Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #14 

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

 

sootchama ulagam- part 14

 


 
மாலாவின் கையில் தாத்தாவின் டைரியைப் பார்த்ததும் சத்தமில்லாமல் தன் அறைக்குத் திரும்பினான் வாத்சல்யன். அதிர்ச்சியும், பயமும் ஒன்று சேர்ந்து அவனை நிம்மதியின்றி தவிக்க வைத்தது. குழந்தை உண்டாகியிருக்கும் இந்த நேரத்தில் எதற்கு தாத்தாவின் டைரியைப் படிக்கிறாள்...? குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால்... எப்படி சொல்வது.... சொன்னால் கேட்பாளா..."? அப்படி அந்த டைரியில் என்னதான் இருக்கிறது...?! 


 
பல கேள்விகள் மனதை குடைய, மறுபடி எழுந்து மாலாவின் அறை வாசலில் நின்று, "வரலாமா..."? தயங்கியபடி கேட்க... 

 
"வரலாம்! ஆனால் அருகில் வரக்கூடாது." 

 
"நான் உன் புருசன்டி" 

 
"அந்த காலம் முடிஞ்சு போச்சு. இப்ப நீங்க ரதியோட கணவன்" 

 
"டாக்டர் கொடுத்த ரிப்போர்ட் எங்க வச்சுருக்கே"...?

 
"ஏன்... பார்க்கனும்? அது என் குழந்தை."! 

 
"மாலா... விளையாடாதே. என் வாரிசுடி அது! 


"அப்படியா... உங்க வாரிசுனு நிச்சயமா தெரியுமா"...?  கேட்டு முடிப்பதற்குள் மாலாவின் கன்னத்தில் அறைந்தான்.

 
"நானும் பொறுத்துப் பொறுத்துப் போறேன். ஓவரா பேசுறே... உன்னோட திமிரையெல்லாம் எங்கிட்ட காட்டாதே. உங்கப்பனைப் போல் உதவிக்கு வந்தவளை படுக்கையில் சாய்க்கலை. ரதி என்னை காதலிச்சவ! எனக்காக விட்டுக் கொடுத்து விலகிதான் நின்னா. என் விதி என்னென்னமோ நடந்து போச்சு. அதை நீ ஊதி ஊதி பெரிதாக்கி என்னை விட்டு விலகிப் போனாய். நான் அவளைத் தேடிப் போனேன். கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். அது தப்பா... உன் தாத்தாவுக்குக்  கூடத்தான்இரண்டு பொண்டாட்டி. அந்தக் கிழவன் உனக்கு தெய்வம்! நான் அயோக்கியனா...? 

 
"என் தாத்தா பத்தி பேசாதீங்க. அவர் செய்தது தியாகம்! நீங்க செய்தது கொழுப்பு! உங்க ஆட்டமெல்லாம் கொஞ்ச காலம்தான்."  

 
"என்னடா இங்க ரகளை...? என்றபடி வந்த விசாலம், மாலாவின் கன்னத்தில் கைவிரல்கள் அடையாளத்தைப் பார்த்ததும் வெகுண்டாள். 

 
"அறிவிருக்கா டா... பிள்ளைதாச்சியை அடிச்சிருக்க."

 
"அவள் என்ன பேசினாள்னு தெரியுமா மா... இது உன் குழந்தைதானு நிச்சயமா தெரியுமானு கேட்கிறா... தெரிஞ்சோ தெரியாமலோ... தப்பு பண்ணிட்டேன். அதுக்காகக் குத்திக்கிட்டே இருப்பாளா... ஒரேயடியா ஒழிஞ்சு போனாதான் இவளுக்கு திருப்தினா...  ஒழிஞ்சு போறேன். இந்தப்பக்கமே வரமாட்டேன். இரண்டில் ஒன்று கேட்டுச் சொல்லும்மா." 
 

"நீ பேசலை டா.  உன்னை அந்த மாயப்பிசாசு பேச வைக்கிறா... நீ போகனும்னா அவளோடதான் வாழப்போறேனு சந்தோசமா சொல்லிட்டுப் போ. தேவையில்லாமல் அவளை அடித்து, சண்டை போட்டு, எங்களைக் கஷ்டப்படுத்திட்டுத்தான் போகனுமா...? என்ற விசாலம்... 
 

"நீ ஏன்டி... எடக்கு மடக்கா பேசி அடி வாங்குறே... அவளைப்பாரு எப்படி மயக்கி வச்சிருக்கானு..." 

 
"அவள் செய்றதையெல்லாம் நான் செய்தால்.... உங்க பிள்ளை பைத்தியமாத்தான் திரியனும்! அந்தப் பாவம் எனக்கெதுக்கு...? என்று சொன்ன மாலாவை முறைத்து விட்டுப் போன வாத்சல்யன் மருத்துவமனைக்கு சென்றதும் முதல் வேலையாக... மாற்றல் வேண்டி சேர்மனை போய் பார்த்தான்.
 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த இரண்டு நாளைக் கொண்டாடி களிக்க, கேரளா செல்ல விமானம் ஏறினான். 

 
நீளமாய் அழைப்பு மணி ஒலிக்க  கைவேலையை அப்படியே விட்டு வாசலுக்கு விரைந்தாள் ரதி. அவள் எதிர்பார்த்தபடி வாத்சல்யன் சிரிப்புடன் நின்றிருந்தான்.  

 
"நீயில்லாமல் எப்படி தவித்துப் போனேன் தெரியுமா...? ஏதேதோ கெட்டக் கனவு வேறு... நேற்று நான் தூங்கவே இல்லை." என்றபடி வாத்சல்யனை அணைத்தபடி உள்ளே அழைத்து வந்தாள் ரதி. மாலா உன்னோடு ராசி ஆயிட்டாளா... இல்லையா... என்று கேட்க... 
 


"இல்லை! என்றவன்... அதிகம் பேசிட்டா கோபத்தில் அடிச்சுட்டேன். அம்மா எப்போதும் அவள் பக்கம்தான்! " 
 


"அட டா... அடித்தாயா...?! என் வத்சு அப்படிப்பட்டவனா... எனக்குத் தெரியலையே..." என்ற ரதி மனசுக்குள் மந்திரம் ஜெபித்தபடி வாத்சல்யனின் கண்களைப் பார்த்தாள். " என்ன சாப்பிடுறே... சொல்லு செய்து தரேன் என்ற ரதியிடம்....  
 


"ஒன்றுமே வேண்டாம்! மனசு சரியில்லை" 
 


"இராப்பட்டினி உடம்புக்கு நல்லதல்ல. பால் மட்டுமாவது சாப்பிடு என்றவள் கொண்டு வந்து கொடுத்ததை வாங்கிக் குடித்தவனுக்கு சுவையில் சற்று வித்தியாசம் தெரிய.... 
 


"ஏதாவது கலந்தாயா..."?   
 


"பனங்கற்கண்டு கலந்தேன். ஏன் பிடிக்கலையா... கொடு நான் குடிக்கிறேன்" என்ற ரதி மீதியிருந்த்தை குடித்தாள். அதிகம் கலந்துட்டேன் போல. இனி ஜாக்கிரதையாய் இருக்கனும் என்று மனசுக்கு எச்சரிக்கை செய்தாள்.  

 
"ரதி... மாலாவிற்கு ஏன் வீடியோ அனுப்பினாய்...?  இது அதிகபட்சமா உனக்குத் தெரியலையா"...? 
 


"பார்த்தாளாமா... பொறாமையில் பொங்கட்டும் என்றுதான் அனுப்பினேன்." 
 


"அவசியமா இது...? குரூர எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே  ரதி. அது நம் வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஏற்கனவே செய்த தவறுகள் போதாதா..."? 

 
"தவறு செய்தது நீயா - நானா... சொல்!  செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யாவிட்டால்... மோட்சம் கிடைக்காதாம்! வாயேன் ப்ளீஸ். எனக்கொரு குழந்தை வேண்டும். மாலா இதில் என்னிடம் தோற்று போகப் போக வேண்டும். உன் வாரிசை நான்தான் முதலில் சுமக்கனும்! 

 
"உன் ஆசை நிறைவேறாது. மாலாவிற்கு இது இரண்டாவது மாதம்! என்ற வாத்சல்யனை கீழே தள்ளினாள். இல்லை! ஏதேனும் செய்! கர்ப்பத்தைக் கலைக்கச் சொல். மறுத்தால் நீயே கலச்சுடு. அவள் பெத்துக்கக் கூடாது. ஆவேசமாய் கத்தினாள். அனைத்திலும் அவள்தான் முன் நிற்கிறாள்." 
 


"ரதி... நீ பெண்ணா... பேயா... ஏன் இவ்வளவு மூர்க்கம்."..?   

 
"பேய்தான்!  உன்னைக் கவர நினைத்தேன். சந்தர்ப்பம் வாய்த்த போது சாதித்துக் கொண்டேன். கருக்கலைப்பை நீ செய்கிறாயா... நான் செய்யட்டுமா...? இங்கிருந்தே அதை என்னால் செய்ய முடியும்! என்ற ரதியின் கண்கள் குரோத்த்தை உமிழ்ந்ததை கவனித்தான்.  

 
"ச்சீ... என் முதல் வரிசை அழிக்க நினைக்கிறாயா ரதி... உனக்கு மனசாட்சியே இல்லையா...உன்னையா காதலித்தேன்..."????  

 
"உன் வரிசை நான்தான் சுமக்கனும்! நான்தான் சுமக்கனும் என்று அலறியபடி மயங்கி விழுந்தவளைத் தாங்கிக்கொண்டான். மனம் முழுக்க பயம் வியாபித்தது. என்னவாயிற்று இவளுக்கு...?  மனசிதைவிற்கான அறிகுறியாய் இருக்குமோ... சைக்காலஜி டாக்டரிடம் அழைத்துப் போகலாமா... எதனால் இத்தனை பாதிப்பு...? நினைத்து நினைத்து கலங்கிப் போனான் வாத்சல்யன்! 


மறுநாள் விபரீதமாய் எதுவும் நடக்கவில்லை. விடியும் வேளையில் எழுந்து அத்தனை வேலைகளையும் செய்தாள்.வாத்சல்யன் ரதியை கண்கொட்டாமல் பார்த்தான். 


இவளா... நேற்று அப்படி பேசினாள்...? நம்ப முடியவில்லை! ஆனால்... அனைத்தும் நிஜம்! மாலா தாய்மையடைந்திருப்பதை இவளிடம் சொல்லியிருக்கக்க் கூடாது. இனி மாலா பற்றி பேசவே கூடாது" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.  
 
"இன்று எங்காவது வெளியே போகலாமா..."? மிருதுவாக கேட்டான் வாத்சல்யன். 


"வேண்டாம்! இந்த இரண்டு நாட்களும் உனக்கானது "என்று கண்சிமிட்டி சிரித்தாள். 


"நீ பொல்லாதப் போக்கிரி!" என்றவாறு ரதியை அணைத்துக் கொண்டபோது ரதியின் உடல் நடுங்கியது! 


"எதற்கு இந்த நடுக்கம்.."..?  


"எனக்கு பயமா இருக்கு வத்சு. குழந்தை பிறக்கும் போது நான் செத்துப் போய்விட்டால்...? 


"ஏன் இந்த விபரீதக் கற்பனை..."? 

 
"என்னமோ தெரியலை. பரிதவிப்பா இருக்கு"! 

 
"ரிலாக்ஸ் ரதி. நீ டாக்டர் என்பதை மறக்காதே டியர்" 

 
"என்ன சொன்னாய்...? டியர் என்றா...? இப்படி நீ அழைத்ததில்லையே..." 

 
" So What.. இனிமேல் அழைக்கிறேன்! என்ற வாத்சல்யன் எது எப்படியானாலும்... நீ எனக்கு ஸ்பெஷல்தான் டியர்." என்றான்.

 

கணவனை பாதுகாக்க மாலாவும், வாத்சல்யனை முழுவதுமாய்  கவரும் முயற்சியில் ரதியும் தீவிரமாய் செயல்பட, தன்  வாழ்வில் ஊழ்வினை இடையில் வந்து உறுத்தக் காத்திருந்த்தை அறியாது போனாள் ரதி.

 

(திகில் தொடரும் ) 

 

முத்தைய பகுதி : இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! ‘சூட்சும உலகம்’ #13