உட்சநட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பவர். ஆனாலும், அவருடைய ரசிகர்களால் அஜித்துக்கு சமூக ஊடகங்களில் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை நடிகர் அஜித்குமார் ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்று வலம் வந்தது. அதில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியதுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை பார்த்து அஜித் ரசிகர்கள் பலரும் உண்மை என நம்பி மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அஜித் தரப்பிலிருந்து அது பொய்யான அறிக்கை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அஜித் தரப்பு வழக்கறிஞர் சார்பாக வெளியான அறிக்கையில், அஜித்தின் கையொப்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.