கவிஞர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத்தன்மையுடன் திகழும் ஜெயபாலன் அவர்களோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் கலந்துரையாடினோம். அதில், பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவருடன் நாம் நடத்திய கலந்துரையாடல் பின்வருமாறு...
'ஆடுகளம்' வெளியானபோது புதிய வகை வில்லத்தனத்தை ஜெயபாலன் கையாண்டு இருக்கிறார் என விமர்சனங்கள் எழுதப்பட்டன. அது பற்றிக் கூறுங்கள்?
புதிய வகை வில்லத்தனம்... அப்படியெல்லாம் ஏதும் இல்லை. எனக்கு நடிப்புப் பற்றி எதுவுமே தெரியாது. நான் பாலுமகேந்திராவின் நண்பர். அந்த வகையில் வெற்றிமாறனுக்கு என்னைத் தெரியும். என்னை நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் நாடகங்களில் கூட நடித்ததில்லை. அதனால் மறுத்துவிட்டேன். நான் வேண்டாம் எனக் கூறியும் அவர் தொடர்ந்து கேட்டார். நீங்கள் எனக்கு நடிப்பு பயிற்சியளித்தால் நான் முயற்சிக்கிறேன். சரியாக வந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், என்னை விட்டுவிடுங்கள் எனக் கூறினேன். அப்படித்தான் அந்தப் படத்திற்குள் நான் வந்தேன். சில நடிகர்கள் அவர்களுக்கு என்று ஒரு தனி பாணி வைத்து எல்லா படங்களிலும் அதைப் பின்பற்றுவார்கள். 'தேவர் மகன்' படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்குப் பாடப்புத்தகம். அது போல, 'முதல் மரியாதை', 'பராசக்தி' போன்ற படங்களையும் கூறலாம். சிவாஜி கணேசன், மார்லின் பிராண்டோவைப் பார்த்துதான் நடிப்புக் கற்றுக்கொண்டேன்.
வெற்றிமாறன், 'ஆடுகளம்' படத்தை இரண்டு வருடங்கள் படமாக்கினார். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஏதாவது ஒரு கதையை மதுரையில் கொண்டு போய் எடுத்தால் அது மதுரை படமாகிவிடாது. அது போல எடுக்க நினைத்தால் இதே படத்தை அவரால் ஆறு மாதத்திலும் எடுத்திருக்க முடியும். அந்த மண்ணைப் பற்றி முழுமையாகக் கற்றுக்கொண்டு ஆடுகளம் எடுத்தார். அந்த நேரத்தில் ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருந்தது. அச்சூழலில் அங்கு களத்தில் இருக்க முடியாமல் போனது என்னைக் கொதிப்படைய வைத்தது. அதனால், வெற்றிமாறனிடம் நாகரிகம் இல்லாமல் நடந்துகொண்டேன்.
சிவாஜி கணேசனைப் பார்த்து நடிப்பு கற்றுக்கொண்டதாகக் கூறினீர்கள். ஆடுகளம் படத்திற்காக நீங்கள் வாங்கிய ஸ்பெஷல் ஜூரி அவார்ட்டை, சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்திற்காக வாங்கியுள்ளார். அது பற்றிக் கூறுங்கள்?
நிறைய தோல்விகள், போராட்டங்களைச் சந்தித்த எனக்கு இது சரியான விருது என்றுதான் நினைக்கிறேன். சிவாஜி கணேசனிடம் இருந்து நடிப்பு கற்றுக்கொண்டேன் என்பது அவருக்கு இழுக்காக இருக்காது என்று நினைக்கிறேன். இன்று ஓரளவிற்கு நடிப்பில் தேறிவிட்டதாகக் கருதுவதால் இவ்வாறு கூறுகிறேன்.
வெற்றிமாறன் தவிர்த்து தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்தமான இயக்குநர்?
மாரி செல்வராஜைக் குறிப்பிடலாம். அவர், நீரோட்டத்தோடு போகாமல் எதிர்நீச்சல் போட்டவர். ஏற்றத்தாழ்வுகளை அவர் கையாண்ட விதம் பாடம் கற்பிப்பது போல உள்ளது.