கட்டளைப் பொருள் தருகின்ற வினைவேர் தன்னோடு வெவ்வேறு விகுதிகளைச் சேர்த்துக்கொண்டு புதிய புதிய தொழிற்பெயர்களை உருவாக்கும். நில், செல், வா, போ, செய், காட்டு, ஆடு, பாடு என்று கட்டளையிடுகின்ற எல்லாமே வினைவேர்கள் ஆகும். வினைச்சொற்களாகிய அவற்றிலிருந்தே வினைமுற்றுகளும் எச்சவினைகளும் தோன்றுவதால் வினைவேர் என்கிறோம். பெயர்ச்சொற்களை உருவாக்குவதற்கு வினைச்சொற்கள் இங்கே உதவி செய்கின்றன.
ஒரு வினைச்சொல்லை அப்படியே தொழிற்பெயராக்கி விடுவதன் வழியாக அத்தொழிலின் வழியே நிகழ்த்தப்படும் அனைத்துக்கும் பெயர்ச்சொற்களை அடையலாம். அவ்வாறுதான் நம்முடைய புதிய பெயர்ச்சொற்கள் பலவும் உருவாகியிருக்கின்றன. பழங்காலத்திலும் அவ்வாறே பல சொற்கள் ஆக்கப்பட்டன.
வினைவேர்கள் என்பவை கட்டளைப் பொருள் தருபவை. இங்கே விகுதிகள் எனப்படுபவை எவை? தொழிற்பெயர்களை உருவாக்குவதற்காக ஒரு வினைவேரில் இறுதி நிலையாய்ச் சேர்ந்து கொள்பவையே தொழிற்பெயர் விகுதிகள் எனப்படும். நேரடியாக எடுத்துக்காட்டுகட்குச் செல்வோம்.
செய் என்னும் ஒரு வினைவேரினை எடுத்துகொள்வோம். அதனோடு தல் என்ற விகுதி சேர்ந்தால் செய்தல் (செய் + தல்) என்ற தொழிற்பெயர் கிடைக்கும். எதனைச் செய்தாலும் அதனைச் செய்தல் என்னும் பெயராகக் கூறலாம்.
அல் என்ற விகுதியினைச் சேர்த்தால் செய்+அல் = செயல் என்னும் தொழிற்பெயர் கிடைக்கும். செய்வதன் வழியாக நடக்கும் வினையைச் செயல் என்கிறோம்.
செயல் என்பதனை முன்னொட்டாகக்கொண்டு இன்னொரு கட்டளைப் பொருள் தரும் வினைவேரினைச் சேர்த்தால் மற்றொரு வினைச்சொல் கிடைக்கும். படு என்ற வினைவேரைச் சேர்த்துப் பார்ப்போம். செயல்படு என்ற வினைச்சொல் கிடைக்கிறது. படு என்ற வினைவேர் முன்னிலை (வினைச்சொல் பகுதி) திரிந்தால் பாடு என்றாகும். செயல்படு என்ற கட்டளைப் பொருள் தரும் வினைச்சொல் அவ்வாறு திரிந்து செயல்பாடு என்ற பெயர்ச்சொல் கிடைக்கிறது.
செய் என்ற வினையோடு கை என்ற விகுதி சேர்த்தால் செய்கை (செய்+கை) என்ற இன்னொரு தொழிற்பெயர் கிடைக்கிறது.
தி என்றொரு தொழிற்பெயர் விகுதியும் இருக்கிறது. அதனோடு செய் என்னும் வினையைச் சேர்த்தால் செய்தி என்ற அருமையான தொழிற்பெயர் கிடைக்கிறது. வு என்ற தொழிற்பெயர் விகுதி சேர்த்தால் செய்வு என்ற தொழிற்பெயரை உருவாக்கலாம்.
ஒரே வினைவேர்தான். அவ்வினையாற் பெறப்படும் விளைவு சார்ந்த எவ்வொன்றுக்கும் வெவ்வேறு விகுதிகளைச் சேர்த்து பலப்பல தொழிற்பெயர்களை உருவாக்கிவிட்டோம்.
செய்தல் – நலம் செய்தல், பணி செய்தல், நடவு செய்தல், முடிவு செய்தல், ஆவன செய்தல்
செயல் – கொடுஞ்செயல், நற்செயல், அனிச்சைச் செயல், இழிசெயல்.
செயல்பாடு – சமூகச் செயல்பாடு, அரசின் செயல்பாடு.
செய்கை – தவறான செய்கை, எச்சரிக்கை செய்கை, பயிர்செய்கை,
செய்தி – இன்றைய செய்தி, முக்கியச் செய்தி, செய்தித்தாள், செய்தித் தொலைக்காட்சி.
ஒரேயொரு வினைவேர்தான். அது செய் என்பது. அதனோடு சில விகுதிகளைச் சேர்த்ததும் வெவ்வேறு தொழிற்பெயர்கள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வோர் இடத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொண்டோம். பயன்படுத்தப்பட்ட ஒவ்வோர் இடத்தில் அந்தச் செயல், செயல் விளைவு, செயல் சார்ந்த அனைத்துக்கும் அதனையே பெயராக்கிவிட்டோம். அதனோடு தொடர்புடைய மேலும் சில சொற்களைச் சேர்த்துக்கொண்டால் புதிய புதிய சொற்றொடர்கள் புதிய புதிய பொருளோடு நம்முடைய பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன.
ஒரேயொரு வினைவேர் அதனுடைய வினைப்பொருளோடு தொடர்புடைய எவ்வொன்றுக்கும் தொழிற்பெயராகி நிற்கும். அத்தொழிற்பெயர்களைப் பயன்படுத்தி மேலும் பல சொற்களோடு சேர்த்து புதிய சொல்லாட்சியைக் கண்டடையலாம். அவ்வாறு பயன்பாட்டில் நிலைத்தவுடன் அச்சொல் அதே வினைவேரினால் பெறப்பட்ட இன்னொரு தொழிற்பெயரை இடையூறு செய்வதில்லை.
எடுத்துக்காட்டாக இதனைப் பாருங்கள், செய்தி என்ற சொல் ‘நிகழ்ந்தவொன்றின்’ அறிவிப்பாக நிற்கின்றது. அது எப்போது செயல் என்ற சொல்வழியே நாம் பெற்றுக்கொண்ட பொருளுக்குக் குறுக்கே செல்வதில்லை. ஏனென்றால் செய்தி, செயல், செய்கை, செயல்பாடு போன்ற சொற்கள் அவற்றுக்குரிய பயன்பாடுகளில் நிலைத்துவிட்டன. இப்படித்தான் ஒரு புதிய சொல் உருவாக்கப்படுகிறது. பயன்பாட்டில் நிலைக்கிறது. இதன் ஆணிவேர் தொழிற்பெயர் உருவாக்கம் என்னும் இலக்கணத் தன்மைக்குள் ஒளிந்திருக்கிறது.
முந்தைய பகுதி: