முக்கிய அரசியல் தலைவர்கள் பயணம் செல்லும் பாதைகளில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இத்தகைய பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதில் தொடங்கி பாதுகாப்பு பிரச்சனை வரை பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவதாக நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வந்தது. சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் போலீஸ் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கலை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படம் இது தொடர்பாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் போலீஸாரை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென்று பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்படுவதாகத் தமிழக டி.ஜி.பி. திரிபாதி நேற்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே, இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்டதைப் பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சாலையில் பாதுகாப்புப் பணிகளில் இருந்து பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்புப் பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். நானும் வருந்தி இருக்கிறேன். அந்தவகையில் இந்த ஆணையைக் கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 14, 2021