ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கிரண் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள '777 சார்லி' படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி. ஷெட்டி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த வகையில் சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில் '777 சார்லி' படம் வெளியாகி இன்றுடன் 25 நாள் ஆகிறது. இதனை கொணடாடும் விதமாக படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தத் திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வருவதில் அயராது உழைத்த பலரைக் கொண்டாடுவதுதான் இந்த வெற்றியைக் கொண்டாட ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம். எனவே '777 சார்லி' வசூலிக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை இப்படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தனிநபருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.
777 சார்லியின் தயாரிப்பாளர்கள் என்ற வகையில், நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளுக்கு மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான முயற்சி மற்றும் வளங்களை நாங்கள் அறிவோம். நாய்கள் மற்றும் விலங்குகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் நாடு முழுவதும் உள்ள 'என்.ஜி.ஓ' நிறுவனங்களுக்கு சார்லியின் பெயரில், படத்தின் லாபத்தில் 5 சதவீதத்தை வழங்க விரும்புகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். படக்குழுவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.