கஞ்சா கருப்பு... பெயராலும் தனது வெகுளித்தனத்தாலும் முதல் படத்திலிருந்தே கவனிக்கப்பட்டவர். 'பிதாமகன்' படத்திலேயே சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் முக்கிய நகைச்சுவை நடிகராக 'ராம்' படத்தில்தான் முதலில் நடித்தார். ராமில் 'வாழவந்தான்', பருத்திவீரன் 'டக்ளஸ்', சுப்ரமணியபுரம் 'காசி', நாடோடிகள் 'மாரியப்பன்', களவாணி 'பஞ்சாயத்து' என இன்னும் நினைவு வைத்து சொல்லக்கூடிய பல பாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர். இடையே பட தயாரிப்பில் ஈடுபட்டு சூடுபட்டு சிறிய இடைவெளி ஏற்பட்டு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது மீண்டும் பிஸியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு 2 படத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த அவரிடம் ஒரு சின்ன சாட் செய்தோம்...
வெண்ணிலா கபடிக்குழு 2 ல எப்படி நீங்க இணைந்தீங்க?
வெண்ணிலா கபடிக்குழு முதல் பாகத்துல நான் கிடையாது. ஆனா, ரெண்டுல நான் இருக்கணும்னு கேட்டாங்க. படத்துல ஹீரோவை மதுரைக்கு பஸ் ஏத்தி விடுறதே நான்தான். அவரு மெட்ராஸுக்குப் போறாருன்னு எல்லோரும் நினைப்பாங்க. ஆனா, கபடி களத்துக்காக மதுரைக்குப் போவாரு. அண்ணன் பசுபதி என்னை கேப்பாரு, "டேய், அவன் மெட்ராசுக்கு போகலையாம்டா, எங்க ஏத்தி விட்ட?"னு. அப்படி ஒரு நல்ல குணச்சித்திரம் கலந்த கேரக்டர் எனக்கு. விக்ராந்த் தம்பி நல்லா ஓடுற குதிரை. அதுல நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஏறி பயணம் செய்யணும். அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்.
தற்போது வேறு என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க?
களவாணி2 இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. இன்னும் பேர் கொண்ட பெரியவர்களே, எம்.சி.ஆர்.பாண்டினு சில படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்கப் போகிறேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பட வாய்ப்புகள் வந்திருக்கா?
அப்படியில்ல.. நல்ல நடிகனுக்கு எந்த வேடம் கொடுத்தாலும் இவன் தாங்குவான் என்ற நம்பிக்கையை கொடுக்கணும். களவாணி இப்போ நல்லா ஓடுது, அதுனால எனக்கு நூறு படம் வரும். வெண்ணிலா கபடிக்குழு மூலமா இருபது படம் வரும். படத்துல நாம இருக்குறத பார்த்துதான் படம் கிடைக்குமே தவிர பிக்பாஸ்ல இருந்ததைப் பார்த்து மட்டுமெல்லாம் படம் வராது. அப்படி எதுவும் வரல.
தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பாக்குறீங்களா, அது எப்படி போகுது?
இப்போ நடக்குற பிக்பாஸ் பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல விரும்பல. நான் கருத்து கந்தசாமி கிடையாது. என்னை விட்ருங்க...