Skip to main content

புதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி ?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39

Published on 08/06/2019 | Edited on 26/06/2019

தமிழில் புதிதாக ஒரு சொல்லை ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? விடை நம்மவர்க்குத் தெரிவதில்லை. ஆங்கிலம் போன்ற பலதுறைப் பயன்பாடுள்ள மொழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான புதுச்சொற்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியில் அத்தகைய புதுச்சொற்களின் ஆக்கம் தொடர்ந்து நிகழும்.

 

soller uzhavu



அவ்வாறு ஆங்கிலத்தில் தோன்றும் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை நாம் ஆக்குவதே இல்லை. தொடர்ந்து ஆங்கில இறக்குமதிச் சொற்களாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தமிழில் ஓர் ஆங்கிலப் பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ கலப்பது எளிதில் களையத்தக்கது. ஆனால் தமிழில் தொடர்ந்து கலக்கும் புதிய பிறமொழிக் கலைச்சொற்கள் மாற்றீடே செய்யப்படாமல் நிலைத்துவிடுகின்றன.

‘கம்’ என்கின்ற ஆங்கில வினைச்சொல்லை ‘வா’ என்று தமிழாக்கிவிடலாம். அச்சொல் ஆங்கில மொழியின் வினைச்சொல். அதற்கேற்ற தமிழ்ச்சொல்லும் நம் மொழியில் இருக்கும். இவ்வகையான சொற்களை ஒன்றுக்கு நேராக இன்னொன்றை வைத்து ஈடுகட்டிவிடலாம். ஆனால், ‘கம்ப்யூட்டர்’ என்று புதிதாய் நுழையும் கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை ஆக்கி அளிப்பதற்கு நமக்குத் தெளிந்த தமிழறிவு வேண்டும். கம் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு வா என்ற நேரடியான பொருளுடைய தமிழ்ச்சொல்லைக் காட்ட முடியும். கம்ப்யூட்டர் என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லாகக் “கணினி” என்று ஆக்கிப் பயன்படுத்துவதற்கு நமக்குத் தமிழ்ச்சொல்லாக்க முறைகள் தெரிந்திருக்க வேண்டும். இவ்விடத்தில்தான் தமிழில் ஒரு புதுச்சொல் எவ்வாறெல்லாம் உருவாகும் என்னும் கல்வியின் தேவைப்பாடு எழுகிறது. புதுச்சொற்களை ஆக்கி அளிக்கும் தமிழறிஞர்கள் பின்பற்றுகின்ற நடைமுறைகளை நாமும் தெரிந்துகொண்டால் நாமே புதிய புதிய சொற்களை ஆக்கித் தரலாம். நமக்கு வேண்டிய இடங்களில் பயன்படுத்தலாம்.

புதுச்சொற்களை ஆக்கும் வழிவகைகள் தெரியாததால்தான் எழுதப் படிக்கத் தெரிந்த ஒருவர் தயங்காமல் ஆங்கிலச் சொற்களைக் கையாள்கிறார். பிழையில்லாமல் நல்ல தமிழில் எழுதக்கூடிய மொழியறிவு உள்ள ஒருவரால் புதிதாய் ஒரு சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தும் துணிச்சல் இருப்பதில்லை. முன்னே தோன்றிய வழக்கமான சொற்களுக்குளேயே ஒருவர் தம் மொழி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார். தமிழில் ஆங்கிலம் உள்ளிட்ட பற்பல பிறமொழிச் சொற்கள் கலந்தமைக்கு இந்தத் தேக்கநிலைதான் காரணம்.

தமிழ்மொழியின் தலையாய மறைபொருள் ஒன்றினை ஊரறிய உரக்கக் கூறியிருக்கிறேன். தமிழில் புதிதாய் ஒரு வினைச்சொல்லைத் தோற்றுவிக்க முடியாது. தமிழில் புதிதாய் நூற்றுக்கணக்கான பெயர்ச்சொற்களைத் தோற்றுவிக்க முடியும். அவ்வாறு நூற்றுக்கணக்கான பெயர்ச்சொற்களை உருவாக்க வல்ல ஒரு மொழிக்குள்தான் பிறமொழிகளிலிருந்து பெற்ற இரவல் சொற்களை வெட்கமில்லாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

கம் என்பதற்கு வா என்னும் வினைச்சொல் இருப்பதாய்ச் சொன்னேனே, அவ்வினைச்சொல்லைத் தவிர வேறு புதிதாய் ஒரு வினைச்சொல்லை ஆக்க இயலாது. ஆனால், வருவதைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பற்பலவற்றை நாம் ஆக்கிக்கொள்ள முடியும். வருகை, வருதல், வரல், வரவு என்பன வருகின்ற வினையைக் குறித்துத் தோன்றிய பெயர்ச்சொற்கள். இவற்றை இலக்கணத்தில் தொழிற்பெயர்கள் என்பார்கள்.

பெயர்ச்சொற்கள் ஆறு வகைப்படும். பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்பவை அவை. உயிருள்ள, உயிரில்லாத ஒரு பொருளுக்கு வழங்கப்படுவது பொருட்பெயர் (கல், குருவி). காலம் குறித்து வழங்கப்படுபவை காலப்பெயர்கள் (நாள், தை). ஒரு பொருளின் உறுப்பாய் அமைவனவற்றின் பெயர்கள் சினைப்பெயர்கள் (தலை, வேர்). ஒன்றின் பண்பினைக் குறிப்பவை குணப்பெயர்கள் (கருமை, செம்மை). ஒரு வினையால் நிகழ்கின்ற செயல் அல்லது செயல்விளைவினைக் குறிப்பவை தொழிற்பெயர்கள் (நிகழ்வு, அழுத்தம்). மேற்சொன்ன ஆறு வகைமைகளில் முதல் ஐந்து வகைமைகளிலும் புதிதாய் ஒரு சொல்லை ஆக்குதல் கடினம். ஆனால், ஆறாவது வகைமையான தொழிற்பெயர்களைப் புதிது புதிதாக ஆக்கிக்கொண்டே செல்லலாம்.

ஒரு தொழிற்பெயர் எவ்வாறு தோன்றுகிறது ? அதனைப் புதிதாய்த் தோற்றுவிக்கும் வழிகள் யாவை ? நாமே புதிதாய் ஒரு தொழிற்பெயர்ச் சொல்லைத் தோற்றுவிக்க இயலுமா ? ஒரு தொழிற்பெயர் என்ன பொருளைக் குறிக்கு ? இக்கேள்விகளுக்கான விடையையும் கல்வியையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

 

முந்தைய பகுதி:

துப்பில்லாதவன் என்றால் என்ன தெரியுமா ? - சொல்லேர் உழவு பகுதி 38
 

அடுத்தபகுதி:

கொடுப்பினையா, கொடுப்பனையா ? தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40