அறுவை சிகிச்சையை முடித்து விட்டு சோர்வாக தன் அறைக்கு வந்த ரதி ஃபேனை தட்டி விட்டு அமர்ந்தாள். இரண்டு நாட்களாக வாத்சல்யன் பார்த்தும் பார்க்காமல் போய்க் கொண்டிருந்ததை நினைத்து வருந்தினாள். அம்மாவோ அல்லது மனைவியோ அவனைக் கண்டித்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி பாராமுகமாய் இருக்க மாட்டான். தனக்கு பெரிசாய் எந்த எதிர்பார்ப்புமில்லை என்று தெரிந்தும், விலகி நிற்கிறான். மூடிய கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது. யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க, அவசரமாய் கண்களைத் துடைத்துக் கொண்டாள் ரதி.
" எஸ்... கம் இன்! என்று குரல் கொடுக்க... திறந்த கதவின் நடுவில் வாத்சல்யன் நின்றிருந்தான். பொங்கி வந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கினாள்.
" டியூட்டி பார்க்காமல் என்ன பண்ற நீ.... "
" ஒரு நாள் முடியலைனா நீ பார்க்க மாட்டியா... ? நீ என் ஃபிரண்டா... எனிமியா... இரண்டு நாளா... பார்த்தும் பார்க்காத மாதிரி போவதற்கு என்ன காரணம் சொல்லப் போற..."
" உனக்குத் தெரியாதா... வீடு வரை வந்து கலகம் பண்ணணுமா...? அம்மா என்னை சந்தேகப்படுறாங்க. மாலாவை சமாதானப்படுத்துவது எத்தனை சிரமம் தெரியுமா...? இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படித் தனியாவே இருக்கப் போற... என்னால் நிம்மதியா இருக்க முடியலை!
" அது என் தவறில்லை. நீ மாலாவோடு சந்தோசமாதானே இருக்கே... நிம்மதி இல்லைனு கதை சொல்லாதே... உங்கம்மா உனக்கு முக்கியம்! காதல் முக்கியமில்லை. எனக்கு காதல் முக்கியம்! என்னால் தனியாக வாழ முடியும்!
" அது சாத்தியமில்லை ரதி! உடம்புக்கு சில தேவைகள் இருக்கு.!
" நான் இல்லைனு சொல்லலையே... உனக்கு என்மேல் காதல் குறையலைனு உணர்ந்த பிறகு, வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்க நான் என்ன முட்டாளா...?
" நினைப்பது நடக்கலைனா... வருவதை ஏத்துக்கனும் ரதி!"
"நீ வருவதாக இருந்தால் ஏற்கத் தயாரா இருக்கேன். உனக்கு அதற்கு தைரியமிருக்கா....? மாலாவிற்கு துரோகம் பண்ண மாட்டேன்னு வசனம் பேசாதே. எனக்கு செய்ததுதான் துரோகம்." என்ற ரதி, வாத்சல்யனின் பதிலுக்குக் காத்திருக்காமல் அறையை விட்டு வெளியேறினாள்.
வாத்சல்யன் உறைந்து போய் அங்கேயே நின்றிருந்தான். ரதி பேசியதில் இருந்த உண்மை அவனை உறுத்தியது. காதலித்தவளைக் கைவிடுவது துரோகம்தான். அம்மா ஏதேனும் செய்து கொள்வாளோ என்ற பயத்தில் மாலாவை மணக்கச் சம்மதித்தான். மாலாவின் அன்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. பல விதமான குழப்பங்களை மனதில் சுமந்தபடி வீடு வந்து சேர்ந்தான்.
ருசி தெரியாமல் சாப்பிட்டான். தன்னால் இரட்டை வாழ்க்கை வாழ முடியுமா... ? என்று யோசித்தான்! மாலாவின் கணவனாக மட்டும் வாழப் போகிறாயா... அல்லது காதலித்தவளோடும் ரகசிய வாழ்க்கை வாழப் போகிறாயா... என்று தன்னையே கேட்டுக் கொண்டான். ஏன் இப்படியெல்லாம் யோசனை வருகிறது....? நினைவை உதறி எழுந்தான். அம்மாவைத் தேடிப் போய் மடியில் படுத்துக் கொண்டதும் பாதுகாப்பாய் உணர்ந்தான். பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து கொண்டிருந்த மாலா எட்டிப் பார்த்து...
" அத்தை.... உன் பிள்ளைக்கும் தாலாட்டுப் பாடித் தூங்க வை!" என்று கேலி செய்தாள். வாத்சல்யனின் தலையை விசாலம் கோதினாள். பிள்ளைக்கு ஏதோ மன சங்கடம் என்று புரிந்து கொண்டாள்.
"நம் குலதெய்வம் ரேணுகா தேவி எப்பவும் உனக்கு துணையிருப்பாள் எதற்கும் வருத்தப்படாதே" என்ற அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். " எனக்கு பயமா இருக்குமா... ரதி ஏதேதோ பேசுறா... தற்கொலை பண்ணிகிட்டா... நம் குடும்பத்தை பாதிக்கும்ல..."
" என்ன சொன்னா... கல்யாணம் பண்ணிக்க சொல்லி பயமுறுத்துறாளா..."
" அப்படிச் சொல்லலை! ஆனால்... எனக்கு அப்படித் தோணுது மா"
என்ற வாத்சல்யன், மாலா வரும் சத்தம் கேட்டு கண்களை மூடிக் கொண்டான்.
" எழுந்து வாங்க. அத்தை தூங்கட்டும்! என்ற மாலாவை அமைதியாகப் பின் தொடர்ந்தான்.
" என்ன இன்னிக்கு அம்மாவோடக் கொஞ்சல்."..? என்ற மாலா வாத்சல்யனின் கண்ணாடியைக் கழற்றி வைத்தாள். தூங்குங்க! நாளைக்கு ஆறுமணி டியூட்டிக்கு சீக்கிரம் எழுந்திரிக்கணுமே... என்றபடி புருவங்களை நீவி விட்டாள். ஆதரவாய் மனைவியின் தோளை அணைத்தபடி தூங்க முயற்சி செய்தான்.
************** ********* ********
ரதி ஒரு வாரம் விடுமுறை எடுத்திருப்பது தெரிந்ததும், வாத்சல்யன் வியந்தான். ஒரு நாள் கூட லீவு போட மாட்டாளே என்றெண்ணியவன், ஓய்வாக இருக்கும் போது ஃபோன் செய்தான்.
" என்னாச்சு... ஒரு வாரம் விடுமுறை எதற்கு போட்டாய்...?"
" மனசுக்கும் உடம்புக்கும் ஓய்வு தேவைப்பட்டது."
"ம்ம்ம்... டேக் கேர். ஏதாவது உதவி தேவைனா சொல்லு."
" அவசியமில்லை" என்ற ரதி உடனே தொடர்பைத் துண்டித்ததும் வாத்சல்யன் வருந்தினான். நேரில் போய் பார்க்கலாமா... சிறிது நாட்களாக அதிகம் கோபப்படுவதாக நர்ஸ் ரெஜினா சொன்னது நினைவிற்கு வந்தது. மாலாவிடம் வரத் தாமதமாகும் நீ சாப்பிடு எனக்காகக் காத்திருக்காதே என்றான். வேலை நேரம் முடிந்ததும் ரதியின் வீட்டை நோக்கி விரைந்தான். வாசலில் குமாரின் வண்டி நிற்பதைப் பார்த்ததும், இவன் எங்கே இந்த நேரத்தில்.... என்று யோசித்தபடி காலிங் பெல்லை அழுத்திய அடுத்த நொடி கதவைத் திறந்த குமார்...
" வாடா... உடம்பு சரியில்லைனு ஃபோன் செய்தாள். இப்பதான் வந்தேன்." எதுவும் பேசாமல் உள்ளே வந்த வாத்சல்யன்...
" உடம்பு சரியில்லைனா... எனக்கு ஃபோன் பண்ணணும்! அவன் என்ன டாக்டரா... உதவி வேணுமானு கேட்டதற்கு அவசியமில்லைனு ஏன் சொன்ன...? குரலில் கோபம் தெறித்தது.
" ஏன்டா... குதிக்கிறே... நானும் அவளுக்கு ஃபிரண்ட்தானே... உன்னைதான் கூப்பிடனும்னு சட்டமா... காதலிச்சுட்டு கைகழுவிட்டுப் போனவன்தானே நீ... "
" குமார்... அதிகம் பேசாதே... அவள கேட்டால் நீ ஏன்டா பதில் சொல்றே...தயவுசெய்து வெளியே போ."
" நான் ஏன் போகணும்... நீதான் போகணும்! ரதியை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்." என்றதும் அதிர்ச்சியில் ரதியைப் பார்க்க... ரதி தலையைக் குனிந்து கொண்டாள்.
" ரதி.... குமார் சொல்றது உண்மையா... ? அவனுக்கு மனைவி இருக்கா. தெரியும்ல..."
" தெரியும்! ஆனால் குழந்தை இல்லையே... கேட்டார் சம்மதிச்சேன்" என்று முணுமுணுப்பாய் சொல்ல... "இன்னொரு முறை யோசி ப்ளீஸ்... இரண்டாம் மனைவியாக போய்த்தான் ஆகனுமா... ஏன் அவசரப்படுறே..".?
" அவளோட மனசைக் கலைக்காதே வாத்சல்யா... தயவு செய்து போய்டு."
" ஷட்அப்...! அதை அவள் சொல்லட்டும்! என்றவன், உனக்கு நான் வேண்டுமா... அவன் வேண்டுமா... என் கண்ணைப் பார்த்துப் பேசு ரதி! தன்னை மறந்த நிலையில் கத்திப் பேச...
"சபாஷ்! காதலியை விட்டுக் கொடுக்க மனசில்லை தானே... அப்புறம் ஏன்டா... அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றே... தீவட்டி தடியா... கோழைகள் காதலிக்கக் கூடாது. இப்ப பார் என்னாச்சு... அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சா என்னாகும்... மாலா... பாவம்! என்ன செய்யப் போறே...? நான் வரேன்!" என்று குமார் விடைபெற்றுச் சென்றதும்... வாத்சல்யன் ரதியின் அருகில் அமர்ந்தான்.
" ரதி... எனக்குக் கொஞ்சம் டைம் கொடு ப்ளீஸ்."
" எதுக்கு டைம் கேட்கிறாய்... எப்படியும் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை. பரஸ்பரம் புரிதலோடு வாழப் போறோம். நான் இனி உன்னை மிஸ் பண்ண விரும்பலை. என்றபடி அருகில் வந்த ரதி வாத்சல்யனின் நெற்றியில் முதல் முத்தத்தைப் பதித்த போது ஃபோன் அலறியது! பதட்டத்தோடு எழுந்தவனைத் தடுத்தாள். நான்கு முறை அடித்து ஓயும் வரை, வாத்சல்யனை தன் பிடிக்குள் வைத்திருந்தாள். தன்னை மறந்த நிலையில் வாத்சல்யன் ரதியின் பெயரை விடாது உச்சரிக்க, வெற்றிக் களிப்பில் மிதந்தாள் ரதி.
சுவர் கடிகாரம் ஆறு அடித்து ஓய்ந்ததும், அவசரமாய் எழுந்தவனிடம், குளிச்சுட்டு போ. விசாலத்திடம் மாட்டிக் கொள்ளதே என்று நகைக்க...
" ராஸ்க்கல் என் அம்மா பெயரையா சொல்றே"... என்று மிரட்டியவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். "அவசியம் நீ போகனுமா...? என்று சிணுங்கினாள்.
" ரதி... ப்ளீஸ் தடுக்காதே... நாளைக்குப் பார்ப்போம் டேக் கேர்" என்று ஓடியவனை வாசல் வரைச் சென்று வழியனுப்பினாள்.
விசாலத்தின் நம்பரைத் தேடி எடுத்து ஃபோன் செய்ததும், "யாரு..." என்ற குரல் கேட்டது..
" உங்க மருமகள்! இரண்டாவது மருமகள் ரதி! என்று வாய்விட்டுச் சிரித்தாள். டாக்டர். மருமகள் கசக்குதா உங்களுக்கு....? அஞ்சு வருச காதலையும், 25 வருச நட்பையும் உடைக்க முடியாதுனு புரிஞ்சுக்கங்க. நீங்க நடத்திய கல்யாணம் வெறும் சடங்கு. என் காதல்தான் உண்மையான கல்யாணம்! இன்னிக்கு மதியம்தான் நடந்தது. நான் சந்தோசமா இருக்கேன். நீங்களும் சந்தோசமா இருங்க. உங்க பிள்ளை இப்ப மாலாவுக்கு மட்டும் புருசனில்லை. எனக்கும்தான்!"
" ச்சீ... வைடி ஃபோனை. ஒட்டிகிட்டவள் மருமகள் ஆக முடியாது. உன்னை எப்படி விரட்டி அடிக்கிறேன் பாரு."
" போகும் போது உங்க பிள்ளையைக் கையில் பிடிச்சுட்டுப் போய்டுவேன். நீங்களா... நானானு பார்த்துடுவோம்." என்று தொடர்பைத் துண்டிக்க... அதிர்ச்சியில் ஃபோனை பார்த்தபடி அங்கேயே நின்றாள் விசாலம்.
கொஞ்சம் பயத்தோடு வீட்டுக்கு வந்த வாத்சல்யன் அம்மாவின் இறுகிய முகத்தைப் பார்த்ததும்... "ஸாரி மா. ஃபோன் சைலண்டில் இருந்தது. நான் கவனிக்கலை."
" உன் கவனம் எப்படி மாறுச்சு... எப்ப மாறுச்சுனு யோசிக்கிறேன்"
" அம்மா..."
" உன்னை நம்பி வந்தவளை ஏமாத்த எப்படி டா மனசு வந்துச்சு... கண்ட கழுதையெல்லாம் என்னை ஏளனமா பேசுற அளவுக்கு வச்சுட்டல்ல... "
" அத்தை.. நீங்க செய்த தவறுக்கு பிராயச்சித்தம் நடந்திருக்கு! அதை புரிஞ்சுக்கங்க. இரண்டு மனசை உடைச்சுட்டு என்னை வாழ வைக்க முடியுமா...? நியாயமா... நான்தான் கோபப்படணும்! நீங்க அமைதியா இருங்க. உங்க பிள்ளை முகத்தில் நிறைவு தெரியுது.
அவர் விருப்பப்படி வாழ விடுங்க" என்ற மாலாவை நன்றி ததும்ப பார்த்தான்.
" மன்னிச்சுடு மாலா... எதையும் நான் பிளான் பண்ணி செய்யலை. எதிர்பாராத விதமாய் நடந்துடுச்சு."
" நடந்ததைப் பத்தியோ... நடக்கப் போறதைப் பத்தியோ எனக்குக் கவலையில்லை. என்னை விட்ருங்க அது போதும்" என்றவாறு விசாலத்தின் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள் மாலா.
தன் வீடே தனக்கு அந்நியமாகிப் போக... வெறுமையான சூழலைத் தாங்க இயலாமல்... ரதியைத் தேடிப் போனான் வாத்சல்யன்.
நீண்ட நேரம் துயரம் தாங்காமல் அழுதாள். கனவும் நினைவுமற்ற நிலையில்... இது விதி! அனுபவித்தே தீரனும்! என்ற குரல் காதில் கேட்க, திடுக்கிட்டு எழுந்தாள். அத்தை சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள். வாத்சல்யனை காணவில்லை...!
(திகில் தொடரும்..)
- இளமதி பத்மா
இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #9