"வாழ்க்கை சில நேரங்களில் கடினமான செங்கல் கொண்டு உங்கள் தலையில் தாக்கும். நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்" என்கிறார் கல்லூரி காதலர்களுக்கு மகனாகப் பிறந்து, பின்னாட்களில் தொழில்நுட்ப உலகைக் கட்டி ஆண்ட ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் முழுக்க சாதித்தவர்கள் பலர் இருக்கலாம். ஏன், ஸ்டீவ் ஜாப்ஸ் சார்ந்த தொழில்நுட்பத் துறையிலேயே பல ஆயிரக்கணக்கான சாதனையாளர்கள் உள்ளனர். ஆனால், தொழில் முனைவு கனவு கொண்டுள்ள இளைஞர்கள் பலருக்கு ஸ்டீவ் ஜாப்ஸே ஆதர்சன நாயகன். அவர்களிடம் காரணம் கேட்டால், அந்தப் பெயரில் உள்ள 'பிராண்ட் வேல்யூ' என்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் நெருங்கிவிட்டாலும், சந்தையில் அவரது ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பு பொருட்களுக்கும் அவரது பெயருக்கும் இருக்கும் 'பிராண்ட் வேல்யூ', பிறர் யாராலும் கட்டியெழுப்ப முடியாததே.
ஸ்டீவ் ஜாப்ஸ் என அறியப்படும் ஸ்டீவ் பால் ஜாப்ஸ், 1955-ஆம் ஆண்டு பிறந்து, தன்னைப் பெற்றவர்கள் கரங்களாலேயே பால் மற்றும் கிளாரா ஜாப்ஸ் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டவர். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத இத்தம்பதியின் அளவு கடந்த அன்பு வளையத்தினுள் வளர்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். படிப்பின் மீது பெரிய அளவில் ஆர்வம் இல்லாத ஸ்டீவ் ஜாப்ஸ், தட்டுத்தடுமாறி பள்ளிப்படிப்பை முடிக்கிறார். பின் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே கல்லூரி படிப்பைக் கைவிடுகிறார். ஆன்மிகம் மீது இருந்த அதிக நாட்டம், இந்தியாவின் இமயமலைப் பகுதியில் அவரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் செய்தது. பிரபல சாமியார் நீம் கரோலி பாபாவைச் சந்திக்க வேண்டுமென்பதே ஸ்டீவ் ஜாப்ஸ் விருப்பம். அதற்காக ஸ்டீவ் எடுத்த முயற்சி கைகூடும் முன்னே நீம் கரோலி பாபா மரணித்தது, ஸ்டீவ் ஜாப்ஸை விரக்தியடைச் செய்தது.
மீண்டும் அமெரிக்கா திரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ், பிரபல வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான 'அட்டாரி' நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறார். தன்னை விட 5 வயது மூத்த ஸ்டீவ் வாஸ்னிக் நட்பு ஸ்டீவ் ஜாப்ஸிற்கு இங்குதான் அறிமுகமாகியது. இருவருக்கும் இடையேயான நட்பு மற்றும் புரிதல் பலப்பட, இருவரும் இணைந்து புதிய நிறுவனத்தைத் தொடங்க முடிவெடுக்கின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் பின்புறம் இருந்த கார் நிறுத்தும் இடத்தில், இன்று உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கடைகளுடன் தன்னுடைய வணிகக் குடையை விரித்துள்ள ஆப்பிள் நிறுவன சாம்ராஜ்யத்தின் முதல் செங்கல் ஊன்றப்பட்டது.
"எனக்கு பிடித்தமான வேலை எது என்பதை மிக இளம் வயதிலேயே அடையாளம் கண்டுவிட்ட வகையில் நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. எனக்கு 20 வயது இருக்கும் போது நண்பர் வாஸ்னிக்குடன் இணைந்து எங்கள் வீட்டின் பின்புறமிருந்த கார் நிறுத்தும் இடத்தில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினோம். எங்களுடைய கடின உழைப்பால் தூசிகள் நிறைந்த கார் ஷெட்டில் தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் அடுத்த பத்து ஆண்டில் 4000 ஊழியர்கள் பணியாற்றக்கூடிய நிறுவனமாக உயர்ந்தது. சில உயர்தரமான கணினி வகைகளை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டோம். நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன்; வெளியேற்றப்பட்டேன். அப்போது என்னுடைய வயது 30. என்னுடைய இளமைக்காலம் முழுவதும் முழுமூச்சாகக் கவனம் செலுத்திய ஒரு விஷயம் கையை விட்டு நழுவியது, வாழ்க்கையே முடிந்துவிட்டது போன்ற உணர்வைத் தந்தது. அந்த உணர்விலிருந்து மெல்ல விடுபட்ட நான், அடுத்த 5 வருடங்களில் நெக்ஸ்ட், பிக்சர் என்ற இரு நிறுவனங்களைத் துவங்கி, நடத்தி வந்தேன். நெக்ஸ்ட் நிறுவனத்தின் வளர்ச்சியைக் கண்ட ஆப்பிள் நிறுவனம் அதை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்தது. ஆப்பிள் நிறுவனத்துடன் நெக்ஸ்ட் இணைந்ததும் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன்.நெக்ஸ்ட்டில் நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பமே இன்று ஆப்பிள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்றால் ஆப்பிள் நிறுவன வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டதுதான். அன்று அது நடத்திருக்காவிடில், இன்று ஸ்டீவ் ஜாப்ஸாக உங்கள் முன் நான் நின்றிருக்க முடியாது".
ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றத்திற்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்த ஆப்பிள் நிறுவனம், உச்சகட்ட நிலையாக திவாலாகும் நிலைக்குச் சென்றது. மேக்கின்டாஷ் கணினி மட்டுமின்றி ஐபோன், ஐபேட், ஐபாட் எனத் தொழில்நுட்ப உலகில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஏற்படுத்திய புரட்சி அன்றைய காலகட்டத்தில் சாதாரணமானதல்ல. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு குறித்த அப்டேட் வெளியாகும் போது அது நள்ளிரவு என்றாலும் அதுவரைக் காத்திருந்து, புதிய அறிவிப்பைத் திருவிழா போலக் கொண்டாடும் இளைஞர்கள் கூட்டம் தமிழ்நாட்டிலேயே கணிசமான அளவில் உண்டு. தனது தயாரிப்பிற்கு இது மாதிரியான ஒரு பிராண்ட் வேல்யூவை கட்டியெழுப்படுவதென்பது ஸ்டீவ் ஜாப்ஸைத் தவிர பிறருக்கு கனவிலும் சாத்தியப்படாதது.
"எனக்குப் பிடித்தமான ஒன்றை நோக்கி ஓடியதால்தான் நான் தொடர்ந்து ஓடினேன். உங்களுக்கு பிடித்தமான விஷயத்தைக் கண்டுபிடியுங்கள். விடை கிடைக்கும்வரை தேடுங்கள். இந்த வாழ்வில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மிகக் குறுகியதே. அதை அடுத்தவர்கள் வாழ்க்கையில் செலவழிக்காதீர்கள்" எனக் கூறி தொடர்ந்து நம்மை ஓடச் சொல்கிறார், ஸ்டீவ் ஜாப்ஸ்.
கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...