வாத்சல்யன் ரதியின் விருப்பப்படி கேரளாவிற்கு மாற்றலாகிச் சென்ற பின்பு புலம்பிக்கொண்டே இருந்தாள் விசாலம். காலம் விரைந்துகொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணியாய் தாயாகப் போகும் மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்துடன் வளைய வந்துகொண்டிருந்தாள் மாலா.
தனக்கு குழந்தை நிற்கலையே என்ற ஏக்கத்திலும் மன அழுத்தத்திலும் அழுது அரற்றிக்கொண்டிருந்தாள் ரதி. சந்தோசம் தொலைந்த நிலையில் எதிலும் பிடிப்பில்லாமல் கடமைக்காக வாழ்வதில் என்ன சந்தோசம் இருக்கிறது என்ற எண்ணத்தில், உயிர்ப்பின்றி உயிரோடு இருந்தாள் ரதி.
ஒரு புதன்கிழமை காலை எட்டு மணிக்கு மாலா அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அம்மா அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும் பார்த்தவுடன், வாத்சல்யன் புறப்பட ஆயத்தமாக....
"உனக்கு என்னைப் பற்றிக் கவலையில்லை. என் உடல்நிலை குறித்தும் அக்கறை இல்லை. ஆனால்... உன் குடும்பம் மட்டும் முக்கியம்! இப்போதெல்லாம் நீ நிறையவே மாறிப் போனாய்." என்ற ரதியை வருத்தத்தோடு பார்த்தான்.
"எட்டு மாதங்களாக அம்மாவைக் கூடப் பார்க்கவில்லையென்று தெரிந்தும் என்னை இம்சிக்காதே ரதி! குழந்தையைப் பார்த்துவிட்டு இரண்டே நாளில் திரும்பிடுவேன்."
"நீ வந்தால் சந்தோசப்படவோ, வரவில்லையென்றால் வருத்தப்படவோ என் மனதில் தெம்பில்லை. உன் விருப்பப்படி செய்! "
"இப்படி விட்டேத்தியாய் பேசாதே. உனக்கு எந்தக் குறையுமில்லை. நமக்கு குழந்தை பிறக்கும் ரதி. வீணாக உன்னை வருத்திக்கொள்ளாதே."
"வருத்திக்கொள்ள இனி என்ன இருக்கிறது....? பாலைவனத்தில் வார்த்த நீர் எப்படி ஒன்றுமில்லாமல் போகுமோ... அப்படியாகிவிட்டது என் வாழ்க்கை!"
"கழிவிரக்கம் ஆபத்தானது ரதி. சோர்ந்து போகாதே டியர்! நல்லது நடக்கும்!"
"ம்ம்ம்... குழந்தையைப் பார்த்ததும் என்னை மறந்து அங்கேயே உட்கார்ந்து விடாதே." என்ற ரதியின் கூற்றுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு, சிரித்தபடி விடை பெற்றான்.
ரதியின் மனம் உலைநீர் போல் கொதித்துக்கொண்டிருந்தது. எட்டு மாதங்கள் என்னுடனே இருந்தவன், குழந்தை என்றதும் குதூகலமாய் கிளம்பிவிட்டான். இதை இப்படியேவிட்டால் தன்மேல் ஈர்ப்பில்லாமல் போய்விடும்! உடம்பில் குறையில்லை. ஆனால் ஜாதகத்தில் குறையிருந்தால்... ஒருமுறை எதற்கும் பார்த்துவிடலாமா என்ற யோசனை செய்தாள். அழைப்பு மணி ஒலிக்க எழுந்துபோன ரதி, சசிதராவைப் பார்த்து வியந்தாள்.
"வா... வா... அதிசயமெல்லாம் நடக்கிறதே. உனக்கு இன்று பகல் டியூட்டி ஆயிற்றே...."
"ரதி உன்னிடம் ஒரு ஆலோசனைக்காக வந்தேன்."
"ஆலோசனை சொல்லும் அளவிற்கு எனக்கு உடலிலும் தெம்பில்லை. மனசிலும் தெம்பில்லை சசி"
"என்னாச்சு... வாத்சல்யன் ஊரில் இல்லையா" என்றபடி நாடியை சோதித்தாள்.
"ஹேய்... நீ அம்மா ஆகப்போறே..." என்ற வார்த்தைகள் தேனாய் இனித்தது. நிஜமாகவா.... நிஜமாகவா... என்று இரண்டுமுறை வியந்தவளை ஆரத்தழுவிக்கொண்ட சசிதரா, “முட்டாள் டாக்டர் நீ...” என்று கேலி செய்ய...
"டென்சன் சசி. மாலாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சேதி கிடைத்ததும் உடனே புறப்பட்டுவிட்டான். மாலா இவனைவிட்டு விலகி நின்றாலும், வாத்சல்யன் விடுவதாக இல்லை. அவள் தாய்மையடைந்த பிறகு, என்னிடம் ஈர்ப்புமில்லை. காதலும் இல்லை."
"நீயாக கற்பனை செய்துகொள்ளாதே... காதல் இல்லாமலா நீ தாயாகப் போகிறாய்..?"
"அத்தி பூத்தாற் போல்தான் இந்நிகழ்வு! எப்போது நடந்ததென்றே நினைவில்லை. இப்போதெல்லாம் என்னைத் தவிர்க்கிறான். கேட்டால் சமாதானம் செய்கிறான். தூக்கத்தில் மாலா, மாலா என்கிறான். வாத்சல்யன் மாலாவின் நினைவாகவே இருக்கிறான்."
"ஓகே... ரிலாக்ஸ்! எல்லாம் சரியாகிடும்! தாயாகப் போகிறாய், சந்தோசமாக இரு. இது நீயாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நாங்கள் எவ்வளவு சொல்லியும் நீ கேட்கவில்லை. அணுசரித்து போ ரதி"
"ம்ம்ம்" என்ற ரதி சசியுடன் டியூட்டிக்கு புறப்பட்டாள்.
******** ******** ***********
குழந்தையைவிட்டுப் பிரிய மனமில்லாத வாத்சல்யன் ஒருவாரம் விடுமுறையை நீட்டித்தான். மாலாவின் பாரா முகம் சங்கடப்படுத்தினாலும் குழந்தையோடு நெருக்கமானான். அப்பாவைப் பார்... அப்பாவைப் பார் என்று தன்னை மகனிடம் நிரூபித்துக்கொண்டே இருந்தான். ஒரு எள்ளல் நகையோடு கடந்து செல்லும் மாலாவை முறைத்தான். அம்மாவின் மேலிருந்த பிரியம் கூடுதலானது. தொட்டிலில் இட்டு, பெயர் சூட்டிப் புறப்பட மேலும் பதினைந்து நாட்கள் கூடுதலாக ஆனது. ரதி உள்ளே கொதித்தாள்! ஆனால் வெளியில் அமைதியாக இருந்தாள்.
சென்னைக்கு மாற்றலாகிப் போகும் எண்ணம் தலைதூக்க, ரதியோடு பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் முறைத்துக்கொண்டு ஒரே வீட்டில் இரண்டு தீவுகளாய் மாறி, தனித்தனி சமையல் என்றாகிப் போக... வாழ்க்கை சூன்யமானது. தாய்மையடைந்திருக்கும் ரதியை கவனமாய் பார்த்துக்கொள்ளும்படி சசி சொன்னதும், வாத்சல்யன் பரபரப்புடன் வீட்டிற்கு வரும்போது, ரதி டியூட்டிக்கு புறப்பட ஆயத்தமாகி இருந்தாள்.
"சசி சொன்னாள். ஏன் என்னிடம் சொல்லவில்லை"...? என்று கதவைப் பார்த்தபடி பேசினான்.
"அவசியமில்லை என்று நினைத்தேன். நானே வேண்டாதவளாகிவிட்ட பிறகு, இந்தக் குழந்தை மட்டும் வேண்டுமா உனக்கு...? நீ எப்போது வேண்டுமானாலும் போகலாம்."
"பைத்தியமா உனக்கு...? என்னால் சென்னைக்கும் கேரளாவிற்கும் பறந்துகொண்டே இருக்க முடியாது. ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதுதான் உலகத்துக்கே பறைசாற்றிவிட்டாயே... பிறகென்ன தயக்கம்..?”
மாலாவோ அம்மாவோ உன்னை ஒன்றும் சொல்லப்போவதில்லை. நம் குழந்தை உறவுகளோடு ஒட்டி வளரட்டுமே.."
"அவசியமில்லை! உன்னைப் போல் ஒரு சுயநலக்காரனைக் காதலித்து மணந்ததற்கு வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்! போவது என்று முடிவான பின், வெற்று சமாதானங்கள் தேவையற்றது. போனால் திரும்பி வராதே. உன்னை என் குழந்தை பார்க்க வேண்டாம். அது ஆணோ... பெண்ணோ... அதற்கு உன்னை அறிமுகப்படுத்த மாட்டேன்." ஆக்ரோஷமாய் பேசியவளை வருத்தத்துடன் பார்த்தான்.
"ரதி... உன்னைக் குறை சொல்லவில்லை. யோசித்துப் பார், தனியாக உன்னைத் தவிக்கவிட்டுச் செல்ல முடியுமா...? தவிர என் குழந்தை அப்பா இல்லாமல் வளர்வதை நான் விரும்பவில்லை. பிறந்த குழந்தையும், பிறக்கப் போகும் குழந்தையும் எனக்கு கண் போன்றவர்கள். இருவருக்கும் என் அன்பை சமமாக கொடுப்பேன். என்னை நம்பு ரதி!
"இல்லை! ஒரு மனைவிதான்! ஒரு குழந்தைதான்! எந்த மனைவி, எந்தக் குழந்தை என்று நீ முடிவெடு."
"என்னை காலத்துக்கும் குற்றவாளியாக்குவதுதான் உன் நோக்கமா...? மாலா ஒருநாள் கூட இப்படிப் பேசியதே இல்லை!"
"அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால் உன் அக்கறை என் மீதும் நம் குழந்தை மீது மட்டுமே இருக்க வேண்டும்." என்ற ரதியின் கண்கள் ஓரிடத்தில் நிற்காமல் அலைந்ததில்... கலவரமானான் வாத்சல்யன். பதில் பேசாமல் அருகே சென்று அணைத்துக்கொண்டான். "டியர்... ஐ லவ் யூ... சரியோ.. தவறோ... நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம். உன்னைவிட்டுப் போக மாட்டேன்" என்றான்.
ரதியின் நிலைமை குறித்து மனநல மருத்தவரோடு பேசினான். "அதிக அன்பும், குற்ற உணர்வும் ரதியை நிதானமிழக்கச் செய்கிறது. குழந்தை பிறந்த பிறகு உடல், மனம் இரண்டுமே சீராகிவிடும். அதுவரை பொறுத்திருங்கள். மாற்றம் இல்லையென்றால் மருத்துவம் பார்ப்போம்" என்று தைரியமூட்டிய பிறகே சகஜ நிலைக்கு வந்தான். அம்மாவிடம் ரதியின் நிலைமையை விளக்கிச் சொன்னான்.
"இதென்னடா சோதனை...? நீ எப்படி அவளைத் தனியாகப் பார்த்துக்கொள்வாய்...குழந்தை பிறந்தால் கவனிக்க ஆள் வேண்டுமே..."
"அதுக்கெல்லாம் ஒரு நர்ஸ் போட்டுக்கலாம். அவங்க பெரியம்மா வரேன்னாங்கம்மா... நீ கவலைப்படாதே. அத்வைத்தை கவனித்துக்கொள். ரதி சரியாகணும், என் ஒரே கவலை அதுதான்."
"கவனமா பார்த்துக்கோடா. யார் செய்த தீவினையோ உன்னைச் சுத்தி அடிக்குது."
"ம்ம்ம்..." என்ற வாத்சல்யன், ரதி அழைக்கும் குரல் கேட்டு ஃபோனை கட் செய்துவிட்டு விரைந்தான். சாப்பிட்ட அனைத்தும் வெளியே வாந்தியாக வந்து விழ, ஆதரவாய் பிடித்துக்கொண்டு வாயைக் கொப்பளிக்க வைத்து, படுக்கையில் கொண்டுவிட்டான். கண்கள் குழிவிழுந்து போய் களையிழந்து காணப்பட்டாள் ரதி.
"நான் பிழைப்பேனா என்று தெரியலை. மாலாவிடம் மன்னிப்பு கேட்கணும்! வரச்சொல்லேன் ப்ளீஸ்..." என்ற ரதியின் கெஞ்சல் மனதை நெகிழ்த்த, "உனக்கொன்றும் ஆகாது. புலம்பாமல் இரு ரதி" என்ற வாத்சல்யன் முன்னறைக்கு வந்து நின்று கண்ணீர் விட்டான். ரதியின் பெரியம்மா வந்ததும் வாத்சல்யன் சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். காலம் விரைந்தது!
ஒரு விடிகாலை பொழுதில் வலி தாங்காமல் எட்டு மாதத்திலேயே ஒன்றரை கிலோ எடையில், தோலும் எலும்புமாய் பெண் குழந்தை பிறக்க... ரதி நினைவு வராமலே உயிர் துறந்தாள். இங்குபேட்டரில் பாதுகாப்பாய் வைத்து கவனிக்க வேண்டிய நிலை. இந்தக் குழந்தையாவது பிழைக்குமா என்ற கவலையோடு, அம்மாவிற்குத் தெரிவித்தான். நீ வர முடியுமா அம்மா... இறைஞ்சி கேட்டபோது, மாலாவும் ஒருவயது கூட நிரம்பாத அத்வைத்தை தூக்கிக்கொண்டு அத்தையுடன் புறப்பட்டாள்...!
( திகில் தொடரும்....)
- இளமதி பத்மா
இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #14