தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக ‘லால் சலாம்’ படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து சித்தார்த்துடன் இணைந்து அவர் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் ஏழ்மையிலுள்ள இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி செலவிற்கு உதவ ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் தருவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி நேற்று இயக்குநர்கள் சங்கம் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், “என்னுடைய குழுவில் இருந்த உதவி இயக்குநர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறேன். அது வெளியே தெரிந்ததா என்று எனக்கு தெரியாது. ஆனால் தற்போது எனக்கு நிறைய உதவி இயக்குநர்களிடமிருந்து கால் வர ஆரம்பித்தது. குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை, வேலை இல்லாமல் இருக்கிறோம் எதாவது உதவி பண்ண முடியுமா என நேரடியாக எனக்கு கால் வர ஆரம்பித்தது. இதில் யாரும் உண்மை சொல்கிறார்கள் பொய் சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அப்படியும் நான் உதவி செய்தால் சரியான நபர்களுக்கு போய் சேருமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உதவி கோரி நிறைய கால்ஸ் வந்தது.
நான் என்ன உதவி செய்தாலும் அது சரியான நபர்களுக்கு போய் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்த எண்ணத்தோடு இயக்குநர் சங்கத்தினை அணுகினேன். அதனால்தான் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளேன். நான் செய்யும் இந்த சிறிய உதவி எதாவது ஒரு குழந்தையையோ அம்மாவையோ சந்தோஷப்படுதினால் எனக்கு அது மகிழ்ச்சியை தரும்” என்றார். அதன் பிறகு இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளின் கல்வி செலவிற்கு உதவவும் வகையில், இயக்குநர்கள் சங்கம் தலைவர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோரிடம் முதற்கட்டமாக இந்தாண்டிற்கான நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழங்கினார்.