நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து விவேக்கின் மனைவி அருட்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று விவேக்கின் நினைவாக அவர் வசித்துவந்த சென்னை பத்மாவதி நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' என பெயர் சூட்டப்பட்டு, அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
இந்நிலையில் மறைந்த விவேக் வீடு அமைந்துள்ள சாலையில் சின்னக் கலைவாணர் விவேக் என்ற பெயர் பலகை திறக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விவேக்கின் குடும்பத்தினர், சென்னை மேயர் பிரியா, நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி, பாக்கியராஜ், பள்ளி மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.