
இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'சென்டிமீட்டர்' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரில் காளிதாஸ் ஜெயராம் ரோபோட் ஒன்றை உருவாக்குகிறார். ரோபோட் கதாபாத்திரத்தில் யோகி பாபு வருகிறார். மஞ்சு வாரியார் சில ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். அணு வெடிகுண்டு பற்றி பேசுவது போல் வெளிவந்துள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது.