Skip to main content

'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் 

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

aamir Khan apologizes to 'KGF 2'movie team

 

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த இருபடங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், இந்தியில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வசூல் பாதிக்கும் என படக்குழு அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

ad

 

இந்நிலையில், நடிகர் அமீர் கான் ‘கே.ஜி.எஃப்’ படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “‘கே.ஜி.எஃப் 2’ படம் வெளியாகும் தேதியில் ‘லால் சிங் சத்தா’ படத்தை வெளியிட எனக்கு உடன்பாடு இல்லை. நான் முதல்முறையாக இப்படத்தில் சீக்கியராக  நடித்துள்ளேன். அதனால் அவர்களின் பண்டிகையான பைசாகி தினத்தில் இப்படம் வெளியானால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி இப்படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். ‘லால் சிங் சத்தா’ படத்தை ‘கே.ஜி.எஃப் 2’ படம் வெளியாகும் அதே நாளில் வெளியிட வேண்டிய நிர்பந்தத்தைக் கூறி யாஷ் உள்ளிட்ட படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டேன்.  அதற்கு உங்கள் படமும் அதே நாளில் வெளியாகட்டும் என்று பெருந்தன்மையோடு கூறினார்கள். 'கே.ஜி.எஃப் 2' படம் ஆக்சன் படம் என்பதாலும், 'லால் சிங் சத்தா' குடும்ப படம் என்பதாலும் இரு படங்களையும் பார்ப்பதற்கு  ரசிகர்கள் வருவார்கள். லட்சக்கணக்கான ரசிகர்களைப் போல நானும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை திரையரங்கில் பார்ப்பேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்