Skip to main content

அன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம்! 'மரங்களின் தாய்' திம்மக்கா! | வென்றோர் சொல் #29

Published on 23/01/2021 | Edited on 05/07/2021

 

Thimmakka

 

நீண்ட தூரம் நீளும் சாலையில் தங்கள் இணையுடன் கைக்கோர்த்து, இலக்கில்லாமல் நடக்க வேண்டும் என்பதே பெரும்பாலான தம்பதிகளின் விருப்பமாக இருக்கும். அதுவும் மாலை நேரங்களில் அந்த மிதமான வெயில் சூட்டில் தனிமையான சாலையில் நடப்பது என்பது மனதிற்கு கூடுதல் இதம் தரக்கூடிய ஒன்று. அந்த வகையில், பிக்கல சிக்கையா மற்றும் திம்மக்கா தம்பதியும் தினமும் நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம்வரை நடப்பது வழக்கம். கைக்கோர்த்து நடப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்காவிட்டாலும், இருவரது மனங்களும் ஒருசேரக் கோர்த்திருக்கும். பானைகளில் நீர் எடுத்துக்கொண்டு வழிநெடுக அவர்கள் நட்டு வைத்த ஆலமரக் கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதற்காக கால் தேய அவ்வாறு நடப்பார்கள். இருவருமே கூலித் தொழிலாளிகள் என்பதால் பகல் நேர வேலை அசதி காரணமாக சில நாட்கள் இதில் தடங்கல் ஏற்பட்டு விடுவதும் உண்டு. அப்படி தடங்கல் ஏற்பட்டுவிட்டால் இத்தம்பதி துடியாய் துடித்துவிடுவார்கள். அன்றைய இரவு, பெற்ற குழந்தையைப் பட்டினி போட்ட குற்ற உணர்ச்சி அவர்களை ஆட்கொள்ளும். ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தம்பதிகளுக்கு இதுதான் தலையாய வேலை. கணவர் பிக்கல சிக்கையா மறைந்த பிறகும் மரங்கள் மற்றும் இயற்கையின் மீதான தனது காதலை 110 வயதிலும் மாறாமல் வெளிப்படுத்தி வருகிறார் சாலுமாரத திம்மக்கா.

 

கர்நாடகா மாநிலம் துமக்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் விஜயம்மா மற்றும் சிக்க ரங்கையா தம்பதிக்கு 1909-ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் திம்மக்கா. வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் தன்னுடைய 10-ஆவது வயதிலேயே பெற்றோருடன் இணைந்து வேலைக்குச் சென்றார். பின்னர், இளம் வயதிலேயே பிக்கல சிக்கையா என்பவருடன் திருமணம் நடைபெறுகிறது. வறுமைக்கு ஊடாக இருவரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாகச் சென்றாலும், திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் என்பது வாய்க்கவில்லை. ஆரம்பக்கட்டத்தில் அத்தம்பதிகளை அது பெரிய அளவில் பாதிக்காவிட்டாலும், பின்னாட்களில் சுற்றத்தார் மற்றும் சக உறவினர்களின் பேச்சு மற்றும் மலடி என்ற வசைச்சொல் இவர்களைப் பெரிதும் காயப்படுத்துகிறது. திருமணமாகி ஏறக்குறைய 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இனியும் இதுபோன்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தால் சமூகத்தில் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது என்பது பிக்கல சிக்கையாவின் உணர்விற்கு எட்டுகிறது. மனைவி திம்மக்காவுடன் கலந்து பேசுகிறார். குழந்தை இருந்தால் நமக்கு மட்டும்தான் பலன். அதுவே மரங்களை நட்டு வளர்த்தால் அனைவருக்கும் பலன் கிடைக்கும் என இருவரும் ஒருசேர முடிவெடுக்கின்றனர். அன்று முதல் மரங்களே இத்தம்பதிகளின் குழந்தைகளாயின.

 

"நான் பிறந்தது குப்பி தாலுகா. பின் திருமணமாகி மாகடி தாலுகாவிற்குச் சென்றேன். எங்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அது என் கணவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் பேசிய வார்த்தைகள் எங்களை மிகவும் காயப்படுத்தின. பல கோவில்களுக்கும் சென்றேன். ஆனாலும், கருத்தரிக்கவில்லை. ஒருநாள், இனி நமக்கு சமூகத்தில் எந்த மரியாதையும் இருக்காது என என்னிடம் கூறிய என் கணவர், அவர் மனதில் தோன்றிய இன்னொரு விஷயத்தையும் கூறினார். 'நிறைய மரங்கள் நட்டு அவற்றையே நமது குழந்தைகளாக வளர்ப்போம்' என்றார். அதன்படி, குளிகல் தாலுகாவில் இருந்து குடூர் வரையிலான சாலையில் ஆல மரங்களை நட ஆரம்பித்தோம். முதல் வருடம் 10 மரங்கள், இரண்டாம் வருடம் 15 மரங்கள் என நட ஆரம்பித்தோம். தினமும் நான்கு கிலோ மீட்டர்கள் வரை நடந்து சென்று நீர் ஊற்றுவோம். ஒருமுறை கால் இடறிக் கீழே விழுந்ததில் பானை உடைந்து நீர் கொட்டிவிட்டது. மீண்டும் வீட்டிற்கு வந்து புதுப்பானையில் நீர் எடுத்துச் சென்று ஊற்றினோம். அதன்பிறகு, எத்தனை மரங்கள் நடுகிறோம் எனக் கணக்குப் பார்த்ததில்லை. நாங்கள் நட்ட மரங்கள் சில அழிந்துவிட்டன. அது கவலையளித்தாலும் வளர்ந்து நிற்கிற மரங்கள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 1991-ஆம் ஆண்டு என் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகும் 30 ஆண்டுகளாக நான் தனியாக இந்த வேலையைச் செய்து வருகிறேன்".

 

Thimmakka

 

கர்நாடக அரசின் விருது, தேசிய குடிமகன் விருது, பத்ம ஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் திம்மக்கா. 2016-ஆம் ஆண்டு பிபிசி பட்டியலிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ஒருவராகவும் இடம்பிடித்தார். மேலும், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி அமைப்பிற்கு (ENVIRONMENTAL EDUCATION FOUNDATION ) திம்மக்காவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக இன்றைய காலகட்டத்திலேயே ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லையென்றால் அவர் சமூகத்தை எதிர்கொள்வது சிரமம். அந்த அளவிற்கு வசைச் சொற்களையும் புறமுதுகுப் பேச்சுக்களையும் சந்திக்க வேண்டிவரும். இன்றைய சமூகத்திலேயே இந்த நிலை என்றால் திம்மக்காவின் காலத்தில்?. அவர் எதிர்கொண்ட நிலையை நம்மால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. இவையனைத்தையும் தாண்டி, 385 ஆலமரங்கள், 8000 பிற மரங்களை நட்டு வளர்த்துள்ளார் என்றால் திம்மக்கா செய்த செயல், புருவம் உயரவைக்கிறது. குளிகல் தாலுகாவில் இருந்து குடூர் வரையிலான சாலையில் திம்மக்கா நட்ட ஆலமரங்கள் சுமார் 4 கிலோமீட்டர்கள் வரை சாலையின் இருபக்கமும் அரண்களாக ஓங்கி உயர்ந்துள்ளன. இன்று அவர் நட்டுள்ள மரங்களின் மொத்த மதிப்பு 400 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

 

Thimmakka

 

திம்மக்காவின் இந்த செயலைப் பாராட்டி 2019-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு விருது வழங்கிவிட்டு, அவரிடம் ஆசிர்வாதம் வாங்க தன்னுடைய தலையை சற்று தாழ்த்தினார். உடனே அவரைத் திம்மக்கா ஆசீர்வாதம் செய்து அங்கே திரண்டிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்தார். கென்யா நாட்டு சுற்றுச்சூழல் போராளி வாங்காரி மாத்தாயைப் பற்றித் தெரிந்து வைத்துள்ள நம்மில் பலருக்கு, திம்மக்காவைத் தெரிவதில்லை.

 

குழந்தையின்மை, அதனால் ஏற்பட்ட அவமரியாதை, வறுமை அனைத்தையும் தாண்டி இந்தியச் சமூகத்தில் பசுமை சார்ந்த நடவடிக்கைகளில் திம்மக்கா ஏற்படுத்தியுள்ள தாக்கம் அசாத்தியமானது.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

 

அங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28