Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #47

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

marana muhurtham part 47

 

அடுத்த குண்டாக அவள், எதை வீசப்போகிறாளோ? என்று ராம் யோசிக்கத் தொடங்கினான். அப்போது அவன் சிந்தனை தவத்தைக் கலைத்தபடியே ஒரு ஞானியைப் போல் பேச ஆரம்பித்தாள் கவி...

 

"அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்பவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன் என்று கண்ணதாசன் சொன்னார். ராம், இங்கே யாரும் திருந்தி வாழத் தயாராக இல்லை. அதோடு சிலரை எவராலும் திருத்தவும் முடியாது”

 

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவள் கண்களையே பார்த்தான் ராம். கவி தொடர்ந்தாள்...

”அப்படிபட்ட மிருகங்கள், இந்த பூமியை சங்கடப்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.  அவர்கள் எல்லாம் பூமியின் நிம்மதியைக் குலைப்பவர்கள். சமூகத்தை மிரட்டும் நச்சுப்பிராணிகள். சட்டத்தின் இருட்டுப்பொந்துகளின் வழியாகத் தப்பிக்கும் உத்தியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள, வேண்டிய நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அப்படித்தள்ளப்பட்ட மாணவர்கள்தான், வேறு வழியின்றி இந்த ரகசியக் குற்றவாளிகளை ரகசியமாகவே களையெடுக்கும் முடிவுக்கு வந்தார்கள்” என்று அவள் தீர்க்கமாகப் பேசுதை வியந்து பார்த்தான் ராம்.

 

கவியே தொடர்ந்தாள்... "ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், விதை நெல்லைப்  போன்றது. விதை நெல்லுக்கு கணக்குப் பார்த்தால் விளைச்சல் அதிகமாக இருக்காது என்று பெருந்தலைவர் காமராசர் சொன்னார். அந்த விதை நெல் பதர் ஆகும் போது, தூக்கிப் போடுவதுதானே முறை. ஒரு பெண்ணின் தற்கொலைக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். தன்னுடைய இரண்டாவது உலகமாக நினைக்கக்கூடிய பள்ளி காரணமாக இருக்கக்கூடாது”  -நயாகரா அருவி ஆர்பரித்து விழுவதை போன்று தன் உணர்வுகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள் கவி.

 

வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த திலகா இதற்கு மேல் தாங்க முடியாமல்,  கரையைத் தேடும் அலை போல வேகமாக உள்ளே வந்தாள். திலகாவின் கையில் இருந்த காபி ஸ்டார் ஹோட்டல் கூல் காபி போல ஆகியிருந்தது.

 

அம்மாவைப் பார்த்ததும் கவியின் முகம், சூரியனை மேகப் புதருக்குள் நழுவவிட்ட வானம் போல் இருண்டது. "அம்மா .?.. என்று அழைத்த குரல், வழிப்பறி போல் காணமல் போய்விட்டது. அவளது தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட ராம்..

“கவி ஏன் பயப்படுற? என்றாவது ஒரு நாள் அம்மாவுக்குத் தெரியத்தான் போகுது” என்று தைரியமூட்டினான்.  

"கவி பள்ளியில் இத்தனை நடந்திருக்கா?. சிறகு விரித்து பறக்கும் பறவையைப் போல மகிழ்வாக பறந்து திரிந்த, உன் சிறகுகளில் இத்தனை சுமைகளா? இந்தச் சிலுவைகளை நீ மட்டும் சுமந்து கண்ணீர் வடிக்கிறியே... கவலைப்படாத கவி. நானும் ஒரு பொண்ணுதான். பொண்ணுங்களின் போராட்டமும் வேதனையும் எனக்கும் தெரியும்.” என்று அவளை அம்மா வாஞ்சையுடன் வந்து அணைத்துக்கொண்டார். 

 

அம்மாவின் அணைப்பில் உள்ளத்தில் தேங்கி, மீதமிருந்த கண்ணீர்த் துளிகளும் கரைந்து வெந்நீர் அருவியாக வெளியேறத் தொடங்கியது. கவியின் கண்ணீர் வலியைத் தாங்க முடியாமல் அம்மா துடைத்துவிட்டார்.

 

மிகப்பெரிய யுத்த களத்தையும் அமைதியாக்கும் சக்தி மௌனத்திற்கு உண்டு. அந்த மௌனம் தான் மூவரின் மனங்களுக்கிடையே சமாதான வெண்புறாவாய் சிறகடித்தது. ஆண்களின் அளப்பரிய திறனே சூழ்நிலையை மாற்றுவது அல்லது மாறுவது. ராம் மெல்ல பேசினான்.

"கவி, .இது வரைக்கும் நடந்த யுத்தத்திற்கு நீ தளபதியாக இருக்கலாம். இனி விதி என்னைத் தளபதியாக்குகிறது. நடந்ததை என்னிடம் மறைக்காமல் சொல்லு. நிச்சயம் உன் மன அமைதிக்கு வழி செய்கிறேன்" என்றான் உறுதியான குரலில்..

 

’இப்பக் கூட ராம்  நீதி கிடைக்க வழி செய்கிறேன் என்று சொல்லவில்லை. வெறுமனே, என் மன அமைதிக்கு வழி செய்கிறேன் என்று சொல்கிறானே. தியாவின் மரணத்துக்கு நீதி கிடைக்காமல் எனக்கு எப்படி மன அமைதிவரும்?. ஏதோ அப்பாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை அவன் வைத்திருக்கிறான். அவர் தவறு செய்திருக்க மாட்டார் என்று நம்பிக்கையாக, சித்தப்பா என்ற பாசம் கண்ணை மறைக்க, எதேதோ ஆறுதல் டயலால் அடிக்கிறான். சரி இந்த அளவிற்காவது நிலவரத்தின் தகிப்பைப் புரிந்துகொண்டானே என்று சந்தோசப் பட வேண்டியதுதான்’ என்று தனக்குள் பேசினாள்.

 

சில நேரங்களில் நிராயுத பாணியாக இருக்கும் போது, அந்த நேரத்தில் அந்தக் கடைசி நம்பிக்கையும் முடிவும் நம் வாழ்க்கையை மாற்றவல்லது என்று நினைத்து, அனைத்து உண்மைகளையும் ராமிடம் சொல்லத் துடித்தாள்.

 

கவியின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட ராம்,  மெல்லப் பேசி, கொசு வலையில் திமிங்கலத்தை பிடிக்க நினைத்தான்.

”கவி, வாட்ச்மேனை எப்படி தண்டிச்சீங்க? எப்படி மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாமே ஹார்ட் அட்டாக்குன்னு தானே வந்தது?”- என்று ராம் ஆர்வமானான்.

 

கவியும் இனி மறைத்து என்ன பயன் என்றபடி விவரிக்க ஆரம்பித்தாள்.... 

” அன்று  பள்ளி மைதானத்தில் மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த வாட்ச்மேன் வழக்கம் போல் அவன் புத்தியைக் காட்டினான். மாணவர்களிடம் தாத்தா பேசறேன் என்று பேச்சு கொடுத்துக்கொண்டே அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதையும் கீழே குனிந்து பந்து எடுப்பதையும் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தான். பி.டி டீச்சர் சாதனா குடோனுக்குச் சென்று  பந்துக்கு காற்று அடித்து கொண்டு திரும்பி வந்தபோது அவர் கண்களில், வாட்ச்மேனின் சின்னத்தனம் பட்டுவிட்டது. இவனெல்லாம் திருந்தவே மாட்டானா..? என்று மனதிற்குள் நினைத்தவுடன், சாதனாவிற்கு கோபம் உச்சத்தில் கொதித்தது.உடனே சாதனாவின் கையில் இருந்த பந்து 360 டிகிரி கோணத்தில் 120 கி.மீ வேகத்தில் பறந்து வந்து வாட்ச்மேன் மார்பில் டமால் என மோதியது. பந்து விழுந்ததும் வாட்ச்மேன், அம்மான்னு அலறிக்கொண்டு, மார்பைப் பிடித்துக்கொண்டு பொத்தென்று விழுந்தான். அங்கு விளையாடிக் கொண்டிருந்த  மாணவிகளின் கவனம் முழுதும், விளையாடிலேயே மூழ்கியிருந்ததால், பந்தின் தாக்குதலை அவர்கள் கவனிக்கவிலை. அவன் கீழே விழுந்த போதுதான், அவர்கள் கவனம் அவன் பக்கம் திரும்பியது. உடனே வாட்ச்மேன் அருகே எல்லோரும் ஓடிவந்தனர். சாதனா டீச்சரும் ஒன்றும் தெரியாதது போல் பதற்றத்துடன் வாட்ச்மேன் அருகே ஓடினார். அதற்குள் மாணவிகள் சூழ்ந்து கொண்டனர்.

 

என்னாச்சு.. என்னாச்சு ..? என்று மாணவிகளை  விலக்கி விட்டு வாட்ச்மேன் அருகில் அவர் வந்தார். என்னன்னு தெரியலை மிஸ், நாங்க பந்து விளையாடிட்டு இருந்தோம். பந்தை காலால் உதைத்துக்கொண்டும், தூக்கி போட்டு விளையாடிக்கொண்டும் இருந்தோம் மிஸ். நெஞ்சுவலி போலிருக்கு என்று மாணவிகளே கோரஸாக சொன்னார்கள். 

 

பந்துத் தாக்குதலை நடத்திய சாதனாவோ ஒன்றும் தெரியாத மாதிரி மாணவிகளை  விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு எத்தனை சீரியல் பார்க்கிறார். அவருக்கா நடிக்கத் தெரியாது? மாணவிகளை விலக்கி விட்டு, யாராவது போய் தண்ணீர் எடுத்துட்டு வாங்கன்னு அவர் குரல் கொடுத்தார். ஒரு மாணவி போய் தண்ணீர் எடுத்து வந்தாள். சாதனா வாட்ச்மேன் முகத்தில் தண்ணீர் அடித்தார். எந்த அசைவும் இல்லை. உடனே, நீங்க யாரோ பந்தால் அடித்து தான் அவருக்கு இந்த நிலைமை, யாருன்னு உண்மையை சொல்லுங்கன்னு அவர்களை டெஸ்ட் செய்தார். மிஸ், நாங்க யாரும் பந்தை போடலைங்க, வாட்ச்மேன் எப்படி கீழே விழுந்தார்னு கூட எங்களுக்குத் தெரியாதுங்க மிஸ்சுன்னு அவங்க சொன்னாங்க. இப்படித்தன் வாட்ச்மேனின் ஹார்ட் அட்டாக் படலம் அரங்கேறுச்சு.” என்று விரிவாகச் சொன்னபோது, கவியின் அம்மாவும் ராமும் வாயைப் பிளந்தனர்.

“படுபாவிப் பயலுக்கு இது வேண்டியதுதான்” என்றார் கவியின் அம்மா. அவர் முகத்தில் நிம்மதி நிலவியது. ராம், ஆச்சரியத்தை முகத்தில் தேக்கியிருந்தான்.  

 

அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை அவர்கள் இருவரும் உணர்ந்தபோதும், கவி விடாமல் அனைத்தையும்  ஒப்புவிக்கும் ஆர்வத்தில் தொடர்ந்தாள்.

"தான் பந்தால் அடித்ததை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட சாதனா மேடம், கலங்கி நின்ற மாணவிகளிடம், விடுங்க பிள்ளைகளா, நீங்க என் தங்கச்சிகள் மாதிரி. உங்களைக் காட்டிக் கொடுப்பேனா, நீங்கள் விளையாடும் போது உங்களுக்கே தெரியாமல் பந்து அவர் மீது பட்டிருக்கலாம். வேணும்ன்னு  திட்டமிட்டு செஞ்சிருக்க முடியாது. அதனால் யார் எப்படி மிரட்டிக் கேட்டாலும் எங்களுக்குத் தெரியாதுன்னே சொல்லுங்கள்ன்னு சொல்லிவிட்டு மருத்துவரை அழைத்தார் சாதனா. பள்ளியின் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அட்டாக் மாதிரி தெரியுது. உயிர் இல்லைன்னு  கூறிவிட்டார்.” என்று அவள் சொல்லி முடித்தவுடன், மூவரும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து உண்மையை ஜீரணித்தனர்.  ராம் புன்னகைத்தான்.

”சரியான தண்டனை” என்ற வார்த்தை அவன் உதட்டில் இருந்து வெளிவந்தது.

 

ராம் அழுத்தமான குரலில் ”சூரனை வதம் பண்ணியதை விழாவாகக் கொண்டாடும்  நாம், இதையும்  அப்படிதான் பார்க்கணும்” என்றான்.

 

கவி மலர்ந்தாள். தனது குற்ற உணர்வுகள் எல்லாம் முழுதாக மனதில் இருந்து நீங்கிய  நிலைக்கு வந்தாள்.

 

ராம் புன்னகையோடு கேட்டான்..

"கவி., அந்த பர்தாப் பெண் யார்..?” 

"நடிக்காத ராம். நீ கண்டுபிடித்துவிட்டாய்ன்னு  எனக்குத் தெரியும்” என்று கவி சொன்னதும், 

"அதான்.சொன்னேனே, இனி இந்த யுத்தத்தின் தளபதி  நான் தான். அடுத்த வதத்தை அரங்கேற்றப்போவதும் நான்தான்”. என்றான் அழுத்தமான குரலில் ராம்.

“என்னடா? யாரைடா வதம் பண்னப்போற? எனக்கு பயமா இருக்கு.” என்றார் கவியின் அம்மா. அவர் முகத்தில் பீதி, மாநாடு கூட்டியிருந்தது.

 

(திக் திக்  தொடரும்..)

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #46

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #50. நிறைவுப் பகுதி!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Marana Muhurtham - The End 

 

'கால் நனையாமல் கூட கடலைக் கடக்கலாம். ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது.’ பித்தனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஏதோ ஒன்று நினைவில் அகலாமல்  இருந்து விழிகளை ஈரம் செய்துவிடும். கவியின் நினைவில், தியாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கடிவாளம் போட்ட குதிரை மாதிரி கனைத்தபடி ஓடிக் கொண்டிருந்தது.


 
கோபமோ, சோகமோ எந்த உணர்வாக இருந்தாலும் உறக்கம் என்பது அந்த உணர்விற்கு இடையே கிடைக்கும் சிறிய வலி நிவாரணி ஆகும். உறக்கம் சில நேரங்களில் அந்த உணர்வின் தீவிரத்தையும் வலியையும் தடுக்கும். ஏன் சில நேரங்களில் அந்த உணர்வையே இல்லாமல் செய்யும்.


 
உறங்கி எழுந்த பிறகுதான் தெரியும் திலகாவின் மனநிலை. அதனால்தான் கவி, சரியாக உறங்கவில்லை போல. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் கவிக்கு மீண்டும் விழிப்பு வந்து விட்டது.  முதலில் சிந்தனைதான் விழித்தது.  அம்மாவின் முடிவு என்னவாக இருக்கும்? உறங்கி எழுந்ததும் கணவன் மீதான சென்டிமென்ட் விழித்துக் கொள்ளுமா? அம்மாவைப் பற்றி நினைக்கிறோமே, ‘எனக்கும் அப்பான்னா  ரொம்ப பிடிக்குமே, டாடி என் மீது அதிக பாசம் வைத்திருக்கிறாரே. ஒரு நல்ல அப்பாவாக இருக்கும் அவரால்  ஒரு நல்ல மனிதராக நடந்து கொள்ள முடியவில்லையே?"- என்று அப்பாவின் மீது வருத்தப்பட்டாள்.


 
'இதுவரைக்கும் நான் பார்த்த அப்பா எனக்கு ஹீரோவாக தானே தெரிந்தார். காற்று கூட புகமுடியாத கண்ணாடிக் கதவில், கண்ணுக்கு தெரியாத மெல்லிய கீறல் எப்படி டாடி வந்தது?’ கவியின் கண்முன் எஸ்.கே.எஸ்.ன் உருவமும் அவர் அம்மாவையும்  தன்னையும் தவிர  பிற பெண்களிடம் நடந்து கொள்ளும் விதமும் நினைவில் வந்தது. அதுபோல், வீட்டு வேலைக்காரி முதல் ஷாப்பிங் மால், பள்ளி என்று அனைத்து இடங்களிலும் அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதங்களை மனத்திரையில் 70 எம்.எம்.-ல் ஓட்டி பார்த்தாள்.  அது, ஐந்து நிமிட டாக்குமென்டரி படம் மாதிரி இருந்தாலும் விருது பெறும் படமாக இருந்தது. அந்த அளவுக்கு அப்பா, இத்தனை வருட வாழ்வில் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறார். பிறகு ஏன் தியா, அடிக்கடி "நிர்வாகியும் தப்பு பண்றாரு, அவர் நல்லவர் இல்லை. அவரை எல்லாம் சும்மா விட்டு விடக் கூடாது" என்று சொன்னாள். கவி குழம்பி கொண்டிருக்கும் நேரத்தில் போன் அலறியது.

 

நேரம் கடந்து இரவு 11 மணிக்கு மேல், விடியும் வரை இந்த ரிங் டோன்களைக் கேட்டாலே, ஏதோ சாத்தானின் குறுஞ்ச்செய்தி போல எண்ணிவிடுகிறது மனம். அப்போது உடல் எல்லாம் வியர்த்து விறுவிறுத்துவிடும். இதயத்தின் "லப் டப்" ஓசையும், கடிகாரத்தின்" டிக் டிக்" ஓசையும் போட்டி போட்டுக்கொண்டு இதயத்திற்குள் மாயக்கால்களாய் ஓடும். அப்படிதான் கவியைப் பொறுத்தவரை இப்போதும்...

 

அதிகாலை நேரத்தில் போன் அலறியதும் பதட்டத்தோடு பார்த்தாள். யார் அழைத்து இருப்பார்கள்? போன் என்ன காரா?  நாம சென்று ஏறும் வரை காத்திருந்து அழைத்து செல்வதற்கு. கவி ஆன் செய்வதற்குள் நின்றுவிட்டது. யாராக இருக்கும் என பார்ப்பதற்குள் மீண்டும் அலறியது. இந்த முறை யார் என்று பார்க்காமல் போனை ஆன் பண்ணி விட்டாள்.


 
"கவி ..கவி .."என்று எதிர்முனையில் பதட்டமான ஆண் குரல் கேட்டது. அந்தக் குரல், சில மணி நேரங்களுக்கு முன் கேட்ட ராமின் குரல். ராம் தான் அழைத்தான்.

 

"என்னாச்சு ராம்? இந்த நேரத்தில். ஏன் பதட்டமா இருக்க?” 

 

"கவி... .அப்பா... அப்பாவுக்கு... ஹார்ட் அட்டாக்" என்று அவன் தேம்பலுடன் சொல்லி முடிப்பதற்குள்... 

 

"என்னடா சொல்ற? இப்ப நீ எங்க இருக்க? இங்கதான் இருக்கியா? -என்று போனில் அதிர்ச்சியும் அழுகையுமாகக் கேட்டுக்கொண்டே, அவசரமாக கவி அப்பா எஸ்.கே.எஸ்.ன் அறைக்கு ஓடினாள்.  அங்கே அப்பா நிம்மதியாக மெல்லிய குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

 

கவியின் நினைவு முழுவதும் அப்பாவை சுற்றியே இருந்தது. கெட்டவர். அவருக்கு தண்டனை தர வேண்டும் என்று நினைத்த இந்த அப்பாவுக்கு, ஏதோ ஆகி விட்டதோ என்று ஏன் இப்படி பதறவேண்டும்? குற்றவாளியாகவே இருந்தாலும் அவர்களிடமும் பாசத்தைத் தேடுவதுதான் மகள்களின் மனநிலை. பெண்களின் இந்த பலவீனம் தான் ஆண்களின் தவறுக்கு அனுசரணையாக  அமைந்து விடுகிறது. இந்த ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்கள் கவிக்கு வந்துவிட்டன. 


 
சுதாரிப்பு வந்து போனை மீண்டும் காதருகே வைத்து, ”ராம் என்னடா?” என்றாள்... அதே பதட்டத்துடன். 

 

"கவி, நான் இங்க எங்க வீட்லதான் இருக்கேன். உன் பெரியப்பாவுக்கு தான் ஹார்ட் அட்டாக்.” 

 

“டேய் என்னடா சொல்ற? பெரியப்பாவுக்கா? ஆஸ்பிடல்....?”

 

“அதுக்கு தேவையில்லாத படி  அவர், நம்மளை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டார் கவி" என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

 

"ராம்.... என்னடா சொல்ற? ஐயோ, இதை என்னாலயே தாங்கமுடியலையே... அப்பா எப்படி தாங்குவார்? சரி, அழாதே... இதோ இப்பவே அங்க வர்றோம்” என்ற கவியிடம் அடக்க முடியாமல் அழுகை வெடித்தது.

 

பேச்சு சத்தத்தில் விழித்துக்கொண்டார் எஸ்.கே.எஸ். அழுகையுடன் கவி நிற்பதைப் பார்த்துப் பதறியவர்...

 

“என்னம்மா கவி? யாருக்கு என்ன?” -அவரிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

 

"அப்பா,  பெரியப்பா.. பெரியப்பா நம்மளை விட்டுட்டுப் போயிட்டாராம்  பா" என்று கதறினாள் கவி.

 

பதறி எழுந்து உட்கார்ந்த எஸ்.கே.எஸ். “அட ஈஸ்வரா...” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். “அண்ணா... அண்ணா... ”என்று தேம்ப ஆரம்பித்தார். 


 
அந்த வீடு ஒரே நிமிடத்த்தில் தீப்பிடித்த மாதிரி ஆனது. அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு எஸ்.கே.எஸ். முதல் ஆளாக கண்ணீருடன் கிளம்பிவிட்டார். கலங்கிய விழிகளுடன்  திலகா, அறைகளையெல்லாம் பூட்டிக்கொண்டு, கவியுடன் ராம் வீட்டுக்குக் கிளம்பினார்.

  

ராம் வீடு துக்கத்தில் மூழ்க ஆரம்பித்திருந்தது. விடிந்தால் பெருங்கூட்டம் கூடிவிடும். செய்தி இன்னும் வெளியே போகாததால் குடும்ப உறுப்பினர்களும் வேலையாட்களும் மட்டுமே அங்கே கண்ணீருடன் இருந்தனர்.

 

“ஏங்க.. என்னங்க.. இப்படி எல்லோரையும் விட்டுட்டுப் போயிட்டீங்களே....” -ராமின் அம்மா அழுது புரண்டுகொண்டிருந்தார்.  ராம் அப்பாவின் பக்கத்தில் நின்று கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தான்.

 

சென்ற வேகத்தில் அவன் தோளில் சாய்ந்துகொண்ட கவி அழுது கொண்டே "என்னாச்சு  ராம்"என்று கேட்டாள். 

 

"நல்லாதான் தூங்கினார். திடீட்ன்னு அப்பாவின் அறையில் சத்தம். என்னன்னு போய்ப் பார்த்தால் ஹார்ட் அட்டாக். நெஞ்சை பிடித்துக் கொண்டு வலியில் துடித்துக்கொண்டிருந்தார். நானும் பர்ஸ்ட் எய்டு மூலம் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன்... ”என்று கலங்கினான்.

 
 
ராம் சொல்லச்  சொல்ல  ராமின் கண்களையே கூர்ந்து பார்த்தாள். அவன் விழிகள் அவளிடம் ஏதோ ஒன்றைச் சொன்னது. நடக்க வேண்டிய காரியம் எல்லாம் நடந்து முடிந்தது.

 
 
ஒரு சோகத்திற்கு இன்னொரு சோகம் தீர்வா? இல்லை தள்ளிவைப்பா? என்பது கவிக்கு புரியவில்லை. தியாவின் மரண நினைவுகளுக்கு சிலமணி நேரம் திரையிட்டிருந்தது பெரியப்பாவின் மரணம்.

 

ராம் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில்... 

 

"ராம்,  என் கண்ணைப் பார்த்துச் சொல்லு. பெரியப்பாவுக்கு உண்மையில் ஹார்ட் அட்டாக் தானா? என்று கேட்டாள். 

 

" ஒரு டாக்டர் எனக்கு தெரியாதா கவி?” 

 

"அதை ஒத்துக்கிறேன். அட்டாக் இயற்கையா? செயற்கையா??” என்று நேரடியாக கேட்டதும்... ராம் மௌனமாக வேறெங்கோ பார்த்தான். 

 

"உண்மையை சொல்லு  ராம்" -என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.  மெதுவாக சட்டையில் இருந்து அவள் கை விரல்களை விடுவித்தவன்... 


 
"கவி ஒன்னைப் புரிஞ்சிக்க, செத்துப்போன தியா... தனக்கு தொல்லை கொடுத்த நிர்வாகின்னு சொன்னது நம்ம சித்தப்பாவை இல்லை. என் அப்பாவை.  அப்பாவையும் நிர்வாகின்னுதானே, எல்லாரும் சொல்றாங்க. யார் குற்றவாளின்னு தியா தெளிவுபடுத்தாததால்தான், நீ இவ்வளவு மன உளைச்சலுக்கும் எதையும் செய்யும் மன நிலைக்கும் ஆளாகி இருக்கே. அந்த ஸ்கூலைப் பொறுத்தவரை, ஆவணங்கள்ல கையெழுத்துப் போடும் அதிகாரம் உன் அப்பாவிடம் இருந்தது. அதேபோல் என் அப்பா, பள்ளியை நிர்வாகம் செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் என் அப்பாவையும் நிர்வாகின்னுதானே அழைப்பார்கள். என் அப்பாவின் அனைத்து அயோக்கியத்தனமும் எனக்கு தெரியும். அவர் ஆரம்பத்தில் இருந்தே சபலவாதிதான். மாணவிகளின் உயிர் போகும் அளவிற்கு அவர் காரணமாக ஆவார்ன்னு  எனக்குத் தெரியாது. தியா இறந்த பிறகுதான் அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிஞ்சிக்கிட்டேன். தியாவின் மரணத்துக்காக அவர் கொஞ்சம் கூட வருந்தாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் இருந்ததை பார்த்தப்பதான் எனக்கு, அவர் மேல் கோபம் அதிகமாச்சு. எப்படியாவது போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சி தண்டனை கொடுக்குன்னு நினைச்சேன். ஆனால் போலீஸும் உங்க அப்பாவை மட்டும்தான் சந்தேகப்பட்டுச்சு. பிறகு அவர் நிரபராதின்னு தெரிஞ்சி, அவரை விட்டுடுச்சி. 

 

போலீஸ் மட்டும் உடனடியா எங்க அப்பாவைக் கைது செய்திருந்தா, ஒரு சில மரணமும் இல்லாமப் போயிருக்கும். எல்லாரும் கைதாகி இருப்பாங்க. நீயும் உன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்திருப்ப.  ஆனா, வழக்கு வேறுவேறு பக்கம் திசை திரும்பியதால்தான், நீ களமிறங்கு படியா ஆச்சு. இதுக்கப்புறமும் எங்க அப்பாவை விட்டுவச்சிருந்தா, நீ அநியாயமா... பண்புமிக்க மனிதரான எங்க சித்தப்பாவை, அதான் உங்க அப்பாவின் கதையும் முடிய நீ காரணமா இருந்திருப்ப. அதனால்தான், இனியும் சும்மா இருக்கக் கூடாதுன்னுதான், இப்படியொரு முடிவை நான் எடுத்தேன்” என்று விரிவாக அவன் பேசப் பேசத் திகைத்து நின்றாள் கவி.

 

“கவி, உன் நியாய உணர்ச்சியை மதிக்கிறேன். வியக்கிறேன். பாராட்டறேன். அதே சமயம், நீ உயிருக்கு உயிரா நேசிக்கும் உன் அப்பாவையே, அவர் குற்றவாளியான்னு உறுதிப்படுத்திக்காமலே, அவரை அதிகபட்சமா தண்டிக்கனும்ன்னு நினைச்சது தப்புதான்.” என்றான் அழுத்தமாக.

 

கண்ணீர்ப் பெருக்கோடு அவனைக் கைகூப்பிக் கும்பிட்ட கவி.. “நான் அப்பாவை தவறா எடைப்போட்டுட்டேன். என் கண்ணை, தவறான மதிப்பீடு மறைச்சிடுச்சி. அதே சமயம் பெரியப்பா இப்படிப்பட்டவர்ன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கலை. அதுக்காக நீ ஏன்டா அவரை இப்படி செஞ்சே?” என்றாள்...  

 

“நான் அதை செய்யலைன்னா, எங்க சித்தப்பாவை நான் இழந்திருப்பேன். அதுக்குதான் எங்க அப்பாவை வாழ்விலிருந்து ஓய்வு பெறவச்சேன். அதன் மூலம் அவரால் இனியும் அத்துமீறல்கள் அரங்கேறுவதைத் தடுத்திட்டேன். மனசு கேட்கலைதான். என்னை மார்பிலும் தோளிலும் வைத்து தாலாட்டியவர்தான். ஆனால் அந்த மார்பும் தோளும் சுத்தமானதில்லைங்கிற போது, என் அத்தனைப் பெருமையும், அவர் மீதான அத்தனை மதிப்பும் கரைஞ்சி போயிடிச்சி. அதனால் அவர் தூங்கிக்க்கிட்டு இருக்கும் போது, வெறும் சிரஞ்சில்  காற்றை நிரப்பி அவர் நரம்புகள்ல செலுத்தினேன். அதனால் ஹார்ட் அட்டாக் வந்து அவர் போய்ட்டார். அது இயற்கை மரணம் என்றாகிவிட்டது. அப்பாவின் பாசம் ஒருபுறம் இருந்தாலும் தியாவின் அண்ணனாக மனதிற்கு ஒரு நிறைவு ஏற்பட்டிருக்கு கவி” என்று ராம் சொன்னதும் அழுது கொண்டே அவன் காலடியில் சரிந்தாள்.   நடந்தவற்றை திலகாவிடம் சொன்னாள் கவி.

 

*ஒரு மாதம் கழித்த நிலையில், அன்று காலை 8 மணிக்கு கவிநிலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன் ஒரு கார் வந்து நின்றது. சினிமாவில் காட்டுவது போல கார், கதவைத் திறந்து கொண்டு ஒரு கால் தரையைத் தொட்டது. கேமராவை முழு ஆங்கிளில் வைக்கும்போது காட்டன் சாரி, கொண்டை, கூலிங்கிளாஸ் சகிதம் கெத்தாக மரண மாஸாக திலகா அதிலிருந்து இறங்கினார். பள்ளி நேரத்தில் மைதானத்தில் ஒரு மாணவன் கூட விளையாடவில்லை. மதில் சுவர் ஓரங்களில் மூலிகை தோட்டம் அமைத்துக் கொண்டிருந்தனர்.  ஆசிரியர்கள் அதற்கு உதவி செய்து கொண்டிருந்தனர். கழிவறைகளில் சில ஆசிரியர்கள் கழிவறை சுத்தமாக இருக்கிறதா? என மேற்பார்வை இட்டனர். மாணவர்களுக்கு குடிநீர் சுத்தமாக கிடைக்கிறதா என சில ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை பராமரித்து கொண்டிருந்தனர்.  திலகா இதையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.  திலகாவின் மனம் மட்டும் ராமிற்கு  நன்றி சொல்லியது. ராம்  தான் எஸ்.கே.எஸ்.சிடம் ராம்தான் சண்டை போட்டு பள்ளி நிர்வாகத்தை திலகா பெயரில் மாற்றினான். திலகாவிற்கும் பள்ளியைத் திறம்பட நிர்வாகம் செய்வதில் பெருமிதமாக இருந்தது. 

 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களைச் சந்திப்பதற்காக ஒரு தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4 மணிக்கு மேலும் அந்த அறையில் வந்து ஆசிரியர்களை சந்திக்கலாம் என்று பெற்றோர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. திலகாவின் அறை வாசலில் "மாணவர் மனசு" என்ற பெட்டி இருந்தது. அதில் மாணவர்கள் தங்கள் குறைகளை எழுதிப் போடலாம். அந்தப் பெட்டி வாரத்திற்கு ஒரு முறை "பெற்றோர் ஆசிரியர் குழு"வின் முன்னிலையில் திறக்கப்பட்டு மாணவர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களின் வருமான சான்றிதழின் அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.


 
ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சம்பளம் வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தனர். மாணவிகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், பள்ளியே பாதுகாப்பான சோலைவனமாக மாறியிருந்தது. கவி பள்ளி பேருந்தில்  வந்து இறங்கினாள். பேருந்தையும்  மாணவர்களையும் கையில் விசிலுடன் ஒழுங்கப்படுத்திக் கொண்டிருந்தார் பி.இ.டி.டீச்சர் சாதனா. அவர் அருகில் சென்ற கவி" டீச்சர் இன்று நாம் முதல் முதல் சந்தித்த ஹோட்டலில் சந்திக்கலாமா?" என் தோழிகளுக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன். அப்பறம் நீங்க பர்தா போட்டுகிட்டு வர வேண்டிய அவசியம் இல்லீங்க, நாம  தான் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டோமே"?என்று கவி சொன்னதும், சிரித்து விட்டு  மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் கவனத்துடன் இருந்தார் சாதனா. 

 

கவியின் நீட் தேர்வு லட்சியம் பல டாக்டர்களை  உருவாக்க வேண்டும் என்று மாறி இருந்தது. அதனால் அந்த பள்ளியிலேயே மீண்டும் மாணவியாக பள்ளிக்கு வந்தாள். நகரத்தில் மிகப்பெரிய கல்லூரியைக் கட்டவேண்டும். தான் ஒரு சிறந்த கல்வியாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பள்ளியில் கவி ஏற்படுத்திய இந்த மாற்றங்கள் கல்லூரியிலும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. 


 
அன்று மாலை, பள்ளியின் ஆண்டுவிழா கொரோனா நெருக்கடி காரணமாக, அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடந்தது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு என பலவும் முடிந்த நிலையில், நிறைவாகப் பேச எழுந்தார் பள்ளியின் புதிய தாளாளரான திலகா. பார்வையாளர் வரிசையில் கவியின் அருகே அமர்ந்திருந்தார் எஸ்.கே.எஸ். கவியின் தோழி ஷாலு உள்ளிட்டவர்களும் தியாவின் பெற்றோரும் கூட அந்த  நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பளீரிட்டது. தன் கணவரை, மெல்லிய புன்னகையோடு பார்த்துவிட்டு பேசத் தொடங்கிய  திலகா, 

 

"அனைவருக்கும் என் புன்னகை வணக்கம். நான் அதிகம் பேச விரும்பவில்லை. சிறந்த பேச்சு என்பது, உயர்ந்த செயல் என்பது என் எண்ணம். விவசாயிகளுக்குத் தெரிஞ்சிருக்கலாம். சைனீஸ் மூங்கில்ன்னு ஒரு வகை மூங்கில் இருக்கு. அது  விதை போட்டவுடன் அது முளை விடாது. வளர்வதற்கு நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதுவும் மாதக்கணக்கில் அல்ல; ஆண்டுக் கணக்கில். அது தளிர் விட்டு பூமிக்கு மேல் எட்டிப் பார்க்கவே 5 ஆண்டுகள் வரை ஆகும். அதுவரையிலும் பொறுமையாக விவசாயி, நிலத்தில் நீர் தெளிக்கவேண்டும். ஐந்து ஆண்டுகள் கழித்து அது பசுமையாக வளர ஆரம்பிக்கும். ஆறு வாரங்களில் அது 60 அடிவரை வளர்ந்துவிடும். ஐந்து ஆண்டுகள் அந்த விதையானது தனது வேரை பூமிக்கடியில் நன்றாக திடமாக வளர்த்துக்கொள்ளும். அந்த வேர்கள்தான் அதன் பலம். அது தாங்கிப் பிடிப்பதில் தான், அது குறுகிய காலத்தில் வேகமாக வளர்கிறது. அது போலத்தான் மாணவப் பருவம். 15 வயதிலிருந்து 20 வயது வரை அவர்கள் எதிர்காலத்திற்கான வேர்களை நன்றாக பரவலாக ஊன்றவேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கடமை ஆசிரியர்களுக்கானது." என்று திலகா பேசப் பேச, அனைவரும் கைதட்டினர்.  

 

அம்மாவா? இப்படி எல்லாம் கம்பீரமாகப் பேசுகிறாள்? கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, கவி தன் அம்மாவைப் பெருமிதத்துடன் பார்த்தாள். அருகிலிருந்த எஸ்.கே.எஸ்., அதே பெருமிதத்துடன் தன் தோளில் சாய்ந்திருந்த கவியின் தலையை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தார்.  

 

(நிறைவு) 

 

முந்தைய பகுதி : சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #49

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #49

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

marana muhurtham part 49

 

கன்னத்தில் விழுந்த அறை, ஆவேசம் கொண்ட புலி ஒன்றின் அறைபோல் இருந்தது கவிக்கு.

 

கவியின் அம்மா அப்படி ஒன்றும் பெரிய பலசாலி அல்ல. மென்மையானவர் தான். அவர்களிடம் எப்படி இப்படி ஒரு வலிமை? கோபம்  அப்படி ஒரு வலிமையைக் கொடுத்ததா..? 

 

சில நிமிடங்கள் அந்த இடத்தில் காற்றில்லா ஏதோ ஒரு கிரகத்திற்குச் சென்றது போன்ற உணர்வுடன் ஒருவித மௌனம் நிலவியது. கவி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்கள் சிவக்க கண்ணீருடன் செய்வதறியாது தவித்த மனநிலையில் நிலைதடுமாறி நின்றுகொண்டிருந்தாள். மதுரையை எரித்தும்,  ஆவேசம் அடங்காத கண்ணகி மாதிரி காட்சி தந்தார் அம்மா திலகா.

 

ராம், கவியின் அருகில் சென்று அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான். அவ்வளவுதான் திறந்துவிட்ட வீராணம் ஏரி போல, அழுகை வெள்ளமாய்ப் பொங்கியது. "விடு கவி,  யார் அம்மா தானே அடிச்சாங்க" என்று ஆறுதலாகத் தலை கோதினான்.

"அளவுக்கு அதிகமான நம்பிக்கையாலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின்மையாலும், தான் சில தவறுகள் நடைபெறுகின்றன" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராம். 

 

பொங்கி அடங்கிய பாலென திலகா மகளின் அருகில் சென்று அணைத்துக் கொண்டு "சாரிடா என் செல்லம்" என்று கொஞ்சினார். விடுபட்ட கம்பிச்சுருள் போல விருட்டென்று விலகினாள் கவி.

"அம்மா... உனக்கு வேண்டுமானால் அப்பா நல்லவராக இருக்கலாம். ஆனால் பள்ளி மாணவிகளிடம் கொடூரனாக நடந்து கொண்டிருக்கிறார்". 

 

அவர் வாயிலிருந்து கூரிய அம்பாய் சொற்கள் வெளியேறின. " வாயை மூடு. என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியும்.   நிலவுக்குக் கூட வளர்பிறை தேய்பிறைன்னு இருக்கு. உங்க அப்பாவைப் பொறுத்தவரை அவர் கருணை மனதுக்கு கொஞ்சமும் தேய்மானம் இருக்காது. அவர் நம் குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பை, திருமணம் ஆன முதல் நாள் எப்படி காட்டினாரோ, அப்படிதான் இந்த நிமிடம் வரை காட்டிக்கிட்டு இருக்கார். பெண் குழந்தைகளுக்கு நடக்குற கொடுமைகள் பத்திக் கேள்விப்படும் போதெல்லாம், அவர் தனிமையில் கவலைப்பட்டு கண்ணீர் சிந்துறது எனக்குத் தான் தெரியும். ஏன் தியாவுக்காக அவர் எத்தனை வேளை சாப்பிடாமல் இருந்தாருன்னு உனக்குத் தெரியுமா? " என்று கணவரின்  அன்பில் உருகினார்.

"பெண்களின் மிகப் பெரிய பலவீனமே தன் கணவன் ராமன் என்று நம்புவதுதான்" என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டாள் கவி. 

"அப்பா.. தவறானவர் என்ற உறுதியில் இருக்கிறாயா கவி?”. "அம்மா, அப்பா தவறு செய்யமாட்டார் என்ற உறுதியில் நீங்க இருக்கிறீர்கள் தானே...?" 

"அப்பாவே வந்து  நான் தவறானவன்" என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்” என்று அழுத்தமாகச் சொன்னார்  திலகா.

"அம்மா ஒரு பொண்ணு இந்த விசயத்தில் பொய் சொல்வாளா..?"

" சரி.. உன் வாதப்படி அப்பா தான் தவறு செய்தவர்ன்னா, அதற்கு என்ன ஆதாரம்?"
 

"தியா.. மனநல மருத்துவரிடம் பேசி இருக்காளே..மா.  பள்ளியின் நிர்வாகியும் தவறாக நடக்கிறார்ன்னு தெளிவாகச் சொல்லி இருக்காளே... தியாவுக்கு அம்மா ஸ்தானத்தில் இருக்கிற நீ, கொஞ்சம் யோசித்துப் பாரும் மா.  உன் கையால உணவு ஊட்டிய மகளான நான் பொய் சொல்வேனா.?” கவி பேசப் பேச அம்மா அமைதியானார்.  

"அம்மா என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டால் சும்மா இருப்பியா..? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்க" என்று மகள் பாசத்தைக் கையில் எடுத்தாள் கவி.

"வெட்டி வகுந்திடுவேன். அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை" என்றார் ஆவேசமாக திலகா.

“வாய்நிறைய உன்னை அம்மா என்றுதானே மா தியா கூப்பிடுவா. வாழ வேண்டிய அந்த ஜீவன் அஸ்தியா கரையும் போது உன் மனசு கரையலையா” என்று ஆலம் விழுதெனப் பெண்மையின் தாய்மையை பிடித்துக் உலுக்கிக்கொண்டாள்  கவி.

"மனசு ரொம்ப வலிக்குதுதாம்மா. இருந்தாலும் அப்பாவை என்ன பண்றது?

"பெண்களின் இந்த குணம்தான் ஆண்களை தப்பு பண்ண வைக்கிது. எத்தனையோ பாலியல் வன்கொடுமைகளை மீடியாக்களில் பாக்கறோம். ஒரு இடத்தில் கூட அந்த தப்பான ஆண் மீது அவன் குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் கோபப்பட்டதாகவும், எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியலையே.?  ஒரு பெண் தெருவில் இறங்கி அந்த ஆணை தண்டித்திருந்தால் மற்ற ஆண்களுக்கும் பயம் இருக்கும் இல்லையா?" என்று ஆவேசமாகப் பேசினாள் கவி. 

 

கவி சொன்னதும் திலகாவின் மனதிற்குள் இருந்த பெண்மையின் வீரம் விழித்தெழுந்தது. 

“என்ன பண்ணலாம்னு சொல்லு கவி, நீ என்ன சொன்னாலும் செய்றேன்." பொறுப்பை கவியிடமே ஒப்படைத்தாள். 

"அம்மா.. தியா மரணத்தில் மற்ற இருவருக்கும் என்ன தண்டனை கிடைத்ததோ, அதே தண்டனை தான் அப்பாவிற்கும் கிடைக்கணும்" என்று கவி மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னாள்.

 

இதைக் கேட்டதும் ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் திலகா.

" என்னால் இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியலை. உங்களுக்கு இடையில் நடக்கும் இந்தப் போராட்டம் என் மனதில் சம்மட்டியால் அடிக்கிது.  நான் கிளம்புறேன்" என்று சொன்னபடி, வேகமாக அங்கிருந்து வெளியேறினான் ராம்.

 

திலகாவும் கவியும் அழுது கொண்டே இருந்தனர். 'பெண்மை வரமா..? சாபமா..? கருவறையில் கடவுளாக வணங்கும் பெண்மைதான், கயவர்களால் சூறையாடப்பட்டு மரணம் வரை கொண்டுசெல்கிறது’ என்று மனதிற்குள் கலங்கினாள் கவி.

 

இந்த உணர்வுப் போராட்டங்களுக்கு இடையில், ரெண்டு நாளில் இது பற்றி முடிவெடுக்கலாம் என்ற தீர்மானத்துடன், படுக்கைக்குச் சென்றார்கள் கவியும் திலகாவும். 

 

இதையெல்லாம் அறியாத  கவியின் அப்பா எஸ்.கே.எஸ்., ரெண்டு பெக் ஒயின் சாப்பிட்டுவிட்டு, இளையராஜாவின் ரிதத்தை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு, படுக்கையில் சாய்ந்துகொண்டு, லெபனான் கவிஞன் கிப்ரானின் ‘கண்ணீரும் புன்னகையும்’ நூலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.
ஒரு பெரிய மரணச் செய்தியுடன் மறுநாள் விடியப்போகிறது என்பதை, மகள் அறையிலேயே உறங்கத் தொடங்கிய திலகா அப்போது அறிந்திருக்கவில்லை.

 

( அடுத்த பகுதியுடன் நிறைவுறும் )

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #48