் தெரியவரும். அவரது பேச்சு,செயல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். முன்பெல்லாம் ஹீரோக்கள் வொயிட் அண்ட் வொயிட்டில் வந்து அறிமுகமாவார்கள். வெள்ளை நாயகர்களின் நிறமாகவும், கறுப்பு, வில்லன்களின் நிறமாகவும் இருந்தது. இப்போது அது மாற்றப்பட்டிருக்கிறது கறுப்பு ஹீரோக்களின் நிறமாகவும் வெள்ளை வில்லன்களின் நிறமாகவும் இருக்கிறது. இவை தவிர நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை  உள்ளிட்ட பல நிறங்களுக்கும் பல குறியீடுகள் இருக்கின்றன. நாயகன் கையில் மந்திரிச்ச கயிறு எதுவும் கட்டியிருந்தால் அதன் நிறம் மிக முக்கியம். கலர் ரொம்ப முக்கியம் ப்ரோ...

     

     

     
  • நாயகன் உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களின் பெயரை மறக்காமல் குறித்துக்கொண்டு வரவும். ட்ரைலர், டீசர் வெளிவரும்பொழுதே பெயர்களைக் குறித்து வைத்து கூகுள் செய்துவிட்டு பின்னர் சென்று படம் பார்த்தால், அது கூடுதல் நலம். அந்தப் பெயர்கள் கொண்ட தலைவர்கள், வெளிநாட்டு மனிதர்கள் போன்றோரைப் பற்றித் தெரிந்தால்தான் உங்களுக்கு இந்தப் பாத்திரங்களைப் பற்றி முழுமையாகத் தெரியும். நீங்கள் பார்ப்பது மட்டும் பாத்திரம் கிடையாது. அதற்கு பின்னால் வரலாறு மறைந்திருக்கிறது. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே...

     komban
     
  • அடுத்ததாக நாயகனின் பெட் அனிமல், அதாவது வளர்ப்புப் பிராணி எது என்று நீங்கள் கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் வளர்ப்புப் பிராணிகளை வைத்தும் நாயகனின் குணாதசியங்களைத் தீர்மானிக்கலாம். அவர் வளர்ப்பது நாயா, பூனையா, காளையா, குதிரையா, யானையா  என்பதை உற்று நோக்க வேண்டும். நாய் என்றால், நாயை மட்டும் கவனித்தால் பத்தாது, நாயின் நிறமும் மிக முக்கியம். அது போலத்தான் பிற விலங்குகளுக்கும்.

     
  • உங்கள் அபிமான ஹீரோ வசனம் பேசினால் அவரது வாயைத்தான் பார்க்கவேண்டுமென்பது இல்லை. சுற்றி உள்ள ஓவியங்கள், பின்புறம் உள்ள சிலைகள், சிலை போல் யாரேனும் நின்றால் அவர்கள், சைடில் தெரியும் போஸ்டர்கள், கடந்து போகும் வண்டிகள், வண்டிகள் கொடுக்கும் ஹாரன்கள், வண்டி ஓட்டிச் செல்பவர்களின் பார்வை என அனைத்தும் மிக முக்கியம். பின்னாடி வண்டிகள் எதுவும் பார்க் செய்யப்பட்டிருந்தால், அந்த வண்டிகளில் உள்ள ஸ்டிக்கர்களும் முக்கியம். குறியீடுகள் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்திருக்கலாம், அலர்ட்டாக இருக்கவேண்டும். நேரம் மட்டுமல்ல, குறியீடும் கூட கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான்.

     thupparivaalan

     
  • புத்தகங்கள்... புத்தகங்கள், சமகால சினிமாக்களில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய குறியீடுகள். முன்பெல்லாம் புத்தகங்கள் படிக்காவிட்டால் இலக்கியத்தில் மட்டும்தான் உங்களுக்கு இழப்பு. இப்பொழுது சினிமாவிலும் இழப்பு ஏற்படலாம். நாயகனின் அறையில் இருக்கும் புத்தகங்களை கவனிப்பது முக்கியம். மிஸ் பண்ணிட்டா படத்தில் ஒரு பாதியை வேஸ்ட் பண்ணிட்டீங்க நீங்க...

     

     


     
  • சுற்றி உள்ளதெல்லாம் முடிந்துவிட்டதா? இப்பொழுது வசனங்களுக்கு வரலாம். வசனங்களில் நாயகனும் பிற பாத்திரங்களும் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் கூட குறியீடுதான். 'பகத்சிங்கை தொறந்துவிட்ருவேன்', 'ராசா வண்டிய விட்ருவேன்', என்பதில் தொடங்கி 'இது நல்ல எண்ணையா?' வரை அனைத்தும் குறியீடுகளே. புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுப் புரிந்துகொள்ளவேண்டும்.

     vikram vedha

     
  • 'இசை எதுல இருந்து வருது?' என்பது இன்றும் உயிர்ப்போடு இருக்கும் கேள்வி. அதற்கு பதில் தெரியுமோ தெரியாதோ, குறியீடு இசையிலிருந்தும் வருகின்றது என்பது மட்டும் உண்மை. ஹீரோவுக்கான இசை, வில்லனுக்கான பின்னணி இசை, அதில் பயன்படுத்தப்படும் ராகம், ராப், மந்திரம், என அனைத்திலும் குறியீடுகள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம். 'ஓமகசீயா, அசிலி பிஸிலி' என அனைத்திலும் அன்றே குறியீடு வைத்தார் ஹாரிஸ்.

     
  • கதை எங்கு நடக்கிறது. ஹீரோவுக்கு எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்றும் பார்ப்பது அவசியம். ஹீரோ வாழும் வீட்டு டோர் நம்பர், பயன்படுத்தும் வண்டியின் நம்பர், பயன்படுத்தும் ஃபோன் நம்பர், என அனைத்தும் முக்கியம். படத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளும் குறியீடுகள்தான். கொண்டாடப்படும் பண்டிகைகள், பண்டிகையின் போது தூவும் கலர் பொடிகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதில்தான் உலக அரசியல், சமூக, சினிமா சிந்தனைகளே அடங்கியிருக்கும்.

     joker
     
  • படத்தின் இயக்குனர்கள் குறித்து முன்பே அறிந்து வைத்து படம் பார்த்தால் குறியீடுகளை எளிதில் உள்வாங்கலாம். இயக்குநருக்கே தெரியாத பல குறியீடுகளை சொல்லிக் கொடுக்கலாம். வில்லனின் பெயர் ஏதாவது ஒரு புலவரின் பெயராகவோ, தலைவரின் பெயராகவோ, உங்கள் உறவினரின் பெயராகவோ இருந்தால் அதை எதிர்த்து போராட்டங்களும் செய்யலாம்.

     
  • முன்பெல்லாம் படங்களின் டைட்டில் கார்டு வடிவமைப்பு என்பது வெறும் வார்த்தை மட்டுமே. இப்பொழுதெல்லாம் டைட்டில் டிசைன்கள் ஒரு வரலாற்றை சொல்பவை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும்பொழுதே டைட்டில் டிசைனை நன்றாக ஜூம் செய்து பார்க்கவும். அந்த எழுத்துகளில் இருக்கும் வளைவுகளிலும், நெளிவுகளிலும், உள்ளே மறைந்திருக்கும் உருவங்களிலும் மனித குல வரலாற்றின் முக்கிய பக்கங்கள் இருக்கலாம் என்பதை மறந்துவிட்டு டைட்டில் டிசைனை கடந்துவிட வேண்டாம். கவனமாகச் செல்லுங்கள்...

     velai

     

theeran


 

asuravadham

 

imaika nodigal



இதற்கு பிறகும் 'ஒரு தமிழ்ப்படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடிப்பது எப்படி' என்பதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால்... உங்கள் நண்பர்களில் எப்படியும் ஒரு குறியீடு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார். 3 படங்களாவது அவருடன் சேர்ந்து பாருங்கள். பின்னர் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவது இன்னும் எளிது.

 

 


'பொழுது போகலையேன்னு படம் பாக்கத்தானடா வந்தேன்... நான் ஏண்டா இதையெல்லாம் பாக்கணும்' என்று வடிவேல் ஸ்டைலில் கேட்கிறீர்களா? நீங்கள், சிறுத்தை சிவா, சிங்கம் ஹரி, தெறி அட்லீ போன்றோரின் படங்களைப் பார்ப்பது நலம். ஆனால், மறந்துவிடாதீர்கள், அங்கும் குறியீடுகள் உங்களை வேறு வழியில் துரத்தும். ஏன்னா... அது சாமியில்ல, பூதம்!!!