Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #17

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

sootchama ulagam part 17

 

மயக்கமடைந்த வாத்சல்யனின் முகத்தில் குளிர்ந்த நீரை அள்ளித் தெளிக்க, கதவைப் பற்றி எழுந்த வாத்சல்யனை பார்த்து, “பயந்துட்டீங்களா அத்தான்” என்ற மாலா, கலகலவென்று சிரிக்க ஆரம்பிக்க, அடுத்த நிமிடம் ஓடிச்சென்று அம்மாவின் அருகில் நின்று அவளை எழுப்பினான். 

 

திடுகிட்டு எழுந்த விசலாம், "என்னாச்சுப்பா... ஏன் பதட்டப்படுகிறாய்... மாலா எங்கே?” என்றபடி எழுந்து அமர, அம்மாவின் மடியில் படுத்து விசும்பினான். மகனின் தலையை வருடிக்கொடுத்தாள் விசாலம்.

"அத்தை... உங்கள் பிள்ளைக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. என்னைப் பார்த்து ரதி... ரதி என்று உளறினால் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். வெட்கத்தை விட்டு பக்கத்தில் உட்கார்ந்தால், தள்ளிவிட்டுட்டு ஓடி வந்துட்டார்." என்ற மாலாவின் குரலில் இருந்த எரிச்சலும், பரிதவிப்பும் விசாலத்திற்கு ஐயத்தை உண்டாக்கியது. மனசுக்குள் குலதெய்வமான ரேணுகா தேவியை நினைத்து துணை இருக்குமாறு வேண்டினாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு...

"நீ என் மருமகள்  மாலா இல்லை. விலகிப் போ" 

"பரவாயில்லையே... கண்டுபிடிச்சுட்டியே... நானும் உன் மருமகள்தான் விசாலம். விலகிப்போக மாட்டேன். பாவி உன்னால்தான்டி என் வாழ்க்கைப் போச்சு. உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்” என்றபடி ஆவேசமாய் விசாலத்தை நெருங்கியபோது, வாத்சல்யன் மாலாவின் உருவத்தில் இருந்த ரதியிடம் மண்டியிட்டுக் கெஞ்சினான். "மாலாவை விட்டுடு ரதி. தயவுசெய்து விலகிப் போ. நீ சொன்னபடியெல்லாம் கேட்கத்தானே செய்தேன். மாலாவை பிரிந்து உன்னிடம்தானே வாழ்ந்தேன். என் மேல் உனக்கு அன்பில்லையா?” 

"அன்பா... உன்னிடமா... என் காதலை உதாசீனப்படுத்தி மாலாவை மணந்தபோதே அது செத்துப் போச்சுடா." என்று விசும்பியபோது.... அந்த நேரத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த விசாலம், மாலாவின் உச்சந்தலையிலிருந்த முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் ஊஞ்சள் கம்பியில் இறுக்கமாய் கட்டினாள். “வாத்சல்யா இவளோட கை, கால்களைக் கட்டு” என்று மகனைத் தூண்ட...

"ஐயோ... வேண்டாம் மா. மாலா பாவம்"

"சொன்னதைச் செய்." என்ற அம்மாவின் உரத்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு கயிற்றால்  இறுக்கமாய் கட்டினான். அழுது அரற்றிய ரதியின் குரல் அக்கம்பக்கம் கேட்கும் என்ற பயத்தில் மாலாவின் வாயை இறுக்கமாய் மூடிய வாத்சல்யன், "ஏன்டி இப்படி இம்சைப்படுத்துறே... சந்தோசமாத்தானே வாழ்ந்தோம். உன் நினைவாக குழந்தை இருக்கிறது. உன்னை மறக்க மாட்டேன் ரதி. போய்டு ப்ளீஸ்"  என்று கெஞ்சினான்.

"எனக்கு நீ வேணும் வாத்சல்யா... இன்று ஒருநாள் மட்டும் எனக்கு சந்தோசத்தைக் கொடு. என்னைத் திருப்திப்படுத்து நான் போய்டுவேன் ப்ளீஸ்."

"இல்லை ரதி. இது சரியில்லை."

"என்னை மறுத்துப் பேசும் அளவிற்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா... முட்டாளே, உன் தாய் விசாலத்தை கொன்றுவிடுவேன். கட்டுப்பட்டு உட்கார்ந்திருப்பதாக நினைக்காதே. என் சக்தியைப் பார்க்கிறாயா...?” என்றபடி கைகளையும் கால்களையும் உதறி, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டதும்  பயத்தில் உறைந்து போனான் வாத்சல்யன்.

"அத்தான்... என் தலை வலிக்கிறது தலைமுடியை அவிழ்த்துவிடுங்கள்" என்ற மாலாவின் குரலில் பதற்றமாகி, அவிழ்த்துவிட்ட அடுத்த நொடி, வாத்சல்யனை அணைத்துத் தூக்கினாள் ரதி. மாலாவின் உருவிலிருந்த ரதியின் இந்த செய்கை வாத்சல்யனுக்கு பிரமிப்பை உண்டாக்கியதோடு, உன்மத்த நிலைக்குத் தள்ளப்பட்டு ஒருவிதக் கிறக்கத்தோடு அமைதியானான். வெற்றிப் புன்னகையொடு வாத்சல்யனின் இதழ்களில் முத்தமிட்டபோது... "ச்சீ... ச்சீ... எழுந்து வாடா" என்ற விசாலம் அதட்டிய அதட்டலில் ரெளத்திரமான ரதி, சாகசமாய் தன்னை மறைத்துக்கொண்டு... சற்று விலகியபடி...

"அத்தை.. உன் பிள்ளையோடு தனியா இருந்து எத்தனை காலமாச்சு. இங்கிதம் தெரியாமல் வந்து நிற்கிறீங்களே..." என்று மாலாவின் குரலில் பேசி தன் வெட்கத்தை வெளிப்படுத்த... ஒரு நிமிடம் விசாலம் ஆடிப்போனாள். விசாலத்தின் இந்தத் தயக்கத்தையும், வாத்சல்யனின் தன்நிலை மறந்த அந்த தருணத்தையும் தனக்கு சாதமாக்கிக்கொள்ளத் துரிதமாக செயல்பட்டாள். வெட்கம் மாறாமல் விசாலத்தை வெளியே அனுப்பி கதவை மூடினாள். மோகனமாய் சிரித்தபடி வாத்சல்யனை நெருங்கினாள். வாத்சல்யனின் மனமும் உடலும் கிறங்கிய நிலையில் மாலாவை அணைத்துக்கொள்ள... ரதி தன்னை மாலாவின் உடலில் நிலைநிறுத்திக்கொள்வதற்கான முயற்சியைத் துவங்கினாள். வெற்றிக் களிப்போடு வாத்சல்யனை முத்தமிட்டு, “ஐ லவ் யூ” என்றவள், விடிவெள்ளி முளைத்ததும் மாலாவிடமிருந்து விலகி தன் குழந்தையின் தலையை வருடிக்கொடுத்தாள். அறையை விட்டு வெளியேறி தனக்குப் பிடித்த மகிழம்பூ மரத்தை நோக்கிப் போனாள்.

 

கதிரவனின் வெப்பக் கதிர்கள் முகத்தை வெம்மையாக்க அவசரமாய் எழுந்தாள் மாலா. அருகில் உறங்கிக்கொண்டிருந்த வாத்சல்யனைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். "அத்தை... அத்தை...” என்றழைத்தபடி வந்தவள், ரதியின் குழந்தைக்கு சங்கில் பால் புகட்டிக்கொண்டிருந்த விசாலத்தைப் பார்த்தாள். அத்வைத் பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான். மாலாவை கண்டதும் "ம்மா.." என்ற அத்வைத்  தட்டு தடுமாறியபடி  மாலாவாவை நோக்கி வர...

"குழந்தையைத் தூக்காதே. முதலில் போய் குளிச்சுட்டு வா." என்ற விசாலத்தை முறைத்தாள் மாலா.

"என்னடி  முறைப்பு?”

"நான் இங்கதானே இருந்தேன். உங்கள் பிள்ளயோட ரூம்க்கு எப்படி போனேன்"

"ம்ம்ம்... உன்னைத்  தூக்கிட்டுப் போனானோ என்னமோ... நேத்து என்னை வெளியே தள்ளி கதவை சாத்தியது மறந்து போச்சா.."

"என்ன உளறல் இது..?” 

"உளறலா...? என்னடி சொல்றே?” விசாலம் அதிர்ச்சியடைந்த அந்த நொடியில் மாலா மயங்கி சரிந்தாள்.

"வாத்சல்யா..." என்று விசாலம் போட்ட சத்தத்தில் அரக்கப் பார்க்க ஓடிவந்த வாத்சல்யன், மனைவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளைப்  பார்த்தபடி கீழே அமர்ந்தான். கண்விழித்த மாலாவின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"அத்தை... நேத்து என்ன நடந்திருக்கும்னு என்னால் ஊகிக்க முடியுது. இனி அப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது" என்றபோதே சத்தமிட்டு சிரித்தாள். "ஏய்ய்... பட்டி உன் மனைவி என்னை விரட்டப் பார்க்கிறாள். ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்லே... கொலை விழும்! முதல் பலி உன் பிள்ளைதான்! உன் குலதெய்வத்தை நம்பூதிரியிடம் சொல்லி கட்டிப் போட்டிருக்கேன். கரடியா கத்தினாலும் வராது. உங்கம்மாவை கனவு காணாமல் இருக்கச் சொல்லு.  இனி மாலாவும் நான்தான். ரதியும் நான்தான்.! பொறுத்துக் கிடக்கணும்! இல்லேனா கூண்டோட கைலாசம்தான்.

 

அதிர்ச்சியில் விசாலம் உறைந்துபோய் நிற்க, வாத்சல்யன் மண்டியிட்டு இறைஞ்சினான். "வேண்டாம்...! தயவுசெய்து விட்டுடு ரதி. உனக்கு நான் எந்த கெடுதலும் பண்ணலையே..." 

 

சத்தமான சிரிப்புக்குப் பின், "உன்னை மீட்க நினைத்து உன் மனைவி மாட்டிக்கிட்டாள். என் அத்தனை செயல்களையும் மோப்பம் பிடிச்சிட்டா... நான் பிரசவித்து மயக்கமா கிடந்தபோது என் உயிர் போனதுக்குக் காரணம் உன் மனைவிதான். இது தெரியுமாடா பட்டி...?

"ஐயோ... எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம்." வாத்சல்யனின் அலறல் தெருவரை கேட்க... ஊரே நின்று பார்த்துவிட்டுப் போனார்கள்.

 

தன் பிள்ளையைக் காப்பாற்ற தாய் எந்த அளவிற்கு இறங்குவாள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விசாலம் விளங்கினாள். மாலா மெச்சி மெச்சி படித்த தன் சித்தப்பாவின் டைரியை படிக்க ஆரம்பித்தாள். மாலா அடிகோடிட்ட வார்த்தைகளை மனதில் இருத்தினாள். அவர் குறித்து வைத்த மந்திரங்கள் ஒன்றையும் விடாமல் மனதில் பதிய வைத்துக்கொண்டாள். தன் குலதெய்வத்தின் கட்டுகளை அவிழ்க்க முடியாமல் திணறினாள் விசாலம்.  

 

டாக்டர். சசிதரணியிடம் தன் மனபாரத்தை இறக்கி வைத்தான் வாத்சல்யன். ரதியின் ஆர்ப்பாட்டங்களைக் கேட்ட சசிதரணி அச்சமடைந்தாள். “இனி நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். அம்மாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிப் போங்கள். மாலாவை என் வீட்டில் வைத்து கவனித்துக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்த நம்பூத்ரி ஒருவர் இருக்கிறார். அவரிடம் உண்மையைச் சொன்னால் சரி செய்துவிடுவார்” என்று சொன்னபோது... வாத்சல்யன் தயங்கினான்.

"என்னை நம்புங்கள்! எந்த உயிருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது" என்ற சசிதரணி, வாத்சல்யனை கவலையுடன் பார்த்தாள்.

"இல்லை சசி! மாலாவை தனியே விட்டுச் செல்ல மாட்டேன். எது வந்தாலும் சேர்ந்தே அனுப்பவிச்சுக்கிறோம்."

"சரி. ஆனால் ஒன்று... மாலாவின் உடலில் ரதியின் ஆவி நிரந்தரமாய் தங்க பல சூழ்ச்சிகள் செய்யும். உங்கள் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். விழிப்போடு இருங்கள்!” என்ற சசிதரணி வருத்தத்துடன் வெளியே செல்ல...

"நில்லுடி சசி. நீ என் தோழி மட்டுமல்ல, நெருங்கிய உறவுக்காரி. அதை மறந்து அவனுக்கு ஐடியா சொல்லித் தரியா... சபாஷ்!” என்ற ரதியின் குரல் கேட்டு அதிர்ந்தாள். சினத்துடன்  வந்து நின்ற மாலாவை பயத்துடன் பார்த்தாள்.

 

(திகில் தொடரும் )

 

- இளமதி பத்மா

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #16